இன்று நிர்ஜல ஏகாதசி: நூறு தலைமுறை பாபம் நீங்கும்!

ஆன்மிக கட்டுரைகள் விழாக்கள் விசேஷங்கள்

vishnu
vishnu
vishnu

மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை மற்றும் தேய்பிறை ஏகாதசிகளில் பெருமாள் வழிபாட்டிற்கான சிறப்புமிக்க தினங்களாக இருக்கின்றன. அப்படியான ஒரு அற்புதமான ஏகாதசி தினமாக ஆனி மாத வளர்பிறை ஏகாதசி தினம் இருக்கிறது.

ஒரு வருட காலத்தில் வருகின்ற மற்ற ஏகாதசி தினங்களில் விரதம் இருக்க முடியாதவர்கள் இந்த ஆனி மாத ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் வாழ்வில் உயரிய நிலையை பெறலாம். இந்த ஏகாதசி திதியில் நீர் கூட அருந்தாமல் உபவாசம் மேற்கொண்டு பெருமாளை வழிபடுபவர்கள், அவர்கள் மறைந்த பிறகு மோட்ச நிலை உறுதியாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நீர் அருந்தாமல் இந்த ஆனி வளர்பிறை ஏகாதசி விரதம் மேற்கொள்வதால் இந்த ஆனி வளர்பிறை ஏகாதசி நிர்ஜல ஏகாதசி எனவும் அழைக்கின்றனர்.

நிர்ஜல ஏகாதசி தினத்தன்று தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்க நாணயங்களை தானம் செய்த புண்ணியப் பலன்களை பெறுகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளன. நிர்ஜல ஏகாதசியின் பெருமையை கேட்பவர்கள் கூட இறப்பிற்குப் பின் பெருமாள் அருளும் வைகுண்ட பதவியை அடைவார்கள் எனவும் கூறுகிறது.

பீமனே அனுஷ்டித்த விரதம் என்பதால் இந்த விரதம் ‘பீம விரதம்’ என்றும் பீம ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது.

nirjala ekathasi - 1

பாண்டவர்களில் மூத்தவரான தர்மபுத்திரர் ஒரு முறை வியாசரை தரிசித்தபோது அவரை வணங்கி குருதேவா, துன்பங்கள் பலப்பல. அவை எப்போது எப்படி மனிதர்களை பாதிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. கலியுகத்திலோ, கேட்கவே வேண்டாம். அடை மழை போல, நேரம் காலம் பாராமல் அனைவரையும் படுத்தும். இந்த துன்பங்கள் நீங்கும்படியான ஒரு சுலபமான வழியைச் சொல்லுங்கள் என வேண்டினார்.

தர்மபுத்திரா, எல்லாத் துன்பங்களையும் நீக்கக் கூடியது ஏகாதசி விரதம் மட்டுமே. ஏகாதசியன்று, உபவாசம் இருந்து பெருமானை பூஜிப்பதைத் தவிர சுலபமான வழி வேறெதுவும் இல்லை. சகல விதமான சாஸ்திரங்களும் இதைத் தான் சொல்கின்றன” என்று பதில் கூறினார் வியாசர்.

அருகில் இருந்து இதைக் கேட்ட பீமன், “உத்தமரான முனிவரே, என்னுடன் பிறந்தவர்கள் எல்லாம் ஏகாதசி விரதம் இருக்கிறார்கள். என் தாயும் மனைவியும்கூட ஏகாதசி விரதம் இருக்கிறார்கள்.

அவர்கள் எல்லோரும் என்னையும் ஏகாதசி விரதம் இருக்க சொல்கிறார்கள் என்னால் செய்ய கூடியதா அது? ஒரு வேளை சாப்பிட்டுவிட்டு, அடுத்த வேளை சாப்பிடாமல் இருப்பதே என்னால் முடியாது. என்னைப் போய் முறையாக உபவாசம் இருந்து ஏகாதசி விரதம் இரு என்றால் நடக்கக் கூடியதா இது. விருகம் என்னும் ஒரு தீ என் வயிற்றில் இருக்கிறது.

ஏராளமான உணவைப் போட்டால் ஒழிய, என் வயிற்றில் இருக்கும் நெருப்பு அடங்காது. வருடத்துக்கு ஒரே ஒரு நாள் என்னால் உபவாசம் இருக்க முடியும். எனவே எனக்குத் தகுந்தாற்போல நான் எல்லா விதமான ஏகாதசிகளின் பலனையும் பெரும் விதம் ஓர் ஏகாதசியை எனக்குச் சொல்லுங்கள் என வேண்டினான்.

அதற்கு வியாசர் பகவான், “கவலைப்படாதே பீமா. உனக்காகவே அமைந்ததைப் போல ஒரு ஏகாதசி இருக்கிறது. ஆனி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி அன்று, தண்ணீர்கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும். அதனாலேயே அது நிர்ஜலா ஏகாதசி எனப்படுகிறது.

அந்த ஏகாதசி விரதத்தை நீ கடைப்பிடி” என வழிகாட்டினார் வியாசர். வியாசரை வணங்கிய பீமன் நிர்ஜல ஏகாதசி அன்று தண்ணீர் கூடக் குடிக்காமல் விரதம் இருந்தான். பீமன் விரதம் இருந்த அந்த ஏகாதசி “பீம ஏகாதசி” என்றும் அழைக்கப்படலாயிற்று. துன்பங்கள் அனைத்தையும் போக்கும் ஏகாதசி இது. மறுநாள் துவாதசி அன்று உணவு உண்டான். அன்று முதல் அந்த துவாதசி “பாண்டவ துவாதசி” என்றும் அழைக்கப்படுகிறது.

நிர்ஜல ஏகாதசி விரத பலன்

நிர்ஜல ஏகாதசி விரதமிருப்போர் எமதர்மராஜாவை சந்தித்து அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்லி தண்டனை அனுபவிக்க வேண்டாம். வைகுண்டத்தின் தூதுவர்கள் இறப்பிற்கு பின் நேரடியாக வைகுண்டத்திற்கு அழைத்து செல்வார்கள்.

புனித நதிகளில் நீராடிய பலனும், பலவிதமான தானங்களை அளித்த பலனும் இந்த ஏகாதசி விரதத்தின் மூலம் கிடைக்கும். நிர்ஜல ஏகாதசியின் மகிமையைப் பற்றி கேட்பவருக்கு சூரிய கிரகணத்தில் வரும் அமாவாசை திதியில் சிரார்த்தம் செய்த பலன் கிட்டும். ஒரு பிராமணனை கொன்ற பாபம், தொடர்ந்து பொய் சொன்ன பாபம், மது அருந்திய பாபம், தன் குருவை மதிக்காமல் ஏளனம் செய்த பாபம் இவற்றிலிருந்து விடுபடலாம்.

இந்த ஏகாதசி விரதமிருப்போர் தங்கள் பாபத்திலிருந்து விடுபடுவார்கள்.அவர்களின் நூறு தலைமுறைக்கான மூதாதையர்களும் தங்கள் பாப சுமையிலிருந்து விடுபடுவார்கள்.

இன்று நிர்ஜல ஏகாதசி: நூறு தலைமுறை பாபம் நீங்கும்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply