திருப்புகழ் கதைகள்: சிவபெருமான் பன்றியின் கொம்பை அணிந்தது!

ஆன்மிக கட்டுரைகள்

thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ் கதைகள் (பகுதி 44)
மன்றல்அம் கொந்து (திருப்பரங்குன்றம்) திருப்புகழ்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

சிவகுமாரரே, விநாயகரது தம்பியே, திருப்பரங்குன்றம் மேவிய தேவ தேவா, மாதர் மயக்குறாது அடியேனை தேவரீரது திருவடியிற் சேர்த்தருள்வீ்ர் என திருப்பரங்குன்றத்து முருகப்பெருமானை அருணகிரியார் வேண்டுகின்ற பாடல் இது. இப்போது பாடலைப் பார்ப்போம்.

மன்றலங் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென
வண்டினங் கண்டுதொடர் …… குழல்மாதர்
மண்டிடுந் தொண்டையமு துண்டுகொண் டன்புமிக
வம்பிடுங் கும்பகன …… தனமார்பில்
ஒன்றஅம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய
உந்தியென் கின்றமடு …… விழுவேனை
உன்சிலம் புங்கனக தண்டையுங் கிண்கிணியும்
ஒண்கடம் பும்புனையும் …… அடிசேராய்
பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள்
பண்டையென் பங்கமணி …… பவர்சேயே
பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர
பண்டிதன் தம்பியெனும் …… வயலூரா
சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர்
செண்பகம் பைம்பொன்மலர் …… செறிசோலை
திங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர்
தென்பரங் குன்றிலுறை …… பெருமாளே.

இந்தத் திருப்புகழில் பன்றியங் கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள் பண்டையென் பங்கமணி …… பவர்சேயே என்ற வரிகளில் சிவபெருமான் அணிந்திருக்கும் பன்றியின் கொம்பு, ஆமை ஓடு, நாகங்கள், தேவர்களின் எலும்புகள் ஆகியவற்றை அணிந்தது பற்றிய குறிப்பு காணப்படுகிறது.

சிவபெருமான் பன்றியின் கொம்பை அணிந்த வரலாறு

காசிப முனிவருக்குத் திதியின்பால் பிறந்தவனும், பொற்கணைகளை உடையவனுமாகிய இரணியாட்சன், நான்முகக் கடவுளிடம் வரம்பல பெற்று, மூவுலகும் ஏவல் கேட்ப அரசாண்டான். உலகங்களுக்கெல்லாம் தானே தலைவன் என்றும் தன்னை அன்றி வேறு தலைவன் இல்லை என்றும், மனச் செருக்கு கொண்டான். அந்த அசுரனிட்த்தில் தவமுனிவர் சென்று “பூதேவி மணாளனாகிய புனத் துழாயலங்கற் புனிதனே கடவுள்” என்றனர். அது கேட்ட இரணியாட்சன் விழி சிவந்து “அப் பூதேவியைப் பாயாகச் சுருட்டிக் கடலிற் கரைத்து விடுகிறேன்” என்று கூறி, தன் தவவலியால் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு ஆழ்கடலை யணுகினன். இதனை கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் கூறுவார்.

விண்ணு ளோர்க்கு எலாம் அல்லலே வைகலும் விளைத்து
நண்ணும் ஆடகக் கண்ணினன் முன்னம்ஓர் நாளில்
மண்ண கந்தனை வௌவியே வயிற்றிடை வைத்துத்
துண்ணெனப் பிலம்புக்கனன்உயிர் எலாம் துளங்க.

இச்செய்கையால் துன்பமுற்ற செந்தழலோம்பும் அந்தணரும், வானவரும் மாதவரும், பூதேவியும் அஞ்சி பச்சைமாமலை போல் நின்ற அச்சுதனை அணுகி, “அரவணைச் செல்வ! அடியேங்களுக்கு அடைக்கலம் வேறில்லை; ஆண்டருள்வீர்” என்று வேண்டி நின்றனர்.

நாராயணர், “அஞ்சுந் தன்மையை விடுமின்” என்று சொல்லி, வையகத்தைக் கொணர்வான் வேண்டி வராக ரூபமெடுத்தார். பேராற்றலுடைய வராக மூர்த்தி ஏழு கடல்களையும் கலக்கிச் சேறுபடுத்தி, அளவின்றி நின்ற பெரும் புறக்கடலுள் முழுகி இரணியாட்சனைக் கண்டு அவனோடு பொருது, தமது தந்தத்தால் அவனைக் கிழித்துக் கொன்று, தனது கொம்பின் நுனியால் பூமியைத் தாங்கி மேலெழுந்து வந்தார். அப்பூமியை ஆதிசேடனது ஆயிரம் பணாமகுடங்களில் நிலை நிறுத்தினார்.

அது கண்டு விண்ணவரும் மண்ணவரும் விஷ்ணுமூர்த்தியைத் துதித்தார்கள். அவ்வெற்றியின் காரணத்தாலே வராகம் மனம் தருக்குற்று தானே உலகங்களுக்குத் தனிப் பெருந் தலைவன் என்ற பிரமையாலும், இரணியாட்சனது இரத்தத்தைப் பருகிய வெறியினாலும், மயங்கி மலைகளை இடித்துத் தள்ளியும், உயிர்கள் பலவற்றையும் வாயிற் பெய்து குதட்டியும், மேகங்கள் ஏழும், நாகங்கள் எட்டும் அஞ்சும்படி ஆர்ப்பரித்தும், கடைக்கண்ணில் ஊழித் தீயைச் சிந்தியும், பூமியைத் தோண்டி மதம் கொண்டு உலாவியது.

மேகங்கள் ஏழு – பிங்கல நிகண்டிலும், சூடாமணி நிகண்டிலும்` சிறிது சிறிது வேறுபடச் சொல்லப்பட்டன. நீர்மழையை அளவாகவும், மிகையாகவும், சிறிதாகவும் பொழிவன, மண்மழை, கல் மழை, பொன் மழை, மணி மழை என்பவற்றைப் பொழிவன ஆகியவை ஏழு மேகங்கள் ஆகும்.
நாகங்கள் எட்டு – அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன்,சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகியவை.

வராகத்தின் இந்தச் செயலைக் கண்டஞ்சிய பிரமன் இந்திரன் இமையவர் முனிவர்கள் முதலியோர் வெள்ளிமலையை அடைந்து, நந்தியண்ணலின்பால் விடை பெற்று, திருச் சந்நிதிச் சென்று, கருணையங் கடவுளாங் சிவபெருமானைக் கண்டு, வலம் வந்து வணங்கி நின்று “பணிவார் பவப்பிணி மாற்றும் பசுபதியே! புரமூன்றட்ட புராதன! திருமால் வராக மூர்த்தியாகிய உலகங்களுக்கும், உயிர்களுக்கும் உறுகண் புரிகின்றனர்” என்று முறையிட்டனர்.

உடனே சிவபெருமான் திருவுளமிரங்கிக் குன்றமெறிந்த குமாரக் கடவுளை அவ்விடரை நீக்கி வர அனுப்பியருளினார். அறுமுகப் பெருமான் வராகமூர்த்தியை அணுகி, அயிற்படையால் அதன் நெற்றியில் குத்தி நிலத்தில் அழுத்தி அதன் ஆற்றலை அடக்கினார். புத்தேளிர் பூமாரி பொழிந்தனர், வராகமூர்த்தியும் தோத்திரம் புரிந்தனர்.

அறுமுகனார் திருவுளம் இரங்கி அவ்வராகத்தின் கொம்பைப் பறித்துக் கொண்டு போய் சிவபெருமான் திருமுன்பு வைத்தருளினார். தேவர்கள் வேண்டிக் கொள்ள அப் பன்றியின் கொம்பை அரனார் தம் திருமார்பில் தரித்துக் கொண்டனர்.

திருப்புகழ் கதைகள்: சிவபெருமான் பன்றியின் கொம்பை அணிந்தது! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply