திருப்புகழ் கதைகள்: ஸ்ரீ கிருஷ்ண லீலை!

ஆன்மிக கட்டுரைகள்

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 161
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றிப்பதினாறாவது திருப்புகழ் ‘இரவி என வடவை என’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “பிரணவ வடிவாகிய மயிலின் மீது வந்து அருள”அருணகிரிநாதர் முருகப் பெருமானிடம் இப்பாடலில் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

இரவியென வடவையென ஆலால விடமதென
உருவுகொடு ககனமிசை மீதேகி மதியும்வர
இரதிபதி கணைகளொரு நாலேவ விருதுகுயி …… லதுகூவ

எழுகடலின் முரசினிசை வேயோசை விடையின்மணி
யிசைகுறுகி யிருசெவியி னாராச முறுவதென
இகல்புரிய மதனகுரு வோராத அனையர்கொடு ….வசைபேச

அரஹரென வநிதைபடு பாடோத அரிதரிது
அமுதமயி லதுகருதி யாரோடு மிகல்புரிவள்
அவசமுற அவசமுற ஆரோமல் தரவுமிக ……மெலிவானாள்

அகுதியிவள் தலையில்விதி யானாலும் விலகரிது
அடிமைகொள வுனதுபரம் ஆறாத வோருதனிமை
யவளையணை தரஇனிதி னோகார பரியின்மிசை …… வருவாயே

நிரைபரவி வரவரையு ளோர்சீத மருதினொடு
பொருசகடு வுதையதுசெய் தாமாய மழைசொரிதல்
நிலைகுலைய மலைகுடைய தாவேகொள் கரகமலன் ……மருகோனே

நிருமலிய திரிநயனி வாள்வீச வருகுமரி
கவுரிபயி ரவியரவ பூணாரி திரிபுவனி
நிபுடமலை யரசனருள் வாழ்வான புரணவுமை …… யருள்பாலா

பரவைகிரி யசுரர்திரள் மாசேனை தவிடுபொடி
படஅமரர் துயரகல வேலேவி யமர்பொருத
பதுமகர தலமுருக நால்வேத கரரணிக …… மயில்வீரா

பளிதம்ருக மதகளப சேறார வளருமுலை
வநிதைகுற மகள்மகிழும் லீலாவி தரமதுர
பநுவல்தரு பழநிவரு கோலாக லவவமரர் …. பெருமாளே.

திருமால் மருகா, பார்வதிபாலா, அவுணர்குல கால, வள்ளி மணவாளா, பழநிக்குமரா உன்னிடம் காதல் கொண்டமையால், சந்திரனின் கிரணங்கள் வெப்பத்தைக் கொடுக்கின்றன; குயில், புல்லாங்குழல் முதலிய இசைகள் துன்புறுத்துகின்றன; இவ்வாறு இன்ப வேட்கை கொண்ட இப்பெண் கொடியைத் தழுவி ஆட்கொள்ள மயில் மிசை வந்தருள்வீர். இத்திருப்புகழ் ‘நாயக-நாயகி’ பாவத்தில் எழுதப்பட்டுள்ளது.

radha krishnar
radha krishnar

இந்தப் பாடலில் ஸ்ரீகிருஷ்ண பகவானின் பால லீலைகள் சொல்லப்படுகின்றன. மலையினிடத்துள்ள பசுக்கள் பரவசப்பட்டு தம்மிடத்துச் சூழ்ந்து வருமாறு வேய்ங் சூழலிசைத்தவரும், ஒப்பற்ற மருதமரத்தையும், (கொல்ல வந்த) சகடா சுரனையும் உதைத்துக் கொன்றவரும், (ஆண்டுதோறும் உத்தராயண முதல் நாளன்று தனக்குச் செய்து வந்த பூஜையை மாற்றிச் செய்தால் இந்திரன் சினந்து ஆணையிட) பசுக்களும் இடையர்களும் மாய்ந்து அழியுமாறு பெய்த பெரு மழையைத் தடுக்க மலையைக் குடையாகப் பிடித்த தாமரைத் தடக்கையருமாகிய நாராயண மூர்த்தியின் திருமருகரே – எனப் பாடல் வரிகள் சொல்கின்றன.

பாரதமும் இராமாயணமும் இதிகாசங்கள் எனப்படுகின்றன. வீர வரலாற்றைக் காவியமாகக் கூறினால் அஃது இதிகாசம் எனப்படுகிறது. ஆனால் கிருஷ்ணரின் கதையைக் கூறும் பாகவதம் இதிகாசம் ஆகாது; இது தெய்வக்கதை; தெய்வம் மானிடனாக அவதரித்து மனிதனைப் போல இயங்கி, தெய்வசக்தியோடு செயல்ஆற்றி வாழ்ந்த கதை இது.

கண்ணனின் கதை. அவன் ஒரு மாவீரன் என்பதற்காகப் பேசப்படுவது இல்லை; பிள்ளைமை அழகுடையது. அனைவரையும் மகிழ்வித்தவன். ‘வீரன்’ என்றால், அஃது அருச்சுனனைத்தான் குறிக்கும்; அவன் செயல் சிறந்தது; அதற்கு வழிகாட்டி கண்ணன்; “வில் அம்பினைவிட அறிவு, கூர்மை வாய்ந்தது” என்பது இவனிடம் காணப்படுகிறது. வலிமை மட்டும் வெற்றியைத் தந்துவிடாது; அறிவுக் கூர்மை, “இதுவே வெற்றி தரும்” என்பதனைக் கண்ணன் கதை காட்டுகிறது.

பிறந்த உடனே இடம் மாறிவிடுகிறான்; கம்சன் ஏமாற்றப்படுகிறான்; கண்ணனின் அறிவுத் திறன் அவன் குறும்புகளில் வெளிப்படுகிறது; “தீராத விளையாட்டுப் பிள்ளை; பெண்களுக்கு ஓயாத தொல்லை” என்ற பெயர் வாங்குகிறான்; யோகிகளைப் போலச் சிரிக்காமல் அவன் வாழவில்லை; “பெரியவர் என்றால் சிரிக்கக் கூடாது,” என்ற போலித்தனம் அவனிடம் இல்லை; அவன் ஒவ்வொரு செய்கையிலும் ஒரு புதுமை, ஒரு சிரிப்பு, ஒர் அற்புதம், திடுக்க வைக்கும் சாதனைகள் இவை எல்லாம் அவனை நேசிக்கச் செய்கின்றன.

திருப்புகழ் கதைகள்: ஸ்ரீ கிருஷ்ண லீலை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply