திருப்புகழ் கதைகள்: பதினொரு வகை நடனங்கள் (1)

ஆன்மிக கட்டுரைகள்

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ் கதைகள் பகுதி 95
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

கொம்பனையர் – திருச்செந்தூர்
பதினொருவகை நடனங்கள்-1

அற்புதமான சிலப்பதிகாரக் காவியத்தில் மாதவி ஆடிய 11 வகை நடனங்களை உரைகாரர்கள் நமக்கு அளிக்கின்றனர். அத்தனையும் அற்புதமான இந்துமத புராணக் கதைகளோடு தொடர்புடையவை. 2000 ஆண்டுகளுக்கு முன், தமிழர்கள் வாழ்வில் இந்துமதம் எப்படி இரண்டறக் கலந்திருந்தது என்ற பேருண்மை இதன் மூலம் வெளிப்படுகிறது. விஷ்ணு, சிவன், துர்க்கை, முருகன், கண்ணன் ஆகியோரின் அழகிய 11 நடனங்களை மாதவி ஆடினாள்.

இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலகினில் புணர்ந்து
பதினோ ராடலும் பாட்டும் கொட்டும்

என்றார் இளங்கோவடிகள். மாதவி இந்திர விழாவில் ஆடியதாக இப்பதினோராடல்களும் அமைகின்றன. அல்லியம், கொடுகொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல்லியம் ஆகிய ஐந்தாடல்களும் நின்றாடல்களாகும்.

அல்லியம் இது கண்ணனால் ஆடப்பட்ட ஆடலாகும். தன்னுடைய தாய்மாமனாகிய கம்சனின் மாளிகையில் நுழையும்போது குவலயாபீடம் என்னும் யானையின் செருக்கை அடக்கி வதம் செய்தபொழுது கண்ணன் ஆடிய ஆடலாகும். இது வீரச்சுவை நிறைந்த ஆடலாகத் திகழ்கிறது. மாதவி கண்ணன் உருக்கொண்டு யானையோடு போர் புரிவது போல் நடனமாடினாள். ஒரு விலங்கைக் கொல்லும் பொழுது அதனை எம்முறையில் ஆடிக் கொல்ல வேண்டுமோ அதற்கேற்ற தாள அமைதியும் அபிநயத்தையும் கொண்ட தனி ஆடலாக அமைந்திருந்தது.

கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள், அல்லி

ஆனாலும் வலிமை மிக்கவனாகக் கண்ணனை நிறுத்தி அவன் அருள் வலிமையால் பகை வெல்லும் போது,

ஆடல் இன்றி நிற்பவை எல்லாம்
மாயோன் ஆடும் வைணவ நிலையே

என்பார். அதாவது ஆடல் அபிநய உறுப்புகள் முகம், மார்பு, கை, கால் தொழில் செய்யாது முடங்கி நிற்பதாக அவை பொருளுணர்த்தும்.

கொடுகொட்டி ஆடல் சிவபெருமான் ஆடிய ஆடலாகும். தாரகாட்சகன், கமலாட்சன், வித்துவன்மாலி என்னும் அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் முப்புரங்களையும் எரித்தார். இதன் வெற்றிகளிப்பால் கைகொட்டி ஆடிய ஆடல் கொடுகொட்டியாயிற்று. ஆடுதலில் கொடுமையுடையதால் இவ்வாட்டத்திற்கு கொடுகொட்டி என்று அடியார்க்கு நல்லார் பெயரிடுகிறார். கொடுங்கொட்டி – கொடுகொட்டி என விகாரமாயிற்று என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார்.

கலித்தொகை கடவுள் வாழ்த்துப் பாடலில் சிவன் கொடுகொட்டி ஆடிய குறிப்புக் காணப்படுகிறது. இதில் சிவபெருமான் ஆடியதாகவும் உமையவள் தாளம் இசைத்ததாகவும் குறிப்பிடுகிறது. சிலம்பில் மாதவி தன் உடம்பில் ஒரு பகுதி சிவனாகவும், மறு பகுதி உமையவள் ஆகவும் வேடம் பூண்டு ஆடிய செய்தி உணரப்படுகிறது.

உமையவள் ஒருதிறனாக ஓங்கிய
இமையவள் ஆடிய கொடுகொட்டி ஆடலும்

அசுரர்கள், தேவர்கள் வசிக்கும் இடங்களுக்கு நெருப்பு வைக்கின்றனர். தேவர்கள், சிவனை வேண்டுகிறார்கள். தேவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, பாரதி அரங்கமான பைரவப் பார்வதியின் சுடுகாட்டில் ஒரு கூறாக நின்று பாணி, தூக்கு, சீர் என்னும் தாளத்துடன் சிவன் நெருப்பாக ஆடுகிறான். அசுரர்கள் வெந்து விழுகின்றனர். அவ்வமயத்தில் சிரித்துக் கைகொட்டிச் சிவன் ஆடியதாக இக்கூத்து.

குடைக் கூத்து முருகன் ஆடிய கூத்தாகும். சூரனோடு போர் செய்ய முனைந்த வானவர் படையஞ்சி சோர்வுற்றபோது முருகன் ஒருமுக எழினியாக தோன்றி தம் குடையைச் சாய்த்துச் சாய்த்து ஆட்டிச் சூரனின் வலிமையை இழக்கச் செய்து வானவர் படையைக் காத்த பொழுது ஆடிய ஆடலாகும். கையில் குடை ஒன்றைப் பிடித்துக் கொண்டு கட்டப்பட்ட கயிற்றில் ஏறி நின்று ஆடுவதையும் குடைக் கூத்தாகக் கருதுகின்றனர். மாதவி முருகன் போல் ஒப்பனை செய்து கொண்டு அரக்கர்களோடு போரிடுவது போலவும் வெற்றிக் களிப்பில் ஆடுவது போல் ஆடினாள். ஒருமுக எழினி எ‌ன்பது மாத‌வி‌யி‌ன் நா‌ட்டிய‌ அர‌ங்கே‌ற்ற‌த்‌தி‌ற்காக அமை‌க்க‌ப்ப‌ட்ட மேடை‌யி‌ல், ஒரு ப‌க்க‌த்‌தி‌லிரு‌ந்து மறு ப‌க்க‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ல்லு‌மாறு ‌அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌திரை ஆகு‌ம்.

anjenear garuden krishnar - 1

குடக்கூத்து திருமாலால் ஆடப்பட்டதாகும். இது பாணாசுரன் அல்லது வாணாசுரன் கதையோடு தொடர்புடையது. பாணாசுரன் சிவபெருமானின் அருளால் ஆயிரங்கைகளையும் நெருப்புமதிலையும் அளவிறந்த வலிமையையும் சிவபெருமான் பரிவாரங்களோடு மாளிகைவாயிலிற் காவல்செய்திருத்தல் முதலிய வரங்களையும் பெற்றான்.

அந்தப் பாணாசுரனுடைய பெண்ணாகிய உஷை என்பவள், ஒருநாள் ஒரு ஆடவனோடு தான் கூடியதாகக் கனாக்கண்டு, அவனிடத்தில் மிக்க ஆசை பற்றியவளாய், தன் உயிர்த்தோழியான சித்திரரேகை மூலமாய் அந்தப் ஆடவனை கிருஷ்ணனுடைய பௌத்திரனான அநிருத்தன் என்று அறிந்துகொண்டாள். அத்தோழியினால் அநிருத்தனைத் தன் அந்தப்புரத்திலே கொணரப் பெற்று அவனோடு போகங்களை அநுபவித்து வருகிறாள். இச்செய்தியை அந்தப் பாணன் காவலாளராலறிந்து தன்சேனையுடன் அநிருத்தனை எதிர்த்து மாயையினாற் பொருது நாகாஸ்திரத்தினாற் கட்டிப் போட்டிருந்தான்.

அப்போது நாரத மகாமுனிவனால் நடந்த வரலாற்றினை அறிந்த ஸ்ரீ கிருஷ்ணபகவான், அநிருத்தனை மீட்டுவர எண்ணி, கருடன்மேல் ஏறிக்கொண்டு, பலராமன் முதலானாரோடு கூடப் பாணபுரமாகிய சோணிதபுரத்துக்கு எழுந்தருளினார். அப்போது அப்பட்டணத்தின் சமீபத்திற் காவல் செய்து கொண்டிருந்த சிவகணங்கள் எதிர்த்து வர, க்ருஷ்ணன் அவர்களையெல்லாம் அழித்து, பின்பு சிவபெருமானாலே ஏவப்பட்டதொரு
ஜ்வரதேவதை பாணனைக் காப்பாற்றுதற்பொருட்டுத் தன்னோடு யுத்தஞ் செய்ய, தானும் ஒரு ஜ்வரத்தை யுண்டாக்கி இதன் சக்தியினாலே அதனைத் துரத்திவிட்டார். (இது ஆண்டிபயாட்டிக், தடுப்பு மருந்து பற்றி உங்களுக்கு நினைவூட்டலாம்.)

பாணாசுரன் என்னவானான் என்பதை நாளைக் காணலாம்.

திருப்புகழ் கதைகள்: பதினொரு வகை நடனங்கள் (1) முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply