திவ்ய பாத சேவை! ஏழையின் வேண்டுதல்!

ஆன்மிக கட்டுரைகள்

krishna
krishna
krishna

மரகத தேசத்தில் தனஞ்ஜெயன் என்ற பக்தர் இருந்தார். அவர் மனைவியின் பெயர் சுசீலை. மிகவும் வறுமை நிலையில் இருந்ததால் தனஞ்ஜெயன் நாள் தோறும் யாசகம் செய்து அவருக்கு கிடைக்கும் தானியத்தைக் கொண்டு அவர்களது வாழ்க்கையை நடத்தி வந்தனர்.

தனஞ்ஜெயன் ஒருநாள் யாசகத்திற்கு செல்லாவிட்டாலும் அன்று அவரும் அவருடைய மனைவியும் பட்டினி கிடக்கத்தான் வேண்டும். இந்த பரம ஏழ்மை நிலைத் தீர வேண்டுமென்று அவருடைய மனைவி நாள்தோறும் அவர்கள் வீட்டிற்குப் பின்னால் உள்ள அரச மரத்தைச் சுற்றி வந்து பிரார்த்தனை செய்வது வழக்கம்.

இவ்வாறு இருக்கையில் கோடை கழிந்து குளிர் காலம் வந்தது வழக்கத்திற்கு மாறாக அந்த வருடம் மழையும், குளிரும் மிக அதிகமாக இருந்தது.

உடலை முடுவதற்கே சரியான உடைகள் இல்லாத நிலையில் அந்த பிராமணரும் அவரது மனைவியும் குளிரால் நடுங்கி மிகவும் துன்புற்றார்கள்.

அதற்கு மேலும் குளிரைத் தாங்க முடியாத நிலையில் அடுப்பை மூட்டிக் குளிர் காயலாம் என்று நினைத்தார்கள்.

அடுப்பை மூட்டுவதற்கு சுள்ளிகள் வேண்டுமே? தனஞ்ஜெயன் கோடாரியி னை எடுத்துக் கொண்டுபோய் தன் வீட்டுக் கொல்லைப் புரத்தில் இருந்த அரச மரத்தின் கிளையை வெட்டினார்.

உடனே அந்த அரச மரத்தின் கிளையிலிருந்து ரத்தம் வடிவதைக் கண்டு திடுக்கிட்டுப்போய் கோடாரியைக் கீழே போட்டுவிட்டுக் கை கூப்பியயடி நின்றார், மனைவியும் இதை எதிர்பார்க்கவில்லை

அங்கு சற்று நேரத்தில் சங்கு, சக்கரதாரி ஸ்ரீ மகா விஷ்ணு தோன்றியதைக் கண்டார்கள். அவர் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டிருந்தது அதிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

தனஞ்ஜெயன் மேலும் திகைப்படைந்தவராக “ஸ்வாமி இது என்ன கொடுமை சர்வலோக நாயகனான உங்கள் உடம்பிலிருந்து ரத்தம் வடியக் காரணம் ஆகி விட்டேனே என்று புலம்பினார்.

‘ஓ மாதவா, தேவ தேவா, நான் மரத்தைத் தானே வெட்டினேன். உங்க கையில் எவ்வாறு வெட்டுக் காயம் ஏற்பட்டது ” என்று பதறினான்.

பரந்தாமன்…. பக்தா…. நீர் என்னை பார்க்கவிட்டாலும் நான் உம்மை பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன். என்னை அஸ்வத்த ரூபன் என்றும் அஸ்வத்த நாராயணன் என்றும் பக்தர்கள் அழைப்பார்கள்.

நாள் தோறும் உன் மனைவி என்னைச் சுற்றி வந்து பிரார்த்தனை செய்து கொண்டதால்தான் இன்று உம்முன் காட்சியளித்தேன்” என்று கூறினார்.

தனஞ்ஜெயன் கண்ணீர் பெருகியவராக, – என்னைவிட என் மனைவி மிகவும் புண்ணியம் செய்தவள், அவள் நாள் தோறும் உம்மை தொழுது வந்திருக்கிறாள்.

ஆனால் நானோ உங்களை கோடாரியால் வெட்டிய கொடுமையை செய்தேன். எனக்கு நீங்கள் காட்சியளித்தது விந்தையிலும் விந்தையல்லவா? பிரபுவே, என்னை மன்னித்துவிடுங்கள். உங்களைத் தவிர எனக்கு வேறு கதியில்லை” என்று அழுதார்.

பகவான் அஸ்வத்த நாராயணர் இளநகை புரிந்தபடி, “பக்தனே, உம்முடைய அவல நிலையைப் போக்குவதற்காகத் தான் உம் முன் தோன்றினேன். உமக்கு வேண்டிய வரத்தைக் கேட்டுப் பெற்று கொள்ளுங்கள்” என்று கூறினார்.

தனஞ்ஜெயன் கைகூப்பி வணங்கியவனாக, “பகவானே, என்றும் உங்களை மறவாத நிலை வேண்டும் உங்களுடைய திவ்யமான பாத சேவையைத் தவிர எனக்கு வேறொன்றும் வேண்டியதில்லை என்றார். பகவான் அவர்களுக்கு சகல ஐஸ்வரியங்களும் உண்டாகச் செய்தார்

திவ்ய பாத சேவை! ஏழையின் வேண்டுதல்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply