திருப்புகழ் கதைகள்: கஜேந்திர மோட்சக் கதை!

ஆன்மிக கட்டுரைகள்

thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ் கதைகள் பகுதி 51
அருணமணி மேவு (திருச்செந்தூர்) திருப்புகழ்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

சிவகுமாரரே, மால்மருகரே, செந்திற் கடவுளே, மாதர் ஆசையிற்பட்டு அழியாமல் அடியேன் செந்தமிழால் உம்மைப் பாடி உய்ய அருளுவீராக என இருபத்தைந்தாவது திருப்புகழான இந்த திருச்செந்தூர் திருப்புகழில் அருணகிரியார் வேண்டுகிறார்.
arunagiri muruga peruman
arunagiri muruga peruman

அருணமணி மேவு பூஷித ம்ருகமதப டீர லேபன
அபிநவவி சால பூரண அம்பொற் கும்பத் …… தனமோதி

அளிகுலவு மாதர் லீலையின் முழுகியபி ஷேக மீதென
அறவுமுற வாடி நீடிய அங்கைக் கொங்கைக் …… கிதமாகி

இருணிறைய மோதி மாலிகை சருவியுற வான வேளையி
லிழைகலைய மாத ரார்வழி யின்புற் றன்புற் …… றழியாநீள்

இரவுபகல் மோக னாகியெ படியில்மடி யாமல் யானுமுன்
இணையடிகள் பாடி வாழஎ னெஞ்சிற் செஞ்சொற் …… றருவாயே

தருணமணி யாட ராவணி குடிலசடி லாதி யோதிய
சதுர்மறையி னாதி யாகிய சங்கத் துங்கக் …… குழையாளர்

தருமுருக மேக சாயலர் தமரமக ராழி சூழ்புவி
தனைமுழுதும் வாரி யேயமு துண்டிட் டண்டர்க் …… கருள்கூரும்

செருமுதலி மேவு மாவலி யதிமதக போல மாமலை
தெளிவினுடன் மூல மேயென முந்தச் சிந்தித் ……தருள்மாயன்

திருமருக சூரன் மார்பொடு சிலையுருவ வேலை யேவிய
ஜெயசரவ ணாம னோகர செந்திற் கந்தப் …… பெருமாளே

இத்திருப்புகழின் பொருளாவது – இளமையையும் இரத்தினத்தையும் ஆடுகின்ற தன்மையையும் உடைய பாம்பையணிந்த வளைந்த சடையையுடைய முதல்வரும், ஓதிய நான்கு வேதங்களின் முதற்பொருளானவரும், சங்க வெண்குழை அணிந்தவருமாகிய சிவபெருமான் பெற்ற முருகக் கடவுளே!

நீலமேக வண்ணரும், மகர மீன்கள் வாழ்கின்ற ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த உலக முழுவதும் வாரி யுண்டவரும், அமரர்க்கு அருள்புரிகின்றவரும், போருக்கு முதல்வரும், விரும்பிய பெருவலிமையும் நிறைந்த மதம் பொழியுங் கன்னமும் உடைய மலைபோன்ற யானையாகிய கஜேந்திரன், தெளிந்த அறிவுடன் ஆதிமூலமே என்றழைத்தவுடன், முற்பட்டு கருணையுடன் நினைத்து வந்து அருள் புரிந்தவருமாகிய திருமாலின் திருமருகரே!

சூரனுடைய மார்பும் கிரவுஞ்சமலையும் தொளைபடுமாறு வேலை விடுத்தருளிய வெற்றிக் கடவுளே! சரவணபவரே, மனத்திற்கு மகிழ்ச்சியைத் தருபவரே, திருச்செந்தூரில் எழுந்தருளிய கந்தவேளே, பெருமிதம் உடையவரே, மாதர்களின் வசப்பட்டும் இன்புற்று அன்புற்றும் நீண்ட நேரம் இரவும் பகலும் மோகம் கொண்டவனாய் இப்பூமியில் வீணே இறந்து போகாமல், அடியேனும் தேவரீருடைய இரண்டு திருவடிகளைப் பாடி வாழுமாறு எளியேனுடைய உள்ளத்தில் இனிய சொற்களைத் தந்து ஆட்கொள்ளுவீர்.

இந்தப் பாடலில் கஜேந்திர மோட்சம் கதை சொல்லப்பட்டுள்ளது. இறை நம்பிக்கை என்பது நம்மில் மிகப்பலருக்கு ஆழ்மனது வரையில் ஊடுருவி இருக்கும் ஒரு விஷயம். ‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்பது மிக உண்மையான வாக்கியம். துன்பம் வரும் போது, மனங்கலங்காது, இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு, நம் வாழ்வைத் தொடர்ந்தால், கட்டாயம் இறைவன் நம்மைக் காத்து, வெயிலின் வெம்மை தணிக்கும் குடைபோல் உடன் வந்து, துன்பத்தைப் பொறுக்கும் சக்தியையும், துன்பத்திலிருந்து மீளும் வழியையும் அருளுகிறான்.

இந்த இறை நம்பிக்கை என்பது ஒரு நாளில் வருவதல்ல. ஜென்ம ஜென்மாந்தரங்களாக, நம் ஆன்மாவில் தொடர்ந்து வரும் வாசனைகளின் அதாவது பழவினைகளின் விளைவே ‘பக்தி’. அதாவது, ஒரு பிறவியில் இறையருளால் இறைவனைப் பற்றிய சிந்தனை கிடைக்கப்பெற்று, அதை விடாது தொடருவோமானால் அது அடுத்தடுத்த பிறவிகளில், காயாகி, கனிந்து, ஆன்ம‌ பரிபக்குவ நிலையைக் கொடுக்கும்.

அதன் விளைவாக முக்தியும் கிடைக்கும். ‘அவனருளால் அவன் தாள் வணங்கி’ என்பதைப் போல், இறையருள், நம் மீது மழையெனப் பொழிவதாலேயே ஒருவருக்கு இறைச் சிந்தனை வாய்க்கிறது.மேற்கூறியவற்றின் ஓர் அருமையான உதாரணமாக, ‘கஜேந்திர மோக்ஷ’த்தைக் கொள்ளலாம். இந்த திவ்ய சரிதம் பற்றி பேயாழ்வார் மூன்றாவது திருவந்தாதியில்

தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயக்கரத்தான் அஞ்ஞான்று – குட்டத்துள்
கோள்முதலை துஞ்சக் குறியெறிந்த சக்கரத்தான்
தான் முதலே நங்கட்குச் சார்வு’
– என்று குறிப்பிடுவார். கஜேந்திர மோட்சம் பர்றிய கதையை நாளைக் காணலாம்.

திருப்புகழ் கதைகள்: கஜேந்திர மோட்சக் கதை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply