தீராத வயிற்று வலி! பெண்மணி கூறிய சிறந்த வழி!

ஆன்மிக கட்டுரைகள்

Abdominal pain
Abdominal pain
Abdominal pain

ஒரு சமயம், ஒரு பக்தனுக்கு வயிற்று வலி வந்தது. எல்லா மருத்துவர்களிடம் காண்பித்தும் வயிற்று வலி தீரவேயில்லை. நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போனது.

வில்வமங்கலம் ஸ்வாமிகளைப் பற்றிக் கேள்விப்பட்ட அவன், தனது வலி தீர வழி சொல்லும்படி அவரைக் கேட்டான். ஸ்வாமிகள் கண்ணனைக் கேட்கிறேன் என்று சொல்லிவிட்டு அடுத்த நாள் பூஜையின் போது கண்ணனிடம் அது பற்றிக் கேட்டார்.

பகவானும் அது கர்ம வினையினால் என்று சொன்னார். வினை தீர வழி என்ன என்று அவன் கேட்க, ஸ்வாமிகளும், முற்பிறப்பில் செய்த தீமையால் வரும் இந்த வினை தீர வழியில்லை என்று சொன்னார். அவனும் தன் வினைப்பயனை நொந்துகொண்டு, வயிற்றைப் பிடித்துக் கொண்டு சென்றான்.

செல்லும்போது வயிற்று வலி அதிகமாகிவிடவே, அங்கு இருந்த வீட்டின் திண்ணையில் உட்கார்ந்தான். அது குரூரம்மாவின் வீடு. அவன் வயிற்றைப் பிடித்துக் கொண்டிருப்பதைக் கண்ட அவள், பசி என்று நினைத்து உணவளித்தால். அவன் மிகவும் வருந்தி, தனக்கு வயிற்று வலி இருப்பதால் ஒரு பருக்கை கூட சாப்பிட முடியாது என்று கூறினான்.

krishnan 1
krishnan 1

அதைக் கேட்ட அவள், சிறிதும் தயங்காமல்,”மகனே, ராமா, ராமா என்று ஜபிக்க ஆரம்பி, நம்பிக்கையோடு சொல், சரியாகிவிடும்” என்று சொன்னாள். அவனும் நம்பிக்கையோடு சொல்ல ஆரம்பித்தான். அவள் எப்போதும் ராமா, கிருஷ்ணா என்று நாம ஜபம் செய்வதால் அவளைவிட சிறந்த குரு வேறு யார் இருக்கமுடியும்?

சிறிது நேரத்திலேயே வலி சற்றே குறைந்தது போல் இருந்தது. இப்போது அவள், அவனிடம், “சரி, நீ அருகிலுள்ள குளத்திற்குச் சென்று, கிருஷ்ண நாமத்தைச் சொல்லிக் கொண்டே முங்கிக் குளித்துவிட்டு வா, சாப்பிடலாம்” என்று சொன்னாள். அவனும் அவ்வாறே “கிருஷ்ணா, கிருஷ்ணா” என்று சொல்லிக்கொண்டு முங்கி எழுந்தான். என்ன ஆச்சர்யம்!!!! அவனது வயிற்று வலி முற்றிலும் நீங்கிவிட்டது.

அவன் குரூரம்மாவின் வீட்டிற்கு சென்று மிக்க மகிழ்ச்சியுடன் உணவை உண்டு நன்றி கூறிவிட்டுப் புறப்பட்டான். அதன் பிறகு அவன் பக்தியுடன் எப்போதும் ராமநாமத்தையும் கிருஷ்ணநாமத்தையும் ஜபித்து வந்தான்.

ஒரு முறை, ஒரு கதாகாலட்சேபத்தின்போது வில்வமங்கலம் ஸ்வாமிகளைக் கண்ட அவன், இந்த சம்பவத்தைக் கூறி, குரூரம்மாவால், தனது வயிற்று வலி தீர்ந்தது என்று சொன்னான்.

அடுத்த நாள் பூஜையின் போது, ஸ்வாமிகள் கண்ணனிடம், “கண்ணா, நீ இப்படிச் செய்யலாமா? நீ ‘கர்மாவினை’என்று சொன்னாயே தவிர, நாமஜபத்தால் வலி சரியாகும் என்று சொல்லவேயில்லையே?” என்று கேட்டார்.

கண்ணன் சிரித்துக் கொண்டே, “ஆமாம் கர்மவினை என்று சொன்னேன், நாமஜபம் செய்தால் .தீரும் என்று சொல்லவில்லை. வில்வமங்கலத்திற்கு நாமஜபம் அனைத்துப் பாபங்களையும் போக்கும் என்று தெரியாதா என்ன? இந்த விஷயத்தில் குரூரம்மாவிற்கு இருக்கும் நம்பிக்கையில், துளி கூட உனக்கு இல்லையே!” என்று கூறினார்.

பகவானான கண்ணனே இவ்வாறு சொல்வதைக் கேட்ட வில்வமங்கலம், குரூரம்மாவின் பக்திக்குத் தலை வணங்கினார்.

தீராத வயிற்று வலி! பெண்மணி கூறிய சிறந்த வழி! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *