வரலக்ஷ்மி விரதம்: அஷ்ட லக்ஷ்மி அழைக்கும் பதிகம்!

ஆன்மிக கட்டுரைகள் விழாக்கள் விசேஷங்கள்

varalakshmi
varalakshmi
varalakshmi

வரலக்ஷ்மி விரதம் ஸ்பெஷல்

அஷ்ட லட்சுமி வருகை பதிகம்

சகல சித்தி தரும் ஆதிலட்சுமி:-

எட்டு வகை லட்சுமியால்
ஏராளமான செல்வம்
கொட்டும் வகை நானறிந்தேன்
கோலமயிலானவளே
வெற்றியுடன் நான் வாழ வேண்டும்
ஆதிலட்சுமி யே
வட்டமலர் மீதமர்ந்து
வருவாய் இது சமயம்

சிறப்பு தரும் சந்தான லட்சுமி:-

சிந்தனைக்கு செவி சாய்த்து
சீக்கிரம் என் இல்லம் வந்து
உந்தனருள் தந்திருந்தால்
உலகமெனை பாராட்டும்
வந்தமர்ந்து உறவாடி
வரங்கள் பல தருவதற்கே
சந்தான லட்சுமியே தான்
வருவாய் இது சமயம்

அரச யோகம் தரும் கஜலட்சுமி:-

யானையிரு புறமும் நிற்கும்
ஆரணங்கே உனைத் தொழுதால்
காணுமொரு போகமெல்லாம்
காசினியில் கிடைக்குமென்பார்
தேனிருக்கும் கவியுரைத்தேன்
தேர்ந்த கஜலட்சுமியே
வானிருக்கும் நிலவாகி
வருவாய் இது சமயம்

செல்வம் தரும் தனலட்சுமி:-

அன்றாட வாழ்க்கையில்
அனுபவிக்கும் துன்பமெல்லாம்
உனதருள் பெற்றுவிட்டால்
ஓடுவதும் உண்மையன்றோ
இன்றோடு துயர் விலக
இனிய தனலட்சுமியே
மன்றாடி கேட்கின்றேன்
வருவாய் இது சமயம்

உணவளிக்கும் தான்யலட்சுமி:-

எங்கள் பசி தீர்ப்பதற்கும்
இனிய வயல் அத்தனையும்
தங்க நிறக்கதிராகித்
தழைத்துச் சிரிப்பவளே
பங்கு பெறும் வாழ்க்கையினை
பார் தான்யலட்சுமியே
மங்லகமாய் என் இல்லம்
வருவாய் இது சமயம்

வெற்றியைத் தரும் விஜயலட்சுமி:-

கற்று நான் புகழடைந்து
காசினியில் எந்நாளும்
வெற்றியின் மேல் வெற்றிபெற
வேண்டுமென்று கேட்கின்றேன்
பற்று வைத்தேன் உன்னிடத்தில்
பார் விஜயலட்சுமியே
வற்றாத அருங்கடலே
வருவாய் இது சமயம்

கவலை போக்கும் மஹாலட்சுமி:-

நெஞ்சிற் கவலையெல்லாம்
நிழல் போல் தொடர்ந்ததனால்
தஞ்சமென உனையடைந்தேன்
தாமரை மேல் நிற்பவளே
அஞ்சாது வரம் கொடுக்கும்
அழகு மஹாலட்சுமியே
வஞ்சமில்லா தெனக்கருள
வருவாய் இது சமயம்

வீரம் கொடுக்கும் வீரலட்சுமி:-

ஏழுவித லட்சுமிகள்
என்னில்லம் வந்தாலும்
சூழுகின்ற பகையொழிக்கும்
தூயவளும் நீ தானே
வாளும் வழி காட்டிடவே
வா வீரலட்சுமியே
மாலையிட்டு போற்றுகிறேன்
வருவாய் இது சமயம்.

வரலக்ஷ்மி விரதம்: அஷ்ட லக்ஷ்மி அழைக்கும் பதிகம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply