திருப்புகழ் கதைகள்: அகத்தியருக்கு தமிழை உபதேசித்தவர்!

ஆன்மிக கட்டுரைகள்

e0aea4e0aebfe0aeb0e0af81e0aeaae0af8de0aeaae0af81e0ae95e0aeb4e0af8d e0ae95e0aea4e0af88e0ae95e0aeb3e0af8d e0ae85e0ae95e0aea4e0af8d

thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ் கதைகள் பகுதி 53
அறிவழிய மயல்பெருக (திருச்செந்தூர்) திருப்புகழ்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

அகத்திய முனிவருக்கு இனிய தமிழை உபதேசித்தவரே, நெறி தவறிய சூராதி அவுணரை அழித்தவரே, உமாதேவியாரது திருக்குமாரரே, திருச்செந்திலதிபா, மரண காலத்தில் பொறிபுலன்கள் கலங்கி அடியேன் செயலற்றுக் கிடக்கின்ற காலத்தில், என் மனைவி மக்கள் கதறியழ, இயமன் என்னை அழைக்கா வண்ணம் தேவரீரது திருவடியிற் சேர்த்தருள்வீர் – என்று அருணகிரிநாதர் அருளிய இருபத்தியெட்டாவது திருச்செந்தூர் திருப்புகழ் இது.

அறிவழிய மயல்பெருக வுரையுமற விழிசுழல
அனலவிய மலமொழுக …… அகலாதே
அனையுமனை யருகிலுற வெருவியழ வுறவுமழ
அழலினிகர் மறலியெனை …… யழையாதே
செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர்
திருவடியி லணுகவர …… மருள்வாயே
சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழஇரு
செவிகுளிர இனியதமிழ் …… பகர்வோனே
நெறிதவறி யலரிமதி நடுவன்மக பதிமுளரி
நிருதிநிதி பதிகரிய …… வனமாலி
நிலவுமறை யவனிவர்க ளலையஅர சுரிமைபுரி
நிருதனுர மறஅயிலை …… விடுவோனே
மறிபரசு கரமிலகு பரமனுமை யிருவிழியு
மகிழமடி மிசைவளரு …… மிளையோனே
மதலைதவ ழுததியிடை வருதரள மணிபுளின
மறையவுயர் கரையிலுறை …… பெருமாளே.

இத்திருப்புகழின் பொருளாவது – சிவபெருமானுக்கு நிகர் என்று எல்லோராலும் கருதப்படுகின்றவரும், பொதியமலையில் தவம் புரிந்துகொண்டு வீற்றிருப்பவருமாகிய அகத்திய முனிவருக்கு, அவருடைய உள்ளம் மகிழவும், இருசெவிகளும் குளிரவும், இனிமையான தமிழ் மொழியை உபதேசித்தருளியவரே!

அறநெறி தவறி சூரியன், சந்திரன், இயமன், இந்திரன், அக்கினி, நிருதி, குபேரன், துளபமாலையைத் தரித்துக்கொண்டுள்ள கரிய திருமேனியை யுடைய திருமால், நிலைபெற்றுள்ள பிரமதேவர், இவர் (சிறைப்பட்டு) நெடுநாளாக ஏவல் புரிந்து கொண்டு ஏங்கியலையுமாறு அரசாட்சி செய்த சூரபன்மனது மார்பு பிளந்தழியுமாறு வேலாயுதத்தை விடுத்தருளியவரே!

மான் மழுவைக் கரத்தில் தாங்கிக் கொண்டுள்ள சிவபெருமானும் உமையம்மையாரும் கண்களிக்க உமாதேவியார் திருமடித்தலத்தின் கண் வளருகின்ற இளையப் பிள்ளையாரே!

மரக் கலங்கள் தவழுகின்ற சமுத்திரத்தில் தோன்றுகின்ற முத்துமணிகள் மணற்குன்றுகள் மறையுமாறு உயர்ந்துள்ள கடற்கரையாகிய திருச்சீரலைவாயில் எழுந்தருளியுள்ள பெருமையின் மிக்கவரே!

(மரணகாலத்தில் அடியேனுடைய) அறிவு அழியவும், மயக்கம் உண்டாகவும், (கை கால்கள் அசைவற்றதோடு) பேசுவதும் ஒழியவும், கண்கள் சுழலவும், உடம்பிலுள்ள உதராக்கினித் தணியவும், தன்னாலே மலம் நீராகி ஒழுகவும், இந்நிலையிலும் என்னைவிட்டு நீங்காமற்படிக்குத் தாயாரும் மனைவியும் அருகிலிருந்து பயந்து ஓவென்று கதறியழவும், சுற்றத்தார்களும் அழவும், நெருப்பைப்போல் கொதித்துக்கொண்டு வரும்படியான கூற்றுவன் என்னைத் தனது நரகலோகத்திற்கு அழைக்கா வண்ணம், அடியேனை நெருங்கியுள்ள நல்வினைத் தீவினைகளாகிய இருவினைகளும், அந்தக்கரணங்களும், பொருந்தியுள்ள ஐம்புலன்களும் செயலற்று நீங்க, தேவரீரது திருவடி மலர்களில் அடியேன் சேருமாறு வரம் அருள்புரிவீர் – என்பதாகும்.

இத்திருப்புகழில் அகத்தியரின் கதையும் இறக்கின்ற காலத்திலும் இறந்த பின்னரும் நாம் எப்படி துன்பப்படுவோம் என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது.

திருப்புகழ் கதைகள்: அகத்தியருக்கு தமிழை உபதேசித்தவர்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply