சகமனிதர்களுடன் அணுகுமுறை: ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிக கட்டுரைகள்

e0ae9ae0ae95e0aeaee0aea9e0aebfe0aea4e0aeb0e0af8de0ae95e0aeb3e0af81e0ae9fe0aea9e0af8d e0ae85e0aea3e0af81e0ae95e0af81e0aeaee0af81e0aeb1

bharathi theerthar
bharathi theerthar
bharathi theerthar

அடுத்த உபதேசம், விமத்ஸர: என்பதாகும். அதாவது, வயிற்றெரிச்சல் படாமல் இருப்பது யாராவது நம்மைவிடப் படித்தவனோ பணக்காரனோ தென்பட்டால் முதலில் நமக்கு வருவது வயிற்றெரிச்சல்தான்,

“அவன் என்ன அவ்வளவு படித்தவனா? என்னிடம் வரட்டும், பார்க்கிறேன்” என்று தோன்றுகிறது. நம்மைவிடப் படித்தவன் இருந்தால் நமக்கு என்ன? நாமும் அந்த யோக்யதையைச் சம்பாதிக்க முயற்சி பண்ணலாமே.

அசூயைப்பட்டதால் மட்டும் நம்முடைய படிப்பு அதிகமாகாது. அவன் படிப்பும் குறைந்து விடாது.
நம்முடைய சந்தோஷத்தையும் பாராட்டையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்க வேண்டுமே தவிர, நம்முடைய கீழ்த்தரமான மனதை மற்றவர்களுக்குப் பிரகடனம் செய்வதினால் எந்தவிதமான லாபமும் கிடையாது.

யோகஸூத்ரத்தில் பின்வரும் ஸூத்ரம் ஒன்று வருகிறது.
மைத்ரீ-கருணா-முதிதோபேக்ஷாணாம்
ஸுகதுக்கபுண்யாபுண்யவிஷயாணாம்
பாவனாதச்சித்தப்ரஸாதனம்

ஒருவன் சுகமாக வாழ்ந்து கொண்டிருந்தால் அவனோடு சிநேக பாவத்துடனிருங்கள்; பொறாமைப்படாதீர்கள், அவனிடம், “ரொம்ப சந்தோஷம், நீங்கள் மேலும் மேலும் முன்னுக்கு வர வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம்” என்று சொல்லுங்கள்.

ஒருவன் கஷ்டத்தில் இருந்தால், “அவனுக்கு இந்தக் கஷ்டம் வேண்டும், நன்றாக அனுபவிக்கட்டும்” என்று நினைக்காதீர்கள்; அவனுக்கு, தயை காட்டுங்கள். ஏனென்றால், நமக்கும் ஒரு சமயம் கஷ்டம் வரும். அப்போது நமக்கும் இன்னொருவரின் உதவி தேவைப்படும்.

நாம் இன்று ஒருவனுக்கு உதவினால்தான் நாளை நமக்கு மற்றவர்கள் உதவுவார்கள். ஆகவே மற்றவர்கள் கஷ்டப்படும்போது உதவ வேண்டும். அடுத்தவனுடைய கஷ்டத்தை நீக்க நம்மால் முடிந்தால் கட்டாயம் முயற்சி செய்ய வேண்டும்.

அப்படி நம்மால் முடியாது போனால், நாம் பகவானிடம் சென்று, “இவனுடைய கஷ்டத்தை தீர்த்துவிடுங்கள்” என்ற பிரார்த்தனையையாவது செய்ய வேண்டும்.

சகமனிதர்களுடன் அணுகுமுறை: ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply