பிரம்ம ஞானத்தை போதிக்கும் ஒரே மதம்!

ஆன்மிக கட்டுரைகள்

panduranga
panduranga

பகிரமபட்டர், பண்டரிபுரம் அருகே ஒரு சிறு கிராமத்தில் பிறந்தார், ஒரு நாள் உணவில் உப்பு குறைவாக உள்ளது என மனைவியிடம் கடும் கோபம் கொண்டார்.

அவரது மனைவியோ, சுவாமி! உப்பு சற்று குறைவாக இருந்தது தவறுதான், அதற்காக நீங்கள் சினம் கொள்வது தான் எனக்கு வியப்பாக உள்ளது. ஞான மார்க்கத்தை போதிக்கும் தாங்கள் இன்னும் அஞ்ஞான இருளில் மூழ்கிக் கிடக்கின்றார்கள்! அது ஏன் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.

ஐம்புலன் அடக்கத்தை பெற்று வாழ வேண்டிய தாங்கள் நாவின் சுவைக்கு அடிமையாகிவிட்டீர்கள். நாவின் சுவையை வெறுத்து ஒதுக்கினால்தானே நம்முள் இருக்கும் நாதனின் திருத்தாளினை சேவிக்க முடியும், தாங்களுக்கு தெரியாத சாஸ்திரத்தையா இந்த எளியவள் சொல்லிவிடப் போகிறேன் என்றார்.

மனைவியின் தத்துவ விளக்கம் கேட்டு பகிரமபட்டர் சற்று நேரம் மௌனம் கொண்டார். அவர் உள்ளத்தில் ஒரு மறுமலர்ச்சி எண்ணத்திலோ ஒரு மனமாற்றம் தோன்றியது.

கணநேரம் சிலையாக அமர்ந்துவிட்டார், சற்று நேரத்தில் சுயநினைவு பெற்று எழுந்தார். கைகழுவிவிட்டு மனைவி முன்வந்து கை கூப்பினார்.

மனைவி அவரது கால்களைப் பற்றிக் கொண்டு அபச்சாரம்! அபச்சாரம்! சுவாமி என்ன இது! என்று கேட்டார்.
பகிரமபட்டர் அவர் மனைவியின் முன்நின்று, பெண்ணே! இத்தனை நாளும் நீ எனக்கு மனைவியாக இருந்தாய், இன்று முதல் நீ குருவின் ஸ்தானத்தை பெற்றுவிட்டாய், என் அகக்கண்களைத் திறந்து ஞானவாசலுக்கு வழிகாட்டினாய் என்று கூறினார்.

pakirama patter
pakirama patter

இனியும் நான் குடும்ப பந்தத்தில் கட்டுண்டு கிடப்பது நல்லதல்ல, இத்தனை நாளும் சம்சார சாகரத்தில் மூழ்கி கரையேற வழிதெரியாமல் தவித்த எனக்கு நீ மனைவியாக மட்டும் இல்லாமல் “மரக்கலமாக வந்தாய்” உன்னை எத்தனை போற்றினாலும் தகும் என்றெல்லாம் பலவாறு போற்றினார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பகிரமபட்டர் குடும்ப வாழ்க்கையை நடத்த விரும்பவில்லை, ஒரு நாள் நாகநாதர் என்னும் ஞானபண்டிதரை தரிசிக்கும் பேறு கிட்டியது.

நாகநாதர் அஷ்டமா சித்திகளையும் பெற்ற மகாஞானி, அவருக்கு ஏராளமான சீடர்கள் இருந்தனர். அவரது சீடர்கள் “ஸ்ரீராம நாமத்தை” பேச்சாகவும் மூச்சாகவும் கொண்ட பக்தர்கள்.

நாகநாதர் பாதங்களில் வீழ்ந்து பணிந்து செய்வித்தார் பகிரமபட்டர். தன்னையே யார் என்று உணர முடியாத நிலையில் தவித்துக்கொண்டிருந்த பகிரமபட்டர் தம்மைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் ஒன்றுவிடாமல் நாகநாதரிடம் கூறினார்.
நாகநாதர், பகிரமபட்டரிடம் மிகவும் பரிதாபம் கொண்டார்,

உடனே நாகநாதர், ஸ்ரீராம நாமத்தை ஜெபித்தவாறு அவருக்கு நற்போதனைகள் கூறினார்.
உலகில் சமயங்கள் பல இருந்தாலும் “ஆத்மா” என்பது ஒன்று தான், உடல் மாறலாம் ஆனால் ஆன்மா மாறுவதில்லை, ஆன்மாவிற்கும்-பிரம்மத்திற்கும் உள்ள தொடர்பை தெரிந்து கொள்ளவேண்டும்.

ஆன்மா “பிறப்பு-இறப்பு” அற்றது அது நித்தியமானது, ஆத்மாவே பிரம்மமாகும் என்ற அத்வைத சித்தாந்தத்தை உணரவேண்டும், அந்த பிரம்ம ஞானத்தை போதிக்கும் ஒரே மதம் இந்து மதம்.

அது ஒரு ஆலமரம்! அந்த ஆலமரத்தடியில் அமர்ந்து தியான நிலை பெற்றால் ஞான பலன் தானே வரும்” என பலவாறு கூறினார்.

பிறகு பகிரமபட்டருக்கு ஆத்ம போதனைகளை செய்த நாகநாதர் அவருக்கு “ராம நாமம்” எனும் தாரக மந்திரத்தை குருமார்க்கமாக உபதேசம் செய்தார்.

பிறகு நாகநாதர், பகிரமபட்டரே! இன்று முதல் மனதில் எந்த ஒரு உலக விசயங்களுக்கும் அடிமையாகாது அந்த கிருஷ்ண பரமாத்மாவான பாண்டுரங்கனுக்கே அடியவன் என்ற ஒரே சிந்தனையோடு பக்தி செய்து பகவானின் திருவடியை அடைவாயாக! என வரமளித்து சென்றார்

பகிரமபட்டரும் பரமாத்மாவான பாண்டுரங்கனின் திருவடியை புகழ்ந்து பல காலம் பாடி சேவை செய்து பாண்டுரங்கன் பொற்பதம் அடைந்தார்

பிரம்ம ஞானத்தை போதிக்கும் ஒரே மதம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply