கெட்டவர் நடுவில் நல்லவன்!

ஆன்மிக கட்டுரைகள்

e0ae95e0af86e0ae9fe0af8de0ae9fe0aeb5e0aeb0e0af8d e0aea8e0ae9fe0af81e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aea8e0aeb2e0af8de0aeb2e0aeb5e0aea9e0af8d

krishnar
krishnar

பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் மகா பாரதப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 18 நாட்கள் நடைபெற்ற இந்தப் போரின் 14-ம் நாள் போர் தொடங்க இருந்தது. அதற்காக பஞ்ச பாண்டவர்கள் ஐவரும், போர்க்களம் புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.

அர்ச்சுனனுக்கு தேரோட்டியாக இருந்த கிருஷ்ணரும் அங்கே இருந்தார். அவரிடம் திரௌபதி ஒரு கேள்வியைக் கேட்டாள்.

“கிருஷ்ணா நீ அனைத்தும் அறிந்தவன். உலகில் நடக்கும் செயல்களை மவுனமாக பார்த்துக் கொண்டிருப்பவன். இந்தப் போரில் வெற்றி பெறுபவனும் நீ.. வீழ்பவனும் நீயே.. எல்லாம் அறிந்த உன்னிடம் ஒன்றை கேட்க வேண்டும். அது யாதெனில் இன்றைய போரில் வெற்றி யார் பக்கம் இருக்கும்?”

அதைக் கேட்டு புன்னகைத்த கிருஷ்ணன், “எல்லாவற்றையும் முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும் என்பதில் உனக்கு என்ன அவ்வளவு ஆர்வம் திரௌபதி? இன்றையப் போரில் வெற்றி தோல்வி என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் ஒன்றை மட்டும் உனக்கு சொல்வேன். இன்றையப் போரில் இந்த உலகத்திலேயே மிகவும் நல்லவன் ஒருவன் கொல்லப்படுவான்” என்றார்.

கிருஷ்ணன் அவ்வாறு சொன்னதும், பஞ்ச பாண்டவர்களில் அர்ச்சுனன், பீமன், நகுலன், சகாதேவன் ஆகிய நால்வரும், தங்கள் மூத்த சகோதரனான தர்மனை பார்த்தனர். அவர்களின் முகத்தில் சோகம் குடிகொண்டது. திரௌபதியின் கண்களும் கலங்கிப் போய், என்ன சொல்வதென்று அறியாமல் அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள்.

அனைவருக்கும் தெரியும் இந்த உலகத்தில் தர்மன் தான் மிகவும் நல்லவன் என்று பெயர் பெற்றவன். அதனால்தான் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்து போனார்கள். பின்னர் ஒருவாறாக சமாளித்தபடி பாண்டவர்கள் ஐவரும் போர்க்களம் புகுந்தனர்.

போர்க்களத்தில் துரியோதனனையும், துச்சாதனனையும் கொல்ல வேண்டும் என்பதே பீமனின் குறிக்கோளாக இருந்தது. அதனால் அவன் தன்னுடைய தேரை, அவர்கள் இருவரையும் நோக்கி செலுத்தினான். அப்போது அவனது தேருக்கு முன்பாக வந்து நின்றான், விகர்ணன். இவன், துரியோதனனின் தம்பிகளில் ஒருவன். அவனைக் கண்டதும், பீமனின் முகத்தில் அன்பு படர்ந்தது.

“என்ன பீமா.. அவ்வளவு அவசரமாக எங்கே செல்கிறாய்.. உன்னுடன் போரிடத்தான் நான் வந்துள்ளேன்.”

“விகர்ணா.. என் வழியை விடு நான் உன்னை கொல்வதற்காக களத்தில் இறங்கவில்லை. உன் இரு அண்ணன்களான துரியோதனன், துச்சாதனன் இருவரையும் கொல்ல வந்திருக்கிறேன்.”

“ஏன் பீமா என்னை வென்று விட்டு அவர்களை வெல்ல இயலாதா? இல்லை என்னை வெல்லவே முடியாது என்று எண்ணுகிறாயா?”

விகர்ணனின் அந்த பேச்சைக் கேட்டதும் பீமன் வெகுண்டான். “விகர்ணா.. உன்னை கொல்ல என் மனம் இடம் கொடுக்கவில்லை. அது உன் மீதான அச்சம் அல்ல.. அன்பு. உன்னை நான் கொல்ல நினைத்தாலும், என் கதாயுதமே என்னை தடுத்துவிடுமோ என்ற பயம்தான் எனக்கு. ஏனெனில் அன்று திரௌபதியை துகிலுரித்தபோது, நீ திரௌபதிக்கு ஆதரவாக பேசியதை நான் மட்டுமின்றி என் கதையும் அல்லவா கேட்டுக் கொண்டிருந்தது. அதனால் தான் உன்னை கொல்ல என்மனம் மறுக்கிறது பிழைத்துப்போ.. இல்லையெனில் என்னிடம் இன்னொரு யோசனையும் உள்ளது” என்றான்.

“அது என்ன மற்றொரு யோசனை” என்று கேட்டான், விகர்ணன்.

“நீ எங்களுடன் சேர்ந்து விடு. பாண்டவர்கள் ஐவருடன் உன்னையும் ஆறாவதாக சேர்க்கிறோம். போருக்குப் பின் உனக்கும் அரசு வழங்கி முடிசூட்டுகிறோம். திரௌபதியின் மானம் காக்க குரல் கொடுத்த உனக்கு முடிசூட்டி பார்க்க நினைக்கிறது என் மனம்.”

விகர்ணன் நகைத்தான். “பீமா.. நான் அறவழியில் நிற்பவன். அன்று திரௌபதிக்கு நிகழ்ந்த அநீதி. பெண்ணின் மானம் சூறையாடப்படும் நேரத்தில் அதனை எதிர்த்து குரல் கொடுப்பது தான் அறம். அதைத்தான் அன்று செய்தேன். இன்று யார் தரப்பில் நியாயம் இருந்தாலும், நான் சார்ந்திருக்கும் என் அண்ணனுக்காக போரிடுவதே அறம். அதைத்தான் இன்றும் செய்கிறேன். மகுட ஆசைக்காக என் அண்ணனை விட்டு விலகி விடுவேன் என்று நினைக்காதே.. என்னைத் தாண்டி தான் நீ துரியோதனனை அடைய முடியும். உன்னால் முடிந்தால் உன்கதாயுதத்தை என்மீது பிரயோகித்துப்பார்” என்று சவால் விட்டான்.

அந்த துடுக்குப் பேச்சு பீமனை ஆவேசப் படுத்தியது. தேரை விட்டு இறங்கி, கதாயுதம் கொண்டு விகர்ணனுடன் போரிட்டான். அந்தப் போர் அவ்வளவு எளிதாக முடியவில்லை. விகர்ணனை அழிப்பது, தான் நினைத்தது போல் சுலபம் இல்லை என்பதை, அவனுடன் மோதிய பிறகே பீமன் அறிந்தான். ஒருமாபெரும் வீரனுடன் போரிடுவதை அவன் மனம் உணர்ந்தது. அறத்தின் வழி வாழ்பவர்களை வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்லவே.

ஒரு கட்டத்தில் பீமன் வீசிய கதாயுதம், விகர்ணனின் நெஞ்சை தாக்கியது. அதை சிரித்த முகத்தோடு வாங்கிக்கொண்ட விகர்ணன் தரையில் சாய்ந்து இறந்தான். அதைப் பார்த்து பீமனின் மனம், இனம் புரியாத சோகத்தில் ஆழ்ந்தது.

சூரிய அஸ்தமனம் நிகழ்ந்ததும், போர் நிறுத்தப்பட்டது. தர்மனுக்கு என்ன ஆனதோ என்று கவலையில் ஆழ்ந்திருந்த திரௌபதி, பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் நலமுடன் வருவதைக் கண்டு ஆனந்தம் அடைந்தாள்.

இப்போது அவளுக்குள் பெரும் சந்தேகம். ‘இன்று எல்லாரைவிடவும் நல்லவன் ஒருவன் இறப்பான் என்று கிருஷ்ணர் சொன்னாரே.. என் கணவர் நலமுடன் தானே இருக்கிறார்’ என்று நினைத்தவள், தன் சந்தேகத்தை கிருஷ்ணரிடமே கேட்டாள்.

கண்ணன் புன்னகைத்தபடியே கூறினார். “திரௌபதி நல்லவர்களுக்கு மத்தியில் நல்லவர்களாக வாழ்வது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல.. ஆனால் விகர்ணன் கெட்டவர்களிடையே நல்லவனாக இருந்தவன். உன் மானத்தை காப்பதற்காக எதிர் அணியில் இருந்து குரல் கொடுத்தவன். இப்போது தன் அண்ணன் கெட்டவனே ஆனாலும், அவனுக்காக போரிட்டு தன் உயிரையே கொடுத்திருக்கிறான்..”

“அரச பதவி அளிப்பதாக, பீமன் காட்டிய ஆசை கூட அவன் மனதை மாற்றமுடியவில்லை. நான் எங்கு இருக்கிறேனோ அந்த இடத்தில் தர்மம் இருக்கும், நியாயம் இருக்கும் என்பதை விகர்ணன் அறிவான். ஆனாலும் கூட அறத்திற்காக தன் அண்ணனுக்காக போரிட்டான். தான் இறந்துபோவோம் என்று தெரிந்து தான் அவன் போர்க்களத்திற்கே வந்தான். இப்போது சொல், கெட்டவர்களிடையே நல்லவனாக இருந்த, விகர்ணன்தானே உலகத்திலேயே எல்லாரையும் விட நல்லவன்”

அதுவரை அமைதியாக இருந்த தர்மன், “ஆமாம்.. விகர்ணன் தான் எல்லோரிலும் நல்லவன். என்னை அனைவரும் நல்லவன் என்கிறார்கள். அது உண்மையோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் விகர்ணன் என்னை விடவும் நல்லவன் என்பது மட்டும் உண்மை. இந்தப் போரால் அந்த உத்தமனையும் கொல்ல நேர்ந்து விட்டதே..” என்றான்.

பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் விகர்ணனுக்காக மனம் கலங்கி நின்றனர்.

கெட்டவர் நடுவில் நல்லவன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply