திருப்புகழ் கதைகள்: ஆலகாலம் என…

ஆன்மிக கட்டுரைகள்

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 156
– முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் –

ஆலகாலம் என – பழநி
கரன், தூஷணன்

அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றிப்பதிமூன்றாவது திருப்புகழ் ‘ஆலகாலம்’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “மாதர் ஆசையை விட்டு, பாதக மலங்களை நீக்கும் பாத கமலங்களைத் தொழுது உய்ய”அருணகிரிநாதர் முருகப் பெருமானிடம் இப்பாடலில் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

ஆல காலமெ னக்கொலை முற்றிய
வேல தாமென மிக்கவி ழிக்கடை
யாலு மோகம்வி ளைத்துவி தத்துட …… னிளைஞோரை
ஆர வாணைமெ யிட்டும றித்துவி
கார மோகமெ ழுப்பிய தற்குற
வான பேரைய கப்படு வித்ததி …… விதமாகச்
சால மாலைய ளித்தவர் கைப்பொருள்
மாள வேசிலு கிட்டும ருட்டியெ
சாதி பேதம றத்தழு வித்திரி …… மடமாதர்
தாக போகமொ ழித்துஉனக்கடி
யானென் வேள்விமு கத்தவ முற்றிரு
தாளை நாளும்வ ழுத்திநி னைத்திட …… அருள்வாயே
வால மாமதி மத்தமெ ருக்கறு
காறு பூளைத ரித்தச டைத்திரு
வால வாயன ளித்தரு ளற்புத …… முருகோனே
மாய மானொட ரக்கரை வெற்றிகொள்
வாலி மார்புதொ ளைத்திட விற்கொடு
வாளி யேவிய மற்புய னச்சுதன் …… மருகோனே
நாலு வேதந விற்றுமு றைப்பயில்
வீணை நாதனு ரைத்தவ னத்திடை
நாடி யோடிகு றத்தித னைக்கொடு …… வருவோனே
நாளி கேரம்வ ருக்கைப ழுத்துதிர்
சோலை சூழ்பழ நிப்பதி யிற்றிரு
ஞான பூரண சத்தித ரித்தருள் …… பெருமாளே.

இத்திருப்புகழின் பொருளாவது – இளமையான சிறந்த பிறைமதியையும் ஊமத்தை மலரையும் எருக்கம் பூவையும் அறுகம் புல்லையும் கங்கா நதியையும் பூளைப் பூவையும் சடையில் தரித்த மதுரை நாயகனாம் சொக்கநாதன் பெற்றருளிய அற்புதமான முருகக் கடவுளே.

 மாரீசனாகிய மாயமானையும், அரக்கர்களையும், வெற்றிகொண்டு, வாலியின் மார்பைத் துளைக்குமாறு வில்லில் கணையை ஏவிய மற்போருக்கு ஏற்ற புயங்களையுடைய திருமாலின் திருமருகரே. நான்கு வேதங்களையும் முறையுடன் பயின்று கூறுகின்ற யாழ் முனிவராகிய நாரதர் கூறிய வள்ளிமலைக் கானகத்தில் விரும்பி விரைந்து சென்று வள்ளியம்மையாரைக் கொண்டு வந்தவரே. தென்னை, பலா முதலிய மரங்கள் பழுத்து உதிர்கின்ற சோலைகள் சூழ்ந்த பழநியம்பதியில் உயர்ந்த ஞானத்தின் பூரணமாகிய வடிவேலை ஏந்தி நிற்கின்ற பெருமிதம் உடையவரே.

மகளிரது விடாயுடன் கூடிய அநுபோகத்தை ஒழித்து, தேவரீருக்கு அடியவன் என்ன, ஆராதனையுடன் கூடிய தவவொழுக்கத்தை அடைந்து, இருபாதார விந்தங்களைப் புகழ்ந்து நினைந்து உய்ய அருள்புரிவீர். – என்பதாகும்.

இப்பாடலில் இராமாயண நிகழச்சிகள் சிலவும், நாரதரின் கதையும் சொல்லப்படுகிறது.

மாய மானொட ரக்கரை வெற்றிகொள்
வாலி மார்புதொ ளைத்திட விற்கொடு
வாளி யேவிய மற்புய னச்சுதன் …… மருகோனே

என்ற வரிகளில் – மாரீசனாகிய மாயமானையும், அரக்கர்களையும் வென்றவரும், வாலியின் மார்பைத் துளைக்கும் வண்ணம், வில்லைக் கொண்டு அம்பை விடுத்தவரும் மற்போருக்குரிய வலிய தோளை உடையவரும் ஆகிய, திருமாலின், மருகரே – என்று இராமாயணத்தின் ஆரண்யகாண்ட, கிட்கிந்தா காண்ட நிகழ்ச்சிகள் கூறப்படுகின்றன.

கரன், தூஷணன், திரிசிரசு ஆகிய அரக்கர்களை இராமபிரான் வதம் செய்யும் காட்சிகள் ஆரண்யகாண்டத்தில் சூர்ப்பனகை கர்வபங்கம் ஆன பின்னர் வருகிறது. இராவணனின் தாய் ‘கேகசி’. இவளுடைய தங்கை ‘ராக்கா’ இந்த ராக்காவிற்குப் பிறந்தவர்கள் கரன், தூஷணன், திரிசிரசு (மூன்று தலைகளை உடையவன்) ஆகியோர். எனவே இவர்கள் இராவணனுக்கு தம்பியர் ஆகின்றனர்.

சூர்ப்பனகை மூக்கறுபட்டு கரனிடம் சென்று முறையிடுகிறாள். அப்போது கரன் இராமனுடன் போர்புரியச் செல்கிறான். ஆனால் அவனுடைய படைத்தலைவர்கள் பதிநால்வர் அவனைத் தடுத்து, அவர்கள் போர்புரிய வருகிறார்கள். இராமன் அவர்களொடு யுத்தம் செய்து அவர்களைக் கொல்கிறான். அதன் பின்னர் தூஷணனும் திரிசிரசு இருவரும் போருக்கு வருகிறார்கள். அவர்களும் இராமனால் வதம் செய்யப்படுகின்றனர்.

பின்னர் கரன் வருகிறான். இராமன் தனியொருவனாக கரனையும் அவனோடு வந்த பெரும்படையையும் அழித்தொழிக்கிறான். இராம-இராவண யுத்தத்திற்கு இது ஒரு முன்னோடியாக விளங்குகிறது. இந்த கரன், தூஷணன், திரிசிரசு ஆகிய அரக்கர்களைப் பற்றிச் சொல்லும் முன்னர் மாயமான் கதையைச் சொல்லுகிறார். மாயமானாக வந்தவன் மாரீசன்.

திருப்புகழ் கதைகள்: ஆலகாலம் என… முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply