இறைவன் நம்மை விரும்ப வேண்டும் என்றால்..?

ஆன்மிக கட்டுரைகள்

vali vatham
vali vatham
vali vatham

ராம பாணத்தால் தாக்கப்பட்டு, வெட்டுண்ட மரம் போல் கீழே விழுந்தான் வாலி. ராமன் தான் தன்னை மறைந்திருந்து தாக்கியுள்ளான் என்பதை உணர்ந்த வாலி, ராமனைப் பலவாறு ஏசினான். அத்துடன் ராமனிடம் ஆறு கேள்விகளைக் கேட்டான் வாலி:

 1. உனது நாட்டுக்குள் வந்து நான் என்ன தவறு செய்தேன்?
 2. உனக்கும் எனக்கும் ஏதாவது முன் விரோதம் உண்டா:?
 3. உனக்கும் எனக்கும் முன் அறிமுகம் உண்டா?
 4. காட்டில் வாழும் மிருகத்தை நாட்டில் வாழும் மனிதன் எதற்காகத் தேடி வந்து தாக்க வேண்டும்?
 5. ஒருவேளை நீ வேட்டையாட நினைத்திருந்தாலும், எதற்காக ஒரு குரங்கை வேட்டையாட வேண்டும்?
 6. ஏன் மறைந்திருந்து என்னைத் தாக்க வேண்டும்?

இவற்றுள் முதல் ஐந்து கேள்விகளுக்கு ராமன் விடையளித்தான்:

 1. மலை, காடு, சிறுகாடு, குறுநிலங்கள் ஆகிய அனைத்தும் அயோத்திப் பேரரசுக்கு உட்பட்டவையே. எனவே உன்னைத் தண்டிக்க எனக்கு அதிகாரம் உண்டு.
 2. நான் எப்போது சுக்ரீவனோடு அக்னி சாட்சி யாக நட்பு பூண்டேனோ, அப்போதே அவனது சுக துக்கங்கள், சொத்துக்கள் அனைத்திலும் எனக்கும் பங்கு உண்டு. என் நண்பனது ராஜ்ஜியத்தையும் மனைவியையும் அபகரித்த நீ எனக்கும் விரோதியே ஆவாய்.
 3. சுக்ரீவனிடமிருந்து ராஜ்ஜியத்தையும் அவனது மனைவியையும் தட்டிப் பறித்துப் பெருங்குற்றம் செய்திருக்கிறாய். அக்குற்றத்துக்குத் தண்டனையாகவே இப்போது நான் உன்னைத் தாக்கினேன். தவறிழைத்தவனைத் தண்டிக்கும் போது, முன்பின் அறிமுகம் இருக்க வேண்டிய அவசியமில்லை.
 4. நீ நாட்டில் இருந்தாலும் சரி, காட்டில் இருந்தாலும் சரி, நீ மனிதனாக இருந்தாலும் சரி, மிருகமாக இருந்தாலும் சரி, அயோத்திப் பேரரசுக்கு உட்பட்ட எந்தப் பகுதியில் வாழும் யார் தவறு செய்தாலும், அவரைத் தேடிச் சென்று தண்டித்தல் என் கடமையாகும்.
 5. குரங்கை வேட்டையாடுவதால் எனக்குப் பயனில்லை என்றாலும், மன்னர்களான நாங்கள் பொழுது போக்குக்காக வேட்டையாடுவது உண்டு. அதற்குப் பயன் இருக்க வேண்டிய அவசியமில்லை.

இப்படி ஐந்து கேள்விகளுக்கு விடையளித்த ராமன், ஆறாவது கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. ஆனால் ராமனின் மனக்கருத்தை நன்கு அறிந்த லட்சுமணன் அந்தக் கேள்விக்கு விடையளித்தான்:

 1. “வாலி! அன்று உனது தம்பியான சுக்ரீவன் உன் கால்களில் விழுந்து சரணாகதி செய்த போது, அவனை மன்னித்தாயா? இல்லையே! கொல்லப் பார்த்தாய்! காலில் விழுந்து சரணடைந்தவனைக் காக்கத் தெரியாத உனக்கு, தன்னிடம் சரணாகதி செய்யும் வாய்ப்பைக் கூடத் தரக்கூடாது என நினைத்தான் ராமன். எங்கே ராமன் உன் எதிரில் வந்து உன்னைத் தாக்க முயன்றால் நீ சரணாகதி செய்து விடுவாயோ என்று கருதியே மறைந்திருந்து உன்னைத் தாக்கினான்!” என்றான் லட்சுமணன்.

இறைவன் தன் மீது கருணை காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒவ்வொரு மனிதனும், தனது சக மனிதர்களிடம் கருணை காட்ட வேண்டும். அப்படி சக மனிதன் மேல் கருணை காட்டாத ஒருவனுக்கு இறைவனிடம் கருணையை எதிர்பார்க்க அருகதை இல்லை. இந்த உயர்ந்த கருத்து லட்சுமணனின் பதிலில் பொதிந்திருப்பதைக் காணலாம்.

சரணடைந்தவனைக் காக்க வேண்டும் என்ற தருமத்திலிருந்து விலகிய தனக்கு ராமன் தந்த தண்டனை சரி என்று வாலியும் ஏற்றுக் கொண்டான்.

வாலியைப் போல் தருமநெறியலிருந்து விலகினோரை ‘சச’ என்று குறிப்பிடுவார்கள். ‘பிந்து’ என்றால் விரும்பாதவன் என்று பொருள். தரும நெறியிலிருந்து விலகியவர்களை (சச) விரும்பாதவராகத் (பிந்து) திருமால் திகழ்வதால் ‘சசபிந்து:’ என்றழைக்கப்படுகிறார்.

‘சசபிந்து:’ என்றால் அறவழியிலிருந்து விலகியவர்களை விரும்பாதவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 286-வது திருநாமம். “சசபிந்தவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் தருமத்திலிருந்து விலகாதபடி திருமால் காத்தருள்வார்.

இறைவன் நம்மை விரும்ப வேண்டும் என்றால்..? முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *