திருப்புகழ் கதைகள்: நாரதர்!

ஆன்மிக கட்டுரைகள்

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 157
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

ஆலகாலம் என – பழநி
நாரதர்

வால்மீகி ராமாயணத்தில் வரும் (காயத்ரி ராமாயணத்தில் முதல் சுலோகம்)

தபஸ் ஸ்வாத்யாய நிரதம் தபஸ்வீ வாக்விதாம் வரம்
நாரதம் பரிப்ரச்ச வால்மீகிர் முநி புங்கவம்

என்ற சுலோகம் ஒன்றே போதும் நாரதரின் பெருமைப் பற்றிக் கூற. நாரத முனிவர் தவத்திலும் வேதத்திலும் ஆழ்ந்தவர்; வாக்கு வன்மையுள்ளவர், பகவானை தியானம் செய்பவருள் உத்தமர். அவரை தபஸ்வியான வால்மீகி ஒரு கேள்வி கேட்டார் என்பது மேலே கண்ட சுலோகத்தின் பொருள்.

வால்மீகி – தர்ம நாயகனும் பொய்பேசாதவரும் இன்னும் இப்படிப் பல்வேறு நற்குணங்கள் பொருந்தியுள்ள நாயகன் யார் – என்று நாரதரைக் கேட்ட போது அவர் ராமரைப் பற்றிக் கூற, ராமாயணம் எழுந்தது. நாரதர் பாண்டவர்களின் உற்ற நண்பரும் ஆவார். தேவைப்பட்ட போதெல்லாம் அவர்களைச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலையும் அறிவுரைகளையும் தந்ததை மஹாபாரதத்தில் வியாஸர் வெகுவாக விரித்துரைப்பதைக் காணலாம். வேத வியாஸர் மனம் கலங்கி இருந்த போது அவரை பாகவதத்தை இயற்றுமாறு கூறி அவரின் கலக்கத்தைப் போக்கி பாகவதம் எழக் காரண புருஷராக இருந்தவரும் நாரதரே!

“நாரதர் கலகம் நன்மையில்” முடியும் என்ற பழமொழியை நாம் அடிக்கடி உபயோகிப்போம். ஏனெனில் கலகம் மூட்டுவதில் கைதேர்ந்தவர் நாரதர். இது அவரது பல்முக பரிமாணங்களில் ஒரு சிறிய பரிமாணம் தான். ஆனால் சென்ற நூற்றாண்டில் பிரபலமடைந்த நாடகங்களில் ஹாஸ்ய ரசம் தேவைப்பட்டதால் இரவு முழுவதும் நடந்த நாடகத்தில் அவ்வப்பொழுது நாரதர் தோன்றி சிரிக்க வைத்து மக்களை ‘விழிப்புடன்’இருக்குமாறு செய்வது வழக்கமாகிப் போனது. அதனால் தேவரிஷியான மிகப் பெரிய மஹரிஷியை நாம் நகைச்சுவை மிகுந்த கலகக்காரராகப் பார்க்கிறோம்.

இதிகாசங்களிலும் சரி, புராணங்களிலும் சரி இவர் இல்லாத கதைகள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு இவர் முக்கியமானவர். கையில் ஒரு வீணையுடன் எப்பொழுதும் “நாராயண” “நாராயண” என்று கூறிக்கொண்டே இவர் மூட்டும் கலகங்கள் ஆரம்பத்தில் பிரச்சினைகளை எழுப்பினாலும் இறுதியில் அனைவருக்கும் நன்மையை மட்டுமே ஏற்படுத்தும். குறிப்பாக ஞானப்பழத்தை வைத்து சிவ குடும்பத்தில் இவர் மூடிய கலகம் மிகவும் பிரசித்தம். இவரின் சிறப்புகளை அறிந்தால் கலகத்தை மட்டுமே ஏற்படுத்துபவர்களை இனி நாரதர் என கூறமாட்டோம். ஏனென்றால் இவர் ஏற்படுத்தும் கலகம் உலகத்திற்கு நன்மையையும் , நல்ல படிப்பினையையும் பெற்றுத்தரும், எனவே கலகம் செய்யும் அனைவரும் நாரதர் ஆகிவிட முடியாது.

நாரத முனிவர் படைப்புக் கடவுள் நான்முகனின் மகனாவார். இவர் திருமாலின் பரம பக்தர் ஆவார். தன் பிறப்பின் நோக்கமே திருமலை வழிபடுவதுதான் என இருப்பவர் நாரதர். திருமாலின் ஒவ்வொரு அவதாரத்திலும் அவர் நோக்கம் வெற்றிபெற ஏதேனும் ஒரு வகையில் நாரதர் காரணமாய் இருந்திருப்பார்.

முன்ஜென்மத்தில் நாரதர் முனிவர்கள் வாழும் ஆசிரமத்தில் பணிபுரிந்த ஒருவரின் மகனாக பிறந்தார். சிறுவனாக இருந்தபோதே அங்கே அவர்கள் திருமலை பற்றி பாடிய பாடல்களால் ஈர்க்கப்பட்டு திருமாலின் மேல் அதிக ஈடுபாடு கொண்டார். அங்கிருந்த முனிவர்களின் போதனைகள் அவரை சிறுவயதிலேயே இவ்வுலக ஆசைகளில் இருந்து விலகி இருக்கும்படி செய்தது. தன் தாய் இறந்த பிறகு துறவறத்தில் ஈடுபட்ட அச்சிறுவன் தன் கடுமையான தவம் மூலம் அடுத்த பிறவியில் நாரதராய் பிறந்து திருமாலின் புகழை மூவுலகமும் அறியும்படி பாடுவார் என்ற வரம் பெற்றார்.

ஆண்டுதோறும் ஜேஷ்ட மாதம், கிருஷ்ணபட்சத்தின் முதல் நாள் நாரத ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இவர்தான் உலகின் முதல் பத்திரிகையாளர் ஆவார். ஏனெனில் இவரின் பணியே மூவுலகையும் சுற்றிவந்து ஒருவர் பற்றிய செய்திகளை மற்றவரிடம் கூறுவதுதான். அனைத்து அசுரர்களும், தேவர்களும் மதிக்கும் ஒரு மாமுனி நாரதர் ஆவார். அனைத்து தேவர்களையும் சிறைபிடித்த இராவணன் கூட நாரதரை விட்டு வைத்ததன் காரணம் அவர் மீதிருந்த மரியாதைதான்.

நாரதர் சந்தன முனிவரிடம் இருந்து பூமி வித்தையை கற்றுத்தேர்ந்தார். வித்தைகளிலேயே மிக உயரிய வித்தையாக இது கருதப்படுகிறது. இது மட்டுமின்றி ஆயக்கலைகள் அறுபத்திநான்கையும் கற்றுத்தேர்ந்தவர் நாரத முனிவர். குறிப்பாக இவர் இசைக்கலையில் அதிகம் ஆர்வம் கொண்டவர். இவரின் கையில் எப்பொழுதும் மகதி என்றழைக்கப்படும் வீணை இருக்கும். இந்த வீணை இல்லாமல் இவரை யாரும் பார்த்திருக்க முடியாது. மகதியை கொண்டு இவர் வாசித்து பாடும் போது அதற்கு மயங்காதவர்கள் மூவுலகிலும் இருக்க முடியாது.

naradha dhruva
naradha dhruva

நாரத பாஞ்சராத்ரத்தின் படி நாரதர் பிரம்மாவின் புத்திரர். இவரைப் பற்றி பதினெட்டு புராணங்களும் ஏராளமான சம்பவங்களை எடுத்துக் கூறுகின்றன. அவரது பல பிறவிகள் பல்வேறு சுவையான செய்திகளைத் தருகின்றன.நாரதர் பிரபஞ்சத்தின் முதல் சுற்றுப் பயணி. திரிலோக சஞ்சாரி என்ற பெயர் கொண்ட அவர் மூன்று லோகங்களுக்கும் தேவைப்பட்ட போதெல்லாம் க்ஷண நேரத்தில் சென்று விடுவார்.

தேவரிஷியான நாரதரைப் பற்றி மட்டுமே உள்ள புராணம் நாரத புராணம். அதில் வேதத்தின் ஆறு அங்கங்களும் விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. ஜோதிடத்தை எப்படி அன்றாட வாழ்க்கையில் உபயோகப்படுத்துவது என்பதைத் தெளிவாக நாரத புராணம் எடுத்துரைக்கிறது. இதில் சிக்ஷை பகுதி வேத சம்ஹிதைகளை நன்கு விளக்குகிறது. எப்படி வேதத்தை உச்சரிப்பது என்பதை அற்புதமாக விளக்கும் போது நன்கு உச்சரிக்கப்படும் மந்திரங்களே பலன் அளிக்கும் என்பதைத் தெளிவாக நாம் உணர முடிகிறது.

ஒரு கீதத்தின் பத்துக் குணங்களையும் இந்த புராணமே நன்கு விளக்குகிறது. இசைக் கருவிகளில் வீணையையும் வேணுவையும் இந்தப் புராணம் விளக்குவது போல வேறு எந்த நூலும் விளக்கவில்லை.

பிரம்மா ஜோதிடத்தைப் பற்றி நான்கு லட்சம் சுலோகங்களில் விளக்கியுள்ளார்! இதன் சுருக்கத்தை நாரதர் விளக்கியுள்ளார். இந்த ஜோதிடப் பகுதி வானவியல், ஜாதகம் பார்த்தல். ஜோதிட சாஸ்திரம் என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு விளக்கப்படுகிறது. வானவியல் பகுதியில் கிரகணம், நிழல்கள், கிரக சேர்க்கைகள். கணித மூலங்கள் போன்றவையும் ஜாதகப் பிரிவில் ராசிகள் பிரிக்கப்பட்ட விதமும் அதன் அடிப்படைக் கருத்துக்களும் கிரக சேர்க்கைகளும் விளக்கப்படுகின்றன. சூர்ய சித்தாந்த கருத்துக்களை இங்கு காணலாம். வராஹமிஹிரரின் பிருஹத் சம்ஹிதாவில் உள்ள பல கருத்துக்கள் இங்கு உள்ளன. நாரத புராணத்தில் நவீன விஞ்ஞானத்தின் பல இயல்களைப் பார்த்து வியக்கலாம்! ஒரு முக்கியமான விஷயம், ஜோதிடம் உள்ளிட்ட அனைத்துக் கலைகளிலும் நாரதரின் பார்வை தனிப்பார்வையாக உள்ளது!

நாரதரைப் பற்றிய சுவையான ஏராளமான குட்டிக் கதைகள் உள்ளன. தானே சிறந்த விஷ்ணு பக்தர் என்றும் இசைக் கலைஞர் என்றும் கர்வம் கொண்ட நாரதர், ஒரு முறை ஒரு நந்தவனத்தின் பக்கம் செல்கையில் பல பெண்கள் புலம்பி அழுவதைக் கேட்டார். யார் அவர்கள் என்று பார்த்த போது அவர் திகைத்துப் போனார். தேவதை போன்ற அழகிய முகங்கள் கொண்ட அவர்களில் சிலருக்கு கைகள் இல்லை; சிலருக்குக் கால்கள் இல்லை; சிலரோ சிதைந்த உருவத்தோடு இருந்தனர். சிலர் குள்ளமாக ஆகி இருந்தனர். இதைப் பார்த்துத் திகைத்த நாரதர் அவர்களை நோக்கி அதன் காரணத்தைக் கேட்டார். அதற்கு அவர்கள். “நாங்கள் ராக தேவதைகள். இன்று வைகுந்தத்தில் நாரதர் என்ற ஒருவர் அபத்தமாக இசையை இசைக்கவே நாங்கள் உருக்குலைந்து சீர் குலைந்து இப்படி ஆகி விட்டோம்” என்று பரிதாபமாகத் தங்கள் நிலையைக் கூறினர். நாரதரது கர்வம் ஒழிந்தது. அவர் தான் யார் என்பதை ஒப்புக் கொண்டு, இப்போது நான் ஹனுமானிடம் உண்மையான இசை என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காகப் போகிறேன்” என்றாராம். ஹனுமான் அவருக்கு உள்ளத்தின் ஆழத்திலிருந்து வரும் பக்தி இசையைப் பாடிக் கற்றுத் தந்தாராம்.

108 பாஞ்சராத்ர நூல்களில் நாரத பாஞ்சராத்ரம் பிரபலமானது. இது கோவிலில் நடைபெறும் வழிபாடுகளைப் பற்றியும் சுத்திகள் பற்றியும், தேவதா பிரதிஷ்டை போன்றவற்றையும் பற்றி விளக்குகிறது. இவற்றின் அடிப்படையாக ஜோதிடம் இலங்குகிறது.

நாரத இராமாயணம் என்று ஒரு இராமாயணம் இருக்கிறது. ஆனால் இதற்கும் நாரதருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை எழுதியவர், சிறுகதை இலக்கியச் சிற்பி ‘புதுமைப் பித்தன்’ ஆவார். இராமாயணத்தை இயன்றவரை கேலி செய்து எழுதப்பட்ட ஓர் நூல் இது.

திருப்புகழ் கதைகள்: நாரதர்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply