திருப்புகழ் கதைகள்: பாதுகை தர அருள்புரி!

ஆன்மிக கட்டுரைகள்

thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ் கதைகள் – பகுதி 56
அனிச்சம் கார்முகம் (திருச்செந்தூர்) திருப்புகழ்
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –

சேது பந்தனம் புரிந்து, இராவண வதஞ்செய்த இரகுவீரரது மருகரே, மதி, நதி, பாம்பு, ஆத்தி, வில்வம் இவைகளைத் தலைமேல் அணிந்திருக்கும் சிவமூர்த்தியின் புதல்வரே, வேடுவரஞ்ச வேங்கை மரமாகிய கந்தப் பெருமானே, வள்ளி நாயகி அன்பு கொள்ளும் வேலாயுதரே, செந்திலம்பதியில் வாழும் பெருமாளே, மாதராசையால் மயங்கும் பாவியும், வினைச் சண்டாளனும், செல்வச் செருக்கு மூடிய மூடனும், புலாலுண்ணும் பாழனும், மோகவிகாரனும், அறநெறியில் ஒழுகாத மூதேவியுமாகிய அடியேனை அழைத்து உமது பாதுகையைத் தர அடியேன் அருள் பெறுவேனோ? – என அருணகிரியார் வேண்டும் இத்திருப்புகழ் திருச்செந்தூர் தலத்திற்குரியது.

இது திருப்புகழின் இருபத்தியொன்பதாம் பாடல். இனிப் பாடலைக் காண்போம்.

அனிச்சங் கார்முகம் வீசிட மாசறு
துவட்பஞ் சானத டாகம்வி டாமட
அனத்தின் தூவிகு லாவிய சீறடி …… மடமானார்

அருக்கன் போலொளி வீசிய மாமர
கதப்பைம் பூணணி வார்முலை மேல்முகம்
அழுத்தும் பாவியை யாவியி டேறிட …… நெறிபாரா

வினைச்சண் டாளனை வீணணை நீணிதி
தனைக்கண் டாணவ மானநிர் மூடனை
விடக்கன் பாய்நுகர் பாழனை யோர்மொழி …… பகராதே

விகற்பங் கூறிடு மோகவி காரனை
அறத்தின் பாலொழு காதமு தேவியை
விளித்துன் பாதுகை நீதர நானருள் …… பெறுவேனோ

முனைச்சங் கோலிடு நீலம கோததி
அடைத்தஞ் சாதஇ ராவண னீள்பல
முடிக்கன் றோர்கணை யேவுமி ராகவன் …… மருகோனே

முளைக்குஞ் சீதநி லாவொட ராவிரி
திரைக்கங் காநதி தாதகி கூவிள
முடிக்குஞ் சேகரர் பேரரு ளால்வரு …… முருகோனே

தினைச்செங் கானக வேடுவ ரானவர்
திகைத்தந் தோவென வேகணி யாகிய
திறற்கந் தாவளி நாயகி காமுறும் …… எழில்வேலா

சிறக்குந் தாமரை யோடையில் மேடையில்
நிறக்குஞ் சூல்வளை பால்மணி வீசிய
திருச்செந் தூர்வரு சேவக னேசுரர் …… பெருமாளே.

இத்திருப்புகழின் பொருளாவது – போருக்குரிய சங்குகள் போல ஓ என ஒலித்துக்கொண்டிருக்கும் நீல நிறம் பொருந்திய பெரிய அடலில் அணை கட்டி பகைவர்களுக்கு அஞ்சாத இராவணனது மணிமகுடந் தரித்துள்ள பல தலைகளும் அற்றுவிழ ஒரே ஒரு கணையை ஏவிய ரகுவீரராகிய ஸ்ரீராமபிரானது மருமகராக எழுந்தருளி இருப்பவரே; பாற்கடலில் தோன்றிய குளிர்ந்த பிறைச் சந்திரனையும், பாம்பையும் விசாலமானதும் அலைகளை உடையதுமாகிய கங்கா நதியையும், ஆத்தி மலரையும், வில்வத்தையும் தரித்துக் கொண்டுள்ள சடாமகுடத்தையுடைய சிவபெருமானது பெருங்கணையால் (உலகம் உய்யும் பொருட்டு) அவதரித்த முருகப் பெருமானே!

arunagiri muruga peruman
arunagiri muruga peruman

தினைப்பயிர் விளையும் செழுமையான கானகத்தில் வசிக்கும் (நம்பி முதலிய) வேடுவர்கள் (புதிதாகத் தோன்றியதால்) “இது ஏது” என்று திகைப்புற்று “ஐயோ! இதற்கு என் செய்வோம்” என்று கூறும்படி வேங்கை மரமாகி நின்ற வல்லபமுடைய கந்தமூர்த்தியே! வள்ளி நாயகியார் அன்புறும் கட்டழகில் சிறந்த வேலாயுதப் பெருமானே!

மலர்களுள் சிறந்த தாமரை ஓடைகளிலும் உப்பரிகைகளிலும் நல்ல நிறம் பொருந்திய சினைச்சங்குகள் பால்போன்ற வெண்ணிற முத்துக்களைக் கொழிக்கும் கடற்கரையில் விளங்கும் திருச்செந்தூர் என்னுந் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள வீரரே! தேவர்களுக்குள் பெருமையிற் சிறந்தவரே!

தரும நெறியில் நின்று ஒழுகாத மூதேவியுமாகிய அடியேனைத் தேவரீர் திருவருட் பெருக்கமுடையவராதலால் வலிந்து அழைத்து தமது திருவடியிலணிந்துள்ள பாதுகைகளை என் முடிமீது சூட்ட அடியேன் அந்த அனுக்கிகரத்தைப் பெறுவேனோ? – என்பதாகும்.

இத்திருப்புகழின் ஐந்தாவது பத்தியில் அருணகிரியார் மூன்று வரிகளில் சொல்லி முடித்து விடுகிறார். அதனைப் பற்றி நாளைக் காணலாம்.

திருப்புகழ் கதைகள்: பாதுகை தர அருள்புரி! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *