வீராணத்தைப் பாடிய நாதமுனிகள்!

ஆன்மிக கட்டுரைகள்

சுவாமி வேதாந்த தேசிகர், ராமானுஜரின் பெருமையைப் பற்றி, “”பிரம்மன் நாவில் சரஸ்வதிக்கு இடம் கொடுத்துள்ளார். சிவன் தன் உடலின் இடது பாகத்தை பார்வதிக்கு அளித்துள்ளார். நாராயணன் கிருஷ்ணாவதாரத்தில் கோபிகைகளுக்குக் கட்டுப்பட்டவராக இருந்தார். ஆக முப்பெரும் தெய்வங்களுமே பெண்கள் வயப்பட்டவர்களாக இருந்தார்கள். ஆனால் எங்கள் ராமானுஜரை வணங்குவோர்க்கு மூவரைவிடவும் வல்லமையாக, மன்மதனையே வெல்லும் சக்தி கிடைத்துவிடும் என்று போற்றியுள்ளார்” என்று சுவைப்படக் கூறினார் கருணாகராச்சாரியார்.

நாதமுனிகள்தான் அமுதத் தமிழில் அருளப்பட்ட ஆழ்வார் பாசுரங்களைத் தேடிப் பிடித்துப் பரப்பினார் என அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தார். நாதமுனிகள் ஒருநாள் கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி ஆலயத்துக்குச் சென்று பெருமாளை நெக்குருக வழிபட்டுக் கொண்டிருந்தார். அப்போது சந்நிதியில் ஒரு வயதான மூதாட்டி, “ஆராவமுதே’ என்ற ஆழ்வார்ப் பாசுரத்தை, இனிமையாகப் பாடிக் கொண்டிருந்ததைக் கேட்டார் நாதமுனிகள். நாதமுனிகள் வடமொழியிலும் தமிழிலும் தேர்ச்சி பெற்றவர். ஆராவமுதே என்ற சொல்லின் பெருமையை உணர்ந்த நாதமுனிகள், இதற்கு வடமொழியில்கூட சரியான சொற்றொடர் இல்லையெனப்புரிந்து கொண்டார். அந்த மூதாட்டி திருவாய்மொழியின் மற்ற பத்து பாசுரங்களைப் பாடியதும், அதன் அழகான, அர்த்தமுள்ள அடிகளில் சொக்கிப்போன நாதமுனிகள், அவரிடம் மீதிப் பாடல்களைப் பற்றிய விவரங்கள் கேட்க, அவர் தெரியாதென்றார். பின்பு, மீதி ஆழ்வார் பாசுரங்களைத் தேடி அலைந்த நாதமுனிகள், கடைசியில், நம்மாழ்வார் அருளிய பதினோரு பாடல்களையும், பன்னிரெண்டாயிரம் முறை சொல்லி, நாரணனனைத் துதித்து ஆழ்வார் பாசுரங்கள் அத்தனையும் பெற்றார். உலகுக்கு அவற்றை அருளி மகிழ்ந்தார்.

நாதமுனிகள் தம் வாழ்நாளின் கடைசி காலத்தில் “குளப்படியில் மழைபெய்தால் ஒரு குருவி வாழும், வீராணத்தில் மழைபெய்தால் நாடெல்லாம் விளையும்’ என்று பொருள்பட சீடர்களிடம் கூற, அடுத்தடுத்து வந்த சீடர்களும் அதன் பொருள் புரியாமல் திண்டாட, கடைசியாக ராமனுஜர் சோழ நாட்டில் உள்ள வீராணம் ஏரியை சென்று நேரில் பார்த்தார். அங்கு எழுபத்து நாலு மதகுகள் வழியாக நீர் பாய்ந்து, நெல் வயல்களுக்குப் பாசனமாகும் அரிய காட்சியைக் கண்டு, அதன் உட்பொருளைப் புரிந்து கொண்டு, எழுபத்து நாலு சான்றோர்களை நியமித்து வைணவத்தைப் பரப்பி, எந்த வேறுபாடும் இல்லாமல் மக்கள் அனைவரும் மோட்சம் பெற முடியும் என்று உலகுக்கு உணர்த்தினார்.’- இந்த அரிய செய்தியை கருணாகராச்சாரியார் சுவைபட கூறியதை அனைவரும் ரசித்தனர்.

காளிதாசனின் வரலாற்றில், மன்னன் போஜராஜன் கவிஞர்களுக்குப் பொற்குவியல் அளித்துப் போற்றியதைப் பார்த்து, பண்டிதர்கள் சிலர் அரைகுறையாக சாப்பாட்டைப் பற்றி கவிதை பாடி எழுத, காளிதாசன் மீதியை எழுதிய சம்பவத்தைச் சொல்லி, “தெரிந்த தொழிலைச் செய்பவன் கெட்டிக்காரன், தெரியாத தொழிலைச் செய்பவன் கோமாளி’ என்று ஆச்சாரியார் கூறியது சிறப்பாக இருந்தது.

கோகுலத்தில் கண்ணபிரானின் லீலைகளைப் பொருள் நயம்மிக்க ஸ்லோகங்களில் வர்ணித்ததைக் கூறி, கண்ணன் கோகுலத்தில் கோபிகைகளுடன் தன் பன்னிரெண்டாவது வயதில், அவர்களின் கர்வத்துக்கு அடிபணியாமல், அன்புக்கே மயங்கிய நிகழ்ச்சிகளையும், கடைசியில் கண்ணன் காட்சி அளித்து அருளியதையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார்.

சொற்பொழிவின் நடுவில், ராமபிரான் ராவணனைக் கொல்வதற்கு மட்டும் பிறக்கவில்லை, அன்பாய் சபரி கொடுத்த பழத்தை ருசிக்கவும், குகனைப் பாசத்துடன் கட்டி அணைக்கவும், ராமாவதாரம் ஒரு கருவியாய் அமைந்தது என்றார். கீதையில் கண்ணன், “பகவானுக்குத் தீயவர்களை அழிப்பது மிகச்சுலபம், ஆனால் நல்லவர்களுக்கு அருளவே அவன் பல அவதாரங்கள் எடுத்து பல சிரமங்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது’ என்ற பொருளில் கூறியுள்ளான்.

ராவணன் இறந்த பிறகு, அவன் சகோதரன் விபீடணன், ராவணனுக்கு ஈமச்சடங்கு செய்ய மறுத்து விடுகிறான். அதற்கு காரணமாக ராவணன் வாழ்நாள் முழுவதும் தீயவனாக, சீதாப்பிராட்டியை அபகரித்த கொடியவனாக, தான் எவ்வளவு சொல்லியும் திருந்தாதவனாக இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறான். ஆனால் ராமபிரான், நீ ராவணனுக்கு இறுதிச் சடங்கு செய்யவில்லை என்றால், நான் செய்கிறேன். ஒருவன் எவ்வளவு கொடியவனாயினும், நல்லவைகளை வாழ்நாள் முழுவதும் புறக்கணித்தவனாயிருந்தாலும், உயிர் நீத்தபின் அவனிடம் எந்தக் குறையும் காணக்கூடாது, அவன் நல்ல கதி அடைய நாம் நல்லது செய்ய வேண்டும் என்று உபதேசித்ததை உருக்கமாக விளக்கினார்.

சொற்பொழிவின் முடிவில், கணவனும், மனைவியும் ஒருவரோடு ஒருவர் அன்பாய் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, தன் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டார்.

கருணாகராச்சாரியாரை அவருடைய நண்பர் ஒருவர், தன் மனைவி ஊருக்குப் போயிருப்பதால் மாலையில் தன் வீட்டுக்கு வந்தால் பேசிக் கொண்டிருக்கலாம் என்று அழைத்தார்.

ஆச்சார்யாரும் மாலையில் நண்பரின் வீட்டுக்குப்போய் அழைப்பு மணியை அழுத்தப்போகும் போது உள்ளே மெட்டி ஒலி கேட்டது. ஒருவேளை அவர் மனைவி ஊருக்குச் செல்லவில்லையோ என்றெண்ணினார். தொடர்ந்து மெட்டி ஒலி கேட்கவே, வேறுவிதமாக விபரீத எண்ணம் தோன்றவே, பதறிப்போய் அழைப்புமணி அடித்தார். நண்பர் உள்ளே அழைத்ததும், மெட்டி ஒலி பற்றிய சந்தேகத்தை ஆச்சாரியார் கேட்டார். நண்பர் சிரித்துக்கொண்டே மேஜை மேலிருந்த மெட்டிகளைக் காட்டி, தன் அன்பு மனைவி வீட்டிலிருக்கும்போது நடந்தால் ஒலிக்கும் மெட்டி ஒலி, அவர் இல்லாதபோது கேட்காததால் வெறுமையை தந்ததாகவும் மனைவியின் பழைய மெட்டிகளை வைத்து ஒலி எழுப்பி, அவள் வீட்டில் இருப்பதாய் உணர்வதைக் கூறியவுடன், அவர் அன்னியோன்னியத்தைப் பார்த்து மகிழ்ந்தார்.

ஆச்சாரியார் சொன்ன இந்தக் கதை சிரிக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்தது.

கருணாகராச்சாரியார், வாழ்க்கைத் தத்துவங்களை அவதாரங்களின் மகிமை

மூலமாக, கேள்வி பதிலாக விளக்கி, எளிமையாக, எல்லோரும் ரசிக்கும்படியாக சொற்பொழிவாற்றியது, ஒரு சிறந்த பேராசிரியரின் வகுப்பறையில் அமர்ந்திருந்த உணர்வைத் தந்தது.

– சுதேவன்

செய்தி: தினமணி – கண்ணோட்டம்

Leave a Reply