சங்கர ஜெயந்தி: ஹிந்து தர்மம் தழைக்க வந்த ஆதிகுரு!

ஆன்மிக கட்டுரைகள் விழாக்கள் விசேஷங்கள்

adhi sankarar
adhi sankarar

இன்று சங்கர ஜெயந்தி. ஆதிசங்கரர் ஜெயந்தியானது வைசாக மாதம் சுக்ல பட்ச பஞ்சமியன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்து தர்மம் தழைக்கச் செய்த மாபெரும் ஞானி ஜகத்குரு ஆதிசங்கரர். எப்போதும் நன்மையே செய்பவர்; சங்கரர் என்றால் (சம்+ கரன்) நல்லதையும், இன்பத்தையும் செய்பவர் என்று அர்த்தமாகும். எப்போதும் இன்பத்தையே தருபவர் என்ற பொருள்படும் சங்கரர் என்ற திருப்பெயரினை ஏற்று, ஶ்ரீசிவகுரு – ஆர்யாம்பா தம்பதியினருக்கு, கேரள மாநிலம் காலடியில் தோன்றியவர் ஆதிசங்கரர். பால்ய பருவத்திலேயே சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்த ஞானி. காலடியில் தோன்றிய சங்கரர், தம் காலடிகளாலே பாரத தேசத்தை மூன்று முறை வலம் வந்து புனிதப்படுத்தினார். அவருடைய அவதார காலத்தில் எண்ணற்ற மதங்கள் மேகங்களைப்போல் தோன்றி, இந்து தர்மம் என்னும் சூரியனை மறைத்திருந்தன.

சங்கரரின் காலத்தில் பௌத்தம் கோலோச்சியது. சங்கரரின் அத்வைதத்தையே ‘மாயாவாத பௌத்தம்’ என்றனர் பௌத்தர். ஆனால், சங்கரர் அவர்களையெல்லாம் வாதத்தில் வென்றார்.

மேகங்களை விலக்கி, இந்து தர்மம் என்னும் சூரியனைச் சுடர்விட்டுப் பிரகாசிக்கச் செய்த பெருமை ஆதிசங்கரரையே சாரும். அற்புதமான அத்வைதத் தத்துவத்தை நிலைநாட்டிய ஜகத்குரு, இந்து தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்களின் மனப்பான்மைக்கு ஏற்ப, காணாபத்யம், சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், சௌரம் என்று ஷண்மதம் என்னும் ஆறுவகையான வழிபாட்டு முறைகளையும் வகுத்துக் கொடுத்தார்.

சிவபெருமானின் அம்சம் என்று போற்றப் பெறும் ஆதிசங்கரர், பத்ரி, துவாரகா, சிருங்கேரி, பூரி, ஆகிய இடங்களில் ஶ்ரீமடங்களை நிறுவினார். இந்த மண்ணுலகில் அவர் பூத உடலுடன் இருந்தது 32 ஆண்டுகள்தான் என்றாலும், அவருடைய தத்துவங்கள் என்றைக்கும் மறையாமல் உயிர்ப்புடன் திகழ்கின்றன. இந்து தர்மத்தை நிலைநிறுத்தும் வண்ணம், அவர் எண்ணற்ற நூல்களை இயற்றி இருப்பதுடன், சமண மதத்தைச் சார்ந்த அரசர் ஒருவர் எழுதிய அற்புதமான ஒரு நூலை, அழிவில் இருந்து காப்பாற்றித் தந்துள்ளார். அதுவே இந்தியாவின் முதல் அகராதி என்று சொல்லப்படும் அமரகோசம்.

சமஸ்கிருத மொழியின் அழியாத நூல் அமரகோசம் என்று போற்றப்படுகிறது. இந்த நூலை இயற்றியவர் அமரசிம்மன் என்ற அரசர். சமண மதத்தில் நம்பிக்கை கொண்டிருந்த அமரசிம்மன், இந்து தர்ம தத்துவங்களையும், கருத்துகளையும் ஏளனம் செய்து வந்தார். அவருக்கு இந்து தர்ம தத்துவங்களையும், மகிமையையும் உணர்த்த விரும்பிய ஆதிசங்கரர், அமரசிம்மன் வாதத்துக்கு அழைத்தபோது ஒப்புக்கொண்டார். இருவரும் வாதம் செய்யத் தொடங்கினர்.

sankarar 5
sankarar 5

வாதம் தொடங்குவதற்கு முன்பு அமரசிம்மன் ஒரு நிபந்தனை விதித்தார். அதன்படி அமரசிம்மனுக்கும் ஆதிசங்கரருக்கும் இடையில் ஒரு திரை கட்டப்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் வாதம் தொடங்கினர். ஒரே ஒரு பரம்பொருளே எல்லா ரூபமாகவும் இருந்து மாயையை உருவாக்கி மனிதர்களை மயக்கி வருகிறது என்று ஆதிசங்கரர் ஆணித்தரமாக வாதித்தார். எனினும் அமரசிம்மனின் வாதங்கள் ஆதிசங்கரரை ஆச்சர்யம் கொள்ளச் செய்தது. உறுதியான பல கருத்துக்கள் அமரசிம்மனை சபையில் சிறந்த அறிவாளியாக காட்டியது. ஒருகணம் திகைப்படைந்த ஆதிசங்கரர், மனதில் சிவனை தியானித்தார். நடப்பது அவருக்குப் புரிந்தது.

சங்கரரை வெல்லவே முடியாது என்று கணித்த அமரசிம்மன், ஜைன அரசராக இருந்தபோதும், அன்னை கலைவாணியை தொழுது தனக்கு பதிலாக வாதம் செய்ய வரும்படி வேண்டிக்கொண்டார். அன்னையும் அவரது பக்திக்கு இணங்கி சம்மதித்தாள். அமரசிம்மன் அருகே வைக்கப்பட்டு இருந்த கலசத்தில் கலைவாணியை ஆவாகனம் செய்து வைத்திருந்தார். அங்கிருந்த கலைவாணி அமரசிம்மன் குரலிலேயே ஆதிசங்கரருக்கு பதில் சொல்லி கொண்டிருந்தார். இதைத் தெரிந்து கொண்ட ஆதிசங்கரர், ‘கலைவாணியை தொழுது, இந்து தர்மத்தை கேலி செய்யும் இவருக்கு நீங்கள் உதவலாமா? என்னதான் பக்தி என்றாலும் இது தகுமா?’ என்று வேண்ட, அன்னை கலைவாணி கலசத்தில் இருந்து நீங்கினார். ஆதிசங்கரரின் கேள்விகளுக்கு விடை அளிக்கமுடியாமல் அமரசிம்மன் தோல்வி அடைந்தார். இந்து தர்மத்தின் பெருமையை உணர்த்திய ஆதிசங்கரர் அவரை ஆசீர்வதித்து விட்டுக் கிளம்பினார்.

எத்தனையோ படித்தும், எழுதியும் தன்னால் ஒரு வாதத்தில் வெற்றி பெற முடியவில்லையே என்ற விரக்தியில் அமரசிம்மன், தான் அதுவரை எழுதிய அத்தனை புத்தகங்களையும் எரியும் நெருப்பில் இட்டு அழிக்க தொடங்கினர். அதுபற்றி கேள்விப்பட்ட ஆதிசங்கரர் விரைந்து வந்து தடுக்கப் பார்த்தார். அப்போது கடைசியாக அவரிடம் இருந்தது அமரகோசம் என்ற அகராதி புத்தகமே. என்றென்றும் நிலைத்து நிற்கக் கூடிய அந்தப் புத்தகத்தை ஆசீர்வதித்து அவனிடமே கொடுத்து, அறிவை விரயம் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார். மதவெறுப்பு கொண்டு இனி எவரையும் இகழாமல் எல்லோரும் போற்றும்விதமாக அந்த அமரகோசம் என்ற அகராதியை விரிவாக எழுதும்படி ஆசீர்வதித்தார். அப்படி உருவாகி இன்றும் புகழ்கொண்டு விளங்குவதுதான் அமரகோசம் என்ற அழியாத பொக்கிஷம். எதிரியையும் மன்னித்து, அவனது படைப்பையும் பாதுகாத்து, அதை சிரஞ்சீவித் தன்மை அடையச் செய்த மஹாஞானி ஸ்ரீ ஆதிசங்கரர், என்றென்றும் வணங்கத் தக்க கருணாசாகரம்தான்.

sankarar 6
sankarar 6

சங்கரர் லலிதா சகஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுத விரும்பி அமர்ந்தார். அப்போது அங்கு இருந்த சீடரிடம் லலிதா சகஸ்ரநாம ஏடுகளை எடுத்துவரச் சொன்னார். அவர் சென்று, சில ஏடுகளை எடுத்துக்கொண்டுவந்து தந்தார். தான் கேட்டது அதில்லை என்பதை அவருக்குச் சொல்லி, ‘போய் லலிதா சகஸ்ரநாமம் எடுத்துவா’ என்று ஏடுகள் இருக்கும் இடத்தைக் காட்டி, அதை எடுத்துவரச் சொன்னார். அந்த சீடனோ சென்று, மறுபடியும் விஷ்ணு சகஸ்ரநாம ஏடுகளைக் கொண்டு வந்தார். சங்கரர் மீண்டும், லலிதா சகஸ்ரநாம ஏடுகளைக் கேட்க, மீண்டும் அந்த சீடன் விஷ்ணு சகஸ்ரநாமத்தையே கொண்டுவந்து தந்தார். இதேபோல் மூன்றுமுறை நிகழவும், சங்கரர், ‘நான் கேட்பது என்ன, நீங்கள் தருவது என்ன?’ என்றார் . அதற்கு அந்தச் சீடன் மெய்சிலிர்க்க, “நான் ஒவ்வொரு முறையும் லலிதா சகஸ்ரநாம ஏடுகளைத்தான் எடுப்பேன். ஆனால் ஒரு சிறுமி தோன்றி, `அதை வைத்துவிட்டு இதை எடுத்துப்போ’ என்று இதைத் தந்து அனுப்புகிறாள். அவள் முகத்தைப் பார்த்து மறுக்கும் துணிவு எனக்கில்லை” என்று சொன்னார். சங்கரர் அந்த சீடர் சொன்ன இடத்தில் சென்று பார்க்க, அங்கு யாரும் இல்லை.

உடனே தியானம் செய்த சங்கரர், ‘அன்னை லலிதாம்பிகையே தன்னை விஷ்ணு சகஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் பண்ணப் பணிக்கிறாள்’ லலிதாஎன்று புரிந்துகொண்டார். இன்றளவும், வைணவம், சைவம் ஆகிய இரு மரபு அடியார்களுக்கும் பெரும் ஞானச் சுரங்கமாக விளங்குவது சங்கரர் அன்று செய்த அந்த பாஷ்யமே.

சிவபெருமானே ஒரு முறை, சங்கரர் முன் சாமானிய மனிதனாகத் தோன்றி, பிறப்பால் மனிதரில் உயர்வு தாழ்வு இல்லை என்றும் அனைவருள்ளும் இருப்பது அந்த பிரம்மமே என்பதையும் உபதேசித்தார். அப்போது சங்கரர் பாடிய ‘மனீஷா பஞ்சகம்’ உயர்ந்த பக்குவப்பட்ட ஆன்ம ஞானமாகக் கருதப்படுகிறது.

ஒருவர் தன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அனைத்து கடமைகளையும் ஆதிசங்கரர் தமது நூல்களில் தொகுத்து அளித்துள்ளார்.

விநாயகர் முதல் ஆஞ்சநேயர் வரை அனைத்து கடவுள்கள் மீதும் சங்கரர் நிறைய பாடல்கள் பாடியுள்ளார். அந்த பாடல்கள் அனைத்தும் எளிய முறையில், உயர்வான தத்துவங்களைக் கொண்டதாக உள்ளன.

பத்ரிநாத், திருச்செந்தூர் உள்பட பல ஆலயங்களில் கேரளாவைச் சேர்ந்த நம்பூதிரிகள் அர்ச்சகர்களாக இருந்து பூஜை செய்யும் முறையை ஆதிசங்கரர் உருவாக்கினார்.

ராமேசுவரம் கோவிலில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பிராமணர்கள் தான் பூஜை செய்ய வேண்டும் என்ற முறையை கொண்டு வந்ததும் ஆதிசங்கரரே.

காசியில் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த நவனாப் புதிய சிந்தனை பெற்ற ஆதிசங்கரர் ‘மனீஷா பஞ்சகம்’ என்ற 5 சுலோகங்களை இயற்றினார்.

ஒரு தடவை ஆதிசங்கரர் இமயமலையில் அடர்ந்த காட்டுக்குள் தியானம் செய்ய சென்றார். அப்போது அவர் கமண்டலத்தையும் தண்டத்தையும் தூக்கி வீசினார். அந்த தண்டம் மரமாகவும் கமண்டலம் நதியாகவும் மாறியது.

அம்பாளை 64 உபகாரங்களை அளித்து வழிபடுவார்கள். இந்த வழிபாட்டின் போது ஸ்ரீ சக்கர சிம்மாசனத்தில் அன்னை எழுந்தருளி இருப்பதாக பாவித்து பூஜிப்பது நல்லது.

யந்திரத்தின் நடுவில் பிந்துவில் அம்பிகையை எழுந்தருளச்செய்து, அவளது பரிவார தேவதைகளை அன்னையை நோக்கி ஒவ்வொரு கோணங்களிலும் எழுந்தருளி இருப்பதாக பாவித்து வழிபடுவதே ஸ்ரீசக்கர பூஜையாகும்.

ஆதிசங்கரர் நிறுவியது போன்று தற்போது பல பல அம்பிகை தலங்களில் ஸ்ரீசக்கர வழிபாடு நடத்தப்படுகிறது. ஸ்ரீ சக்கரத்தினைச் சுற்றி மதில்களாகவும் கோட்டைகளாகவும் 44 வரிசைகளை பாவனையுடன் பூஜிக்க வேண்டும். இதுவே ஸ்ரீசக்கர பூஜையின் முதன்மையான அம்சமாக சொல்லப்படுகிறது.

sankarar 7
sankarar 7

ஸ்ரீ சக்கர வழிபாடுக்கு “ வித்யோபாகனை” என்ற பெயரும் உண்டு. ஆதிசங்கரர் வகுத்து கொடுத்துள்ள நெறிப்படி இந்த ஸ்ரீ சக்கர வழிபாடு நடத்தப்படுகிறது.

ஆதிசங்கரர் உருவாக்கிய ஸ்ரீ சக்கரத்தை ஆய்வு செய்த நிபுணர்கள், அவற்றில் கணித அறிவும், விஞ்ஞான உணர்வும் நிரம்பி இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டனர்.

சக்கரங்கள் அனைத்துக்கும் ஸ்ரீ சக்கரமே ராஜாவாக கருதப்படுகிறது. எனவே ஸ்ரீ சக்கரத்தை “ சக்ரராஜம்“ என்று போற்றுகிறார்கள்.

யந்திரங்களில் நிறைய எழுத்துக்கள் காணப்படும். ஆனால் சக்கரத்தில் இருப்பது இல்லை.

ஆதி சங்கரர் நிறுவியுள்ள ஸ்ரீ சக்கரங்களை முறைப்படி வழிபடுபவர்கள் யோகமும், குரு பலனும் கிடைத்து பரம ரகசியங்களை அறிந்து தேவியின் விஸ்வரூபக் காட்சியைப் பெறமுடியும்.

இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்கள் என்று அறிப்படும் பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் மற்றும் பகவத் கீதைக்கு விளக்கவுரை அளித்து அவை போதிக்கும் அத்வைத வேதாந்தம் அதாவது இரண்டற்றது என்கிற அத்வைத தத்துவத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டியவர்.
இவர் சிவானந்த லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேகசூடாமணி, ஆத்மபோதம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

athi sankarar
athi sankarar

ஆதிசங்கரருக்கு எத்தனையோ பகவதி கோவில்கள் இருந்தும் கலைவாணிக்கு ஒரு கோவில் இல்லையே என்ற ஏக்கம் இருந்தது. அவர் மைசூர் சமுண்டீஸ்வரி தாயை நோக்கி தவம் இருந்தார். மகனின் தெய்வீக தாகத்தைத் தீர்க்க அன்னை ஆதிசங்கரருக்கு காட்சியளித்தாள். தேவியின் திவ்ய ரூபம் கண்டு ஆதிசங்கரருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஆனந்தக் கூத்தாடினார்.

தேவியோ, ”நீ எங்கு என்னை குடி வைக்க விரும்புகிறாயோ அங்கு கொண்டுபோ. ஆனால் ஒரு நிபந்தனை. நான் உன்னைப் பின் தொடர்வேன். நீ என்னை திரும்பி பார்க்கக் கூடாது. அப்படி திரும்பிப் பார்த்தால் அந்த இடத்திலேயே நின்றுவிடுவேன்” என்றாள்.

ஆதிசங்கரர் தேவியின் நிபந்தனையை ஒத்துக் கொண்டு தேவியின் கொலுசு ஒலியைக் கேட்டபடி நிம்மதியாக நடந்து சென்றார். எப்பொழுதுமே தேவி சித்தாடல் புரிவது தானே இயற்கை. போகும் வழியில் கோல மகரிஷி வழிபட்டு வந்த சுயம்பு லிங்கத்தைப் பார்த்து நின்றுவிட்டாள். கொலுசு ஒலி கேட்டுக் கொண்டே முன்னே நடந்து சென்று கொண்டிருந்த ஆதிசங்கரர் கொலுசு ஒலி நின்றுவிட்டதே எனத் திரும்பிப் பார்க்கிறார்.

sankarar 4 1
sankarar 4 1

அன்னை அருள்வாக்குபடி நீ திரும்பி பார்த்தால் நான் அங்கேயே நின்றுவிடுவேன் என்ற வரிகள் நினைவுக்கு வந்தன. எனவே அங்கு ஜோதிர் லிங்கத்தில் தேவி அந்த இடத்திலேயே ஐக்கியமாகிவிட்டாள்.

அவள் குடியேறிய இடம்தான் கொல்லூர் என்ற சக்தியின் புண்ணியத்தலம் ஆகும். அடர்ந்த காடு, மலை, ஆறுகள் அமைந்த இடத்தில் சுயம்புவான ஜோதிர்லிங்கம் மட்டும் தான் இருந்தது. அதிலே அரூபமான முப்பெரும் தேவியரும் உடனுறைகிறார்கள்.

ஆதிசங்கரர் வந்தபோது கோல மகரிஷி பூஜித்து வந்த தங்க ரேகை மின்னும் சுயம்புலிங்கம் மட்டுமே இருந்தது. அம்பாள் சிலை ஏதும் இல்லை. எனினும் அரூபரூபமாய் அந்த லிங்கத்தில் இருப்பதாக எத்தனையோ காலமாய் நம்பப்பட்டு வந்த ஸ்ரீமூகாம்பிகை தேவி என்ற அம்பாளின் முகம் அப்போது எப்படி இருக்கும் என்று யாரும் கற்பனை செய்து கூட அறியமுடியவில்லை.

மூகாம்பிகை தேவியின் புகழினையும், பெருமைகளையும், மகிமைகளையும் கூறும் பல நிகழ்ச்சிகளையும், கதைகளையும் பக்தியுடன் பேசிவந்த ஊர் மக்கள் மன்தில் இது ஒரு பெருங்குறையாக இருந்தது.

இந்நிலையில் ஆதிசங்கரர் கொல்லூர் வந்திருப்பது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. சக்தியை வழிபடும் சாக்தமார்க்கத்தை வழிபட அருளிய மகான் ஆதிசங்கரர் அரூபரூபமாய் உள்ள ஸ்ரீமூகாம்பிகையின் திரு உருவத்தைக் காட்டுவார் என ஊர்மக்கள் பரவசமடைந்தார்.

கொல்லூரில் ஆதிசங்கரர் தங்கியிருந்து தினமும் தியானம் செய்தது மூலவரின் சன்னதிக்கு நேர் பின்புறம் அமைந்துள்ள ஒரு மேடை ஆகும். ஏகாந்த வெளியில் ஜோதிர் லிங்கம் முன்னாள் அமர்ந்து ஆதிசங்கரர் தியானம் செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் அவர் முன் ஜெகஜோதியாக அம்பிகையின் உருவம் ஒளிர்ந்து காட்சி அளித்தது.

ஆதிசங்கரர் தரிசித்த அம்பிகையின் உருவத்தை மனதில் கண்டார். அவ்வுருவம் சங்கு சக்கரம் அபயக்கரம் ஏந்திய சாந்த சொரூபியாக பத்மாசனத்தில் அமர்ந்து அருட்கடாச்சம் தந்ததைக் கண்டார்.

அன்னை தானே இத்தனை காலமாக இந்த சொர்ணரேகை மின்னும் சுயம்பு லிங்கத்தில் அரூபரூபமாய் முப்பெருந்தேவி மூகாம்பிகா என அடையாளம் காட்டிக் கொண்டாள். ஆதிசங்கரர் மனம் மகிழ்ந்து அம்பாளை துதித்தார். அக்காட்சி அவர் இதயத்தில் தத்ரூபமாக பதிந்தது. உடனே இச்செய்தியை உரியவர்களிடம் கூறினார். விக்கிரகக் கலையில் விஸ்வகர்மா பரம்பரையில் கைதேர்ந்த ஸ்தபதி ஒருவரை அழைத்து விக்கிரகம் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.

mugambikai
mugambikai

மூலவரின் சிலையும் பஞ்சலோகத்தில் உருவானது. அம்மாளை பிரதிஷ்டை செய்வதற்காக தொடர்ந்து ஒருவருடம் உட்கார்ந்த நிலையிலேயே பூஜை செய்ததால் ஆதிசங்கரரால் எழ முடியவில்லை.

தவிக்கும் தன் பக்தனைப் பார்த்த அன்னை தன் கையாலேயே கஷாயம் செய்து சங்கரருக்குக் கொடுத்தாள். இன்றும் இந்த தலத்தில் இரவு நேரத்தில் கஷாயம் காய்ச்சி பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கிறார்கள்.

தியானத்திலே கண்ட திவ்ய சொரூபம் ஆதிசங்கரர் கண் முன் நின்று காட்சியளித்துக் கொண்டிருந்தது. விக்கிரகத்தை பார்த்தார். மெய்சிலிர்த்தது! பத்மாசன தோற்றம்-நான்கு கைகள், சங்கு சக்கரம், ஒரு கை அருளையும் ஒரு கை தன் மலர் பாதத்தை சரணடையத் தூண்டும் வகையிலும் இருந்தன. சாந்த சொரூபியாக சகல கலைகளையும் ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்குபவளாக காட்சி தந்தார்.

சுயம்பு லிங்கத்தின் பின்னால் சிறிது இடைவெளிவிட்டு மூகாம்பிகா சிலையை பிரதிஷ்டை செய்தார். அதனடியில் சக்தி மிகுந்த ஸ்ரீ சக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தார். அச்சக்கரத்தில் ஒன்பது சக்கரம் அடக்கம் அறுபத்து நான்கு கோடி தேவதைகளை ஆவாஹனம் செய்தார். ஸ்ரீ சக்கரத்தின் மீது அன்னையின் விக்கிரக ரூபத்தை நிறுவினார்.

2500ஆண்டுகளுக்கு முன்பு ஆதிசங்கரர் சென்னைக்கு பொது ஆண்டு முன் சுமார் 500 ஆம் ஆண்டில் வருகை தந்தார். அவர் இன்றைய வட சென்னை திருவொற்றியூரில் உள்ள வடிவுடைஅம்மன் கோவிலுக்கு விஜயம் செய்தார்.

Bharathi theerthar
Bharathi theerthar

மேலும் அவர் சென்னைக்கு மேற்கே அமைந்துள்ள மாங்காடுஅம்மன் மற்றும் சென்னைக்கு அருகில் தென்மேற்கே உள்ள காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் மற்றும் சென்னைக்கு தெற்கே திருச்சிக்கு அருகில் உள்ள திருவானைகாவல் அகிலாண்டேஸ்வரி கோவில்களுக்கும் விஜயம் செய்தார்.

திருவொற்றியூர், மாங்காடு காஞ்சிபுரம் மற்றும் திருவானைகாவல் கோவில்களில் எழுந்தருளியுள்ள அம்மன் உக்கிரமுர்த்தியாக காட்சி அளித்தார். ஆதி சங்கரர் , தனது தவவலிமையால் அம்மனின் உக்கிரத்தை தணித்து சௌமிய ரூபியாக்கினார்.

sankarar 1 2
sankarar 1 2

அவர் மாங்காடு கோவிலில் அர்த்தமேரு யந்திரத்தையும் திருவொற்றியூர் கோவிலில் வட்டபாறை யந்திரத்தையும், காஞ்சி காமாட்சி கோவிலில் ஸ்ரீ யந்திரத்தையும், திருவானைகாவல் கோவிலில் தடாகை, ரத்ன காதோலை, ஸ்தாபித்து அனுக்கிரகம் செய்து மக்கள் வளமாக வாழ வழிவகுத்தார். அவர் சக்தி பீடங்களுக்கு சென்று சக்திவழிபாட்டு முறைகளை வகுத்தார்.

ஆதி சங்கரர் 2500 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நிலத்தை ஒரே நாடாக கருதினார். அவர் இந்த நாடு முழுவதும் பயணித்து, வழியில் பல மடங்களை ஸ்தாபித்தார்.

அவர் பாரத நாட்டின் நான்கு திசைகளிலும் முதன்மை மடங்களை ஸ்தாபித்து தனது 4 முதன்மை சீடர்களிடம் இந்த மடங்களை ஒப்படைத்தார். அவை பின்வருமாறு,

கோவர்தனபீடம் – கிழக்கு
துவாரகாபீடம் – மேற்கு
சிருங்கேரிசாரதா பீடம் – தெற்கு
ஜோதிர்மத் பீடம் – வடக்க

ஆதிசங்கரர் தமிழகத்தில் திருவண்ணாமலை, சிதம்பரம், ஆலங்குடி திருவிடைமருதூர், திருச்சி, ஸ்ரீரங்கம், உப்பூர், ராமேஸ்வரம், திருச்செந்தூர், மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கும் விஜயம் செய்தார்.

மனிதப்பிறவி, முத்தியில் நாட்டம், மகான்களின் தொடர்பு இவை மூன்றும் கிடைப்பது அரிது தெய்வத்தின் அருள் காரணமாகவே இவை கிடைக்கின்றன.
உபநிஷத வாக்கியங்களில் பொருளை ஆராய்வதால சிறந்த அறிவு பிறக்கின்றது. அதனுடைய தொடர்ச்சியாக சம்சார துக்கத்திற்கு முற்றிலும் அழிவு ஏற்படுகின்றது.
உண்மையில் நீ பரமாத்மா. அஞ்ஞானத்தின் காரணமாகத்தான் உனக்கு பந்தமும், அதிலிருந்து பிறவிச் சூழலும் ஏற்பட்டுள்ளன. ஞானத்தீ அஞ்ஞானத்தின் செயலை வேருடன் அழித்து விடும்.
சொற்களின் கூட்டம் ஒரு பெரிய காடு போன்றது. அதுமனதை மயக்கி விடும் ஆகையால் உண்மையை நாடுபவர்கள் அன்மாவைப் பற்றிய உண்மை ஒன்றையே நன் முயற்சியால் அறியவேண்டும்.
குருநாதரின் கருணை பூரண சந்திரனின் கிரணங்களைப் போலுள்ளது அது விரும்பிய வரத்தை அளிப்பதில் கற்பக மரத்தைப் போலுள்ளது. மனத்திலுள்ள துன்பத்தை அது அறவே போக்கிவிடுகின்து.
பிரமமும் ஆன்மாவும் ஒன்றாகிய போது புத்தி காணாமல் போய்விட்டது. செயலில் ஈடுபாடு கரைந்து விட்டது இது, அது என்பதெல்லாம் என்ன என்பது தெரியவில்லை அது என்ன வென்றோ எப்படிப்பட்டது என்றோ தெரியவில்லை. அந்த நிலையில் அளவு கடந்த இன்பம் மட்டும் இருப்பதை உணர்கின்றேன்.
ஞான விழிப்பு உண்டானதும் இந்த உலகம் எங்கே போயிற்று.? யாரால் கொண்டுபோகப்பட்டது? எங்கு மறைந்தது. இப்போது இருந்தது. மறுகணம் இல்லை இது என்ன ஆச்சரியம்.
எப்படி ஒளியின் உதவி இல்லாமல் எதையும் பார்கக முடியாதோ. அதேபோல் ஆராச்சி இல்லாமல் ஞானத்தைக் காண முடியாது.
அஞ்ஞானத்தால் தோன்றிய அனைத்தும் ஞானம் உதித்தவுடன் மறைந்து போகின்றது.
கண்ணாடிபோல் மனம் பரிசுத்தமானால் அதில் ஞானம் தானே விளங்கும். ஆகையால் மனத்தை பரிசுத்தமாக்குவதில். கவனம் செலுத்த வேண்டும்.
நான் மாசற்றவன், அசைவற்றவன், புனிதனானவன், சாவில்லாதவன் என்றும் அழிவற்றவன் என்றும் அறிவதுதான் ஞானம் என்று கூறப்படுகின்றது. என்று அவரது அருளுரைகள் நமக்கு அறிவுறுத்துகிறது. இத்தகைய சிறப்புக் கொண்ட ஆதி குருவான ஆதிசங்கரர் ஜெயந்தி நாளில் அவரை வணங்கி அவரது அருளுரையின் வழி நடந்து உய்வோம்.

சங்கர ஜெயந்தி: ஹிந்து தர்மம் தழைக்க வந்த ஆதிகுரு! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply