சாளக்ராமம்; அறிவியலும் ஆன்மிகமும்!

ஆன்மிக கட்டுரைகள்

salakrama2 - 4
salakrama2 - 2

சாளக்ராமம் வீட்டில் வைத்து வழிபடுவது, பெரும்பாலான வைஷ்ணவர்களினால் பின்பற்றப்படுவது. சாளக்ராம கற்களினால் ஆனது என்று திருவனந்தபுரத்தில் சயனம் கொண்டிருக்கும் பத்மநாபஸ்வாமியின் மூலமூர்த்தி திருவுருவத்தை சொல்வதுண்டு. அதேபோல் வேறு சில திவ்யதேச பெருமாள்கள், நரசிம்மமூர்த்தி உட்பட சொல்வதுண்டு.

ஒவ்வொரு வைஷ்ணவரும் தமது இல்லத்தில் தவறாமல் வைத்து பூஜை செய்யவேண்டியது சாளக்ராமமும், துளசியும்தான் என்று சொல்வதுண்டு. சாளகிராமங்களின் ஒரேமாதிரியான கருமை நிற வண்ணம் விஷ்ணுவின் வண்ணம் என்றும் சொல்வதுண்டு.

சாளகிராமம் என்பது, நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் காணக்கிடைக்கும் கருப்பு நிற கற்களையே குறிக்கிறது.நேபாளத்தில் மஸ்டாங் மாவட்டத்தில் காளி கண்டகி நதி பள்ளத்தாக்கில், இவை மிக அதிகமாக கிடைக்கின்றன.

புவியியல் ரீதியாக, கண்டகி நதிபிரவாகத்தில் நிறைய பெரும்குழிகள் உள்ளன, நீரோட்டத்தில் அடித்து வரப்படும் பெரும் கற்கள் இந்த குழிகளுக்குள் விழுந்து, சிறிது முதல் பெரிய சுழல்களாக நீரோட்டம் இந்த குழிகளுக்குள் இருப்பதால், தமக்குள் மோதி, சிறப்பாக பாலிஷ் பண்ணியதுபோல, வெவ்வேறு அளவுகளில் காணக்கிடைக்கின்றன.

பெரும்பாலான சமயங்களில் இந்த கூழாங்கல் முதல் கையளவு பாறைவரையிலான சாளகிராமங்களுக்குள் அம்மோனைட் என சொல்லப்படும் நத்தை வகையிலான பழங்கால உயிரியின் ஓடு தொல்லுயிர் எச்சமாக பொதிந்திருப்பது உண்டு. இந்த அம்மோனைட்டுகள் டிவோனியன் (சுமார் 42 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம்) காலத்திலிருந்து கிரெடேசியஸ் (சுமார் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம்) வரையிலான காலத்தில் தற்போது இமயமலை இருக்கும் இடத்தில் இருந்த டெதிஸ் என்ற கடலுள் வாழ்ந்து மறைந்தவற்றின் தொல்லுயிர் எச்சங்கள். வஜ்ர கீடம் என்ற பூச்சியால் இந்த மிகநுண்ணிய வளைவுகள் சாலிக்ராம கல்லில் உருவாக்கப்படுவதாக நம்பப்படுகிறது.

salakrama1 - 3

இந்த சாளக்கிராம கற்கள் மிக நுண்ணிய மணல்துகள்களால் ஆனவையாக இருப்பதாலும், அவற்றில் சில சமயங்களில் பலவித வண்ண நுண்ணிய ரேகை போன்ற அமைப்பு இருப்பதாலும், பலவித உருவங்கள் விஷ்ணுவின் சங்கு, சக்ரம், கதாயுதம், பத்மம், அமைப்பை போன்றும், விஷ்ணுவின் தசாவதார உருவங்களை போல கற்பிதம் செய்துகொள்ளும் விதமாகவும் கிடைக்கின்றன.

பொதுவாக கருநிறத்தில் இருந்தாலும், சாளகிராமங்கள் மஞ்சள், நீலம், வெள்ளை ஆகிய நிறங்களிலும் கிடைக்கின்றன. அதேபோல் நூற்றுக்கணக்கான விஷ்ணு உருவங்களில் கிடைக்கின்றன என்றாலும், விஷ்ணு, கேசவன், லஷ்மிநாராயணன், கோவிந்தன், வாசுதேவன், ப்ரத்யும்னன், ஜனார்த்தனன், கருடன், சுதர்ஷனன், தாமோதரன், புருஷோத்தமன், மாதவன், நாராயணன், ஹரி, சக்ரபாணி, மதுசூதனன், போன்ற உருவங்கள் பிரத்யோகமானவை.

சாலிக்ராமங்களில் இருக்கும் சக்கரங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும், சுதர்சனர், லஷ்மிநாராயணன், அச்சுதன், ஜனார்த்தனன், சதுர்புஜன், வாசுதேவன், ப்ரத்யும்னன், சங்கர்ஷணன், பலதேவன், புருஷோத்தமன், நவயுகன், அநிருத்தன், அனந்தன், பரமாத்மா, என உருவகம் செய்யப்படுகின்றனர்.

ஆதி சங்கரரின் தைத்திரீய உபநிஷத்தில், பத்மபுராணத்திலும், ஸ்கந்தபுராணம், வராகபுராணத்திலும், பிரம்ம சூத்திரத்திலும், மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணன் யுதிஷ்டிரருக்கும், குந்திதேவிக்கும் சொல்வதாகவும், சாளக்ராம பூஜையின் முக்கியத்துவம் குறிப்பிடப்படுகிறது.

  • மு.ராம்குமார்

சாளக்ராமம்; அறிவியலும் ஆன்மிகமும்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply