திருப்புகழ் கதைகள்: அகலிகைக்கு அருளியது!

ஆன்மிக கட்டுரைகள்

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ் கதைகள் பகுதி 59
அனிச்சம் கார்முகம் (திருச்செந்தூர்) திருப்புகழ்
திருப்புகழில் இராமாயணம் தொடர்ச்சி
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இதற்கிடையில் ராமர் செய்த ஓர் அற்புதமான நிகழ்ச்சியை, அகலிகைக்கு அருள் செய்ததை அருணகிரியார் பல பாடல்களில் சொல்லியிருக்கிறார். அகலிகை கல்லாகிக் கிடந்ததாக வால்மீகி சொல்லவில்லை. ஆனால், கம்பர் சொல்கிறார். அவரை அடியற்றி அருணகிரி நாதரும் அப்படியே செய்கிறார். ஆனால், அதிலும் தனது தனித் தன்மையை நிலை நாட்ட அவர் தவறவில்லை.

யாகத்துக்குக் காவலாக மட்டுமின்றி கணவரின் சாபத்தால் கல்லாகிக் கிடக்கும் அகலிகையின் துயரத்தைத் தீர்ப்பதற்காகவும் ராமர், விஸ்வாமித்திரருடன் காட்டுக்குச் சென்றார்- என முன்கூட்டியே தெளிவாகச் சொல்கிறார் அருணகிரிநாதர்.

கல்லிலே பொற்றாள் படவேயது
நல்லரூ பத்தே வரக் கானிடை
கௌவை தீரப் போகும் இராகவன்
– (கொள்ளையாசை) திருப்புகழ், 483, சிதம்பரம்

இதில், ‘கல்லாக இருந்த அகலிகை பெண்ணாக மாறினாள்’ என்பது தெளிவாக இல்லையே என நினைப்பவர்களுக்கு,

க(ல்)லின் வடிவமான
அகலிகை பெ(ண்)ணான
கமலபத மாயன்
– (குலைய) திருப்புகழ் 669, விரிஞ்சிபுரம் – என்று விளக்கி, ராமரின் திருவடித் தாமரைகளைப் புகழ்கிறார் அருணகிரிநாதர்.

இதைப் போல, சீதா கல்யாணத்தின்போதும் ஓர் அற்புதமான நிகழ்ச்சியை அருணகிரிநாதர் சொல்கிறார். யாரும் எடுக்க முடியாத, மிதிலையில் இருந்த வில்லை, ஒரு நொடிப் பொழுதில் ராமர் எடுத்து முறித்து விட்டார். அவர் அதைத் தன் காலில் வைத்து வளைத்ததையோ, நாண் ஏற்றியதையோ யாருமே பார்க்கவில்லை.

ராமர் வில்லை எடுத்ததைப் பார்த்தார்கள். வில் முறிந்த ஓசையைக் கேட்டார்கள். அவ்வளவுதான். வில் வளைக்கும் நிகழ்ச்சி அவ்வளவு சுலபத்தில் சீக்கிரமாக நடந்துவிட்டது. இதை அப்படியே நேரில் பார்ப்பது போல எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார் எனக் காட்டுகிறார் கம்பர்.

agalika
agalika

இதையே இன்னும் கொஞ்சம் நெருக்கமாக நமக்கருகில் கொண்டு வருகிறார் அருணகிரிநாதர். கம்பர், ‘எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்’ என்றாரே தவிர, வில் உடையும் ஒலியை அவர் பதிவு செய்ய வில்லை. அந்தக் குறையை அருணகிரிநாதர் நீக்குகிறார்:

சிலைமொ ளுக்கென முறிபட மிதிலை யிற்சந கமனருள்
திருவி னைப்புண ரரிதிரு …… மருகோனே

– திருப்புகழ் 799 முலைகுலுக்கிகள் (திருவிடைக்கழி)

ராமர் அந்த வில்லை முறித்த போது ‘மொளுக்’கென்று சத்தம் கேட்டதாக அருணகிரியார் பாடுகிறார். வில் வளைத்தல் என்பது சீதா கல்யாணத்துக்காகவே. ஆனால், அதன் பிறகு பல பாடல்களைத் தாண்டித்தான், சீதா கல்யாண நிகழ்ச்சியைக் கொண்டு வருகிறார் கம்பர்.

ஆனால், இதே திருப்புகழில் இதே பத்தியில் அருணகிரிநாதர் சீதாபிராட்டியாரின் திருமணக் காட்சியைச் சொல்லிவிடுகிறார். இத்துடன் அருணகிரிநாதரின் ராமாயணத்தில், ‘பால காண்டம்’ நிறைவுற்று, ‘அயோத்யா காண்டம்’ தொடங்குகிறது.

அயோத்யா காண்ட நிகழ்ச்சிகள்

சீதா கல்யாணத்துக்குப் பின் முக்கியமான நிகழ்ச்சி, ராமரின் பட்டாபிஷேகம் தடைப்பட்ட நிகழ்ச்சியாகும். அதற்குக் காரணமான கைகேயியின் சொல்லை ராமர் மீறாமல் இருந்தார். இதை அருணகிரி நாதர் சொல்லும் அழகைப் பாருங்கள்.

தாடகையு ரங்க டிந்தொளிர்
மாமுனிம கஞ்சி றந்தொரு
தாழ்வறந டந்து திண்சிலை …… முறியாவொண்
ஜாநகித னங்க லந்தபின்
ஊரில்மகு டங்க டந்தொரு
தாயர்வ சனஞ்சி றந்தவன் …… மருகோனே
திருப்புகழ் 968 ஆடல் மதன் அம்பின் (ஸ்ரீ புருஷமங்கை)

தாடகை என்னும் அரக்கியின் வலிமையை அழித்து, விளங்குகின்ற பெருமை வாய்ந்த விசுவாமித்ர முனிவரின் யாகத்தைச் சிறப்புற நடத்திக் கொடுத்து, ஒப்பற்ற (அகலிகையின்) சாபம் நீங்குமாறு (கால் துகள் படும்படி) நடந்து, (ஜனக ராஜன் முன்னிலையில்) வலிமையான சிவதனுசை முறித்து, இயற்கை அழகு பெற்ற சீதையை மணம் புரிந்து மார்புற அணைந்த திருமணத்துக்குப் பிறகு, அயோத்தியில் தன் பட்டத்தைத் துறந்து, ஒப்பற்ற

(மாற்றாந்) தாயாகிய கைகேயியின் சொற்படி நடந்த சிறப்பைக் கொண்டவனாகிய இராமனின் மருகனே என்று இநிகழ்ச்சியை அருணகிரியார் பாடுகிறார்.

திருப்புகழ் கதைகள்: அகலிகைக்கு அருளியது! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *