பேராசை பெரும் நஷ்டம்! பெருமாள் தந்த அதிர்ஷ்டம்!

ஆன்மிக கட்டுரைகள்

guruvayurappan - 2

தாய் – தந்தை யாருமின்றி ஆதரவற்ற நிலையில் இருந்த காஷு என்ற பத்து வயது சிறுவன் தொடர்ந்தாற்போல் மூன்று தினங்கள் உணவில்லாமல் இருக்க நேரிட்டான்.

பசியின் கொடுமையைத் தாங்கவியலாத அவன் அருகிலுள்ள நதிக்குச் சென்று அதில் மூழ்கி தன்னை மாய்த்துக் கொள்ள நினைத்தான்.

அப்போது நாரத முனிவர் அவன்முன் தோன்றி ஒரு பாத்திரத்தைக் கொடுத்து, அவன் விரும்பும் போதெல்லாம் அந்த அட்சய பாத்திரத்திலிருந்து உணவு கிட்டும் என்று கூறினாராம்.

அவனும் அதிலிருந்து தேவையான போதெல்லாம் உணவை வரவழைத் துச் சாப்பிட்டு பசியாறிக் கொண்டிருந்தான்.

இந்நிலையில் ஒருநாள் காஷுவுக்குப் பேராசை ஏற்பட்டது. மீண்டும் தான் தண்ணீரில் மூழ்குவதுபோல நடித்து, நாரத முனிவரை வரவழைத்து வீடு, செல்வம் போன்றவற்றை அடையலாம் என்று நினைத்தான்.

அதன்படி நதியில் சென்று அவன் மூழ்கியபோது நாரத முனிவரும் வரவில்லை; அட்சய பாத்திரத்தையும் காணவில்லை.

பேராசையால் தனக்கு நேர்ந்த துயரத்தை எண்ணிய காஷு, இறைவனின் புனிதப் பெயர்களை உச்சரித்து அவன் தியானத்திலேயே தனது வாழ்நாளைக் கழிக்க ஆரம்பித்தான்.

அவனது நிலையைக் கண்டு வருந்திய லட்சுமிதேவி, உடனடியாக அந்தச் சிறுவனுக்கு உதவி செய்யுமாறு பகவானிடம் வேண்ட, அவரும் அதற்கு இணங்கினார்.

சுயநினைவை இழந்து மயங்கிக் கிடந்த காஷுவுக்கு பகவான் காட்சி கொடுக்க, அவன் எழுந்து நின்று தன்னை அவரது திருவடிகளில் ஆட்கொள்ளுமாறு வேண்டினான்.

திருமாலும் அதை ஏற்றுக் கொண்டு, “”கலியுகத்தில் நீ ஒரு வாகை மரமாகப் பிறப்பாய். அப்போது நான் குருவாயூர் கோவிலில் குருவாயூரப்பனாகக் காட்சி தருவேன்.

ஒவ்வொரு நாளும் காலையில் எனக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் முடிந்தவுடன் என்னை வாகைத் தூளினால் தேய்த்து தூய்மை செய்வார்கள்.

அந்த வகையில் நீ எனக்கு சேவை செய்வாய். இந்த வாகை சார்த்து நல்லெண்ணெய், வாகைப் பொடி அபிஷேகத் தீர்த்தம் மூலமாக ஆயிரக்கணக்கான பக்தர் களின் தோல் நோய்களும் தீரும்” என்று கூறி சிறுவன் காஷுவையும் ஆசீர்வதித்து விட்டு மறைந்தார்.

பேராசை பெரும் நஷ்டம்! பெருமாள் தந்த அதிர்ஷ்டம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply