நவராத்ரி ஸ்பெஷல் : ஸரஸ்வதி!

ஆன்மிக கட்டுரைகள் விழாக்கள் விசேஷங்கள்

kanchi mahaperiyava
kanchi mahaperiyava
kanchi mahaperiyava

ஸரஸ்வதி பூஜையானது சரத்காலத்தில் வருகிறது. ‘சரத்’ காலத்தில் நிகழ்வதால்தான் இந்த நவராத்திரிக்கே ‘சாரத’ நவராத்திரி என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. சாரதா என்ற பெயர் ஸரஸ்வதி தேவிக்கும் ஏற்பட்டிருக்கிறது. (சாரதா என்ற பேருக்கு மந்திர சாஸ்திரத்தில் தத்வார்த்தமாக வேறு பொருள்களும் சொல்லியிருக்கிறது.)

காச்மீரத்தில் பண்டிதர்கள் அதிகம். ‘பண்டிட்’ என்றே ஒரு ஜாதியாகச் சொல்வார்கள். அங்கே இப்படி வித்வத் கோஷ்டி நிறைய இருந்ததற்குக் காரணம், வாக்தேவியான (வாக்குத்தேவதையான) ஸரஸ்வதி ஆராதனை காஸ்மீர மண்டலத்தில் மிக அதிகமாக இருந்ததுதான்.

அங்கே ‘சாரதா பீடம்’ என்றே ஒன்று இருந்தது. பாரத தேசத்தின் மகா பண்டிதர்களும் அந்த சாரதா பீடத்தில் ஏறினாலே தங்கள் வித்வத்துக்குப் பட்டாபிஷேகம் செய்ததுபோல் என்று கருதினார்கள்.

நம் தமிழ்நாட்டில், தொண்டை மண்டலத்தில் இருக்கிற காஞ்சிப் பகுதிக்கும் காச்மீர மண்டலம் என்று ஒரு பெயர் இருந்திருக்கிறது. வடக்கே கிருஷ்ணன் அவதரித்த மதுரை இருந்தால், தெற்கே மீனாக்ஷி அவதரித்த மதுரை இருக்கிறது. அங்கே ஒரு பாடலிபுத்திரம் இருப்பது போலவே, இங்கேயும் நடுநாட்டிலே ஒரு பாடலிபுத்திரம் உண்டு; அதுதான் திருப்பாதிரிப்புலியூர்.

வடக்கே காசி இருப்பதுபோல், இங்கும் திருநெல்வேலியில் தென்காசி இருக்கிறது. இம்மாதிரி காஞ்சி மண்டலமே தக்ஷிணகாச்மீரம். இங்கே ஸரஸ்வதியின் அருள் விசேஷமாக சாந்நித்தியம் பெற்றிருக்கிறது என்பதை மூகரும் ‘ஸாரஸ்வத புருஷகார ஸாம்ராஜ்யே’ என்கிறார்.

saraswathi
saraswathi

ஊமையாக இருந்த இந்த மூகருக்கு சாக்ஷாத் காமாக்ஷியே வாக்தேவியாக வந்து அநுக்கிரகித்த விசேஷத்தால்தான் அவர் மகா கவியானார். காமாக்ஷி ஆலயத்தில் எட்டுக் கைகளோடு கூடிய பரம சௌந்தர்யமான ஒரு ஸரஸ்வதி பிம்பத்துக்கு சந்நிதி இருக்கிறது. ஆதி ஆசார்யாள் காஞ்சீபுரத்தில் சகல கலைகளிலும் தம் ஞானத்தைக் காட்டி ஸர்வக்ஞ பீடம் ஏறினார்.

இங்கே ஸ்தாபித்த (காமகோடி பீட) மடத்துக்கு ‘சாரதா மடம்’ என்ற பெயரிட்டார். இதெல்லாம் காஞ்சிபுரத்திற்கும் ஸரஸ்வதிக்கும் இருக்கப்பட்ட விசேஷமான சம்பந்தத்தைக் காட்டுகின்றன. அப்பர் சுவாமிகளும் “கல்வியில் கரையில்லாத காஞ்சி” என்கிறார்.

மூக பஞ்சதீ’யின் ஆர்யா சதக சுலோகமொன்று காமாக்ஷியை சரஸ்வதியாகவே பாவிக்கிறது. ‘விமலபடீ’ என்று அது ஆரம்பமாகிறது. அதாவது, மாசு மறுவே இல்லாத தூய வெள்ளைக்கலை உடுத்தியிருக்கிறாள் என்கிறார். காச்மீரம் முழுதுமே இப்படித்தான் வெண்பனி மலைகளால் மூடப்பட்டு ஸரஸ்வதி மயமாக இருக்கிறது. சரத் காலத்தின் விசேஷமும் இது தான். ‘சரத் சந்திரன்’ என்று கவிகள் விசேஷித்துச் சொல்கிற நிலவு இந்தக் காலத்தில்தான், மிகவும் தாவள்யமாக லோகம் முழுவதற்கும் தூய சந்திரிகையை ஆடை மாதிரிப் போர்த்துகிறது. இந்த சரத் காலத்தில்தான் ஆகாசத்துக்கு வெள்ளாடை போர்த்தினது போல் எங்கே பார்த்தாலும் வெண்முகில்கள் சஞ்சரிக்கின்றன.

ஸரஸ்வதி அநுக்ரஹிக்கிர உண்மையான ‘வித்யை’ சரத்கால சந்திரனைப் போலவும், சரத்கால மேகத்தைப் போலவும், தாப சாந்தியாக, தூய்மையாக இருக்கும். வெறும் படிப்பு பலவிதமான தாபங்களையே உண்டாக்குகிறது. மெய்யறிவே தாபசாந்தியைத் தரும்.

ஜபமாலையும் ஏட்டுச்சுவடியும் ஞானத்தைத் தெரிவிக்கிற அடையாளங்கள் என்று எல்லோருக்கும் தெரியும். பரம ஞானமூர்த்திகளான தக்ஷிணாமூர்த்தி, ஸரஸ்வதி தேவி இருவர் கைகளிலும் இவற்றைக் காணலாம்.

basara-kshetra-sri-saraswathi2
basara-kshetra-sri-saraswathi2

ஏட்டுச் சுவடி வித்யையைக் குறிப்பது. ‘வித்யை’ என்றால் படிப்பு என்று மட்டும் அர்த்தம் பண்ணிக்கொண்டு, இப்போது இருக்கிற படிப்பு முறையைப் பார்த்தால், வித்யை வேறு, ஞானம் வேறு என்றே தோன்றுகிறது. வித்யைதான் ஞானம் என்கிற பழைய முறை போய்விட்டது. முன்பெல்லாம் சகல வித்யைகளும் பரமாத்மாவைக் காட்டிக் கொடுக்கவே ஏற்பட்டிருந்தன.

ஸரஸ்வதிக்கும் தக்ஷிணாமூர்த்தியைப் போலவே நெற்றிக் கண் உண்டு. ஆசை பஸ்மமானாலொழிய ஞானமில்லை. அதற்காகத்தான் காமனை எரித்த நெற்றிக்கண் இவளிடமும் இருக்கிறது. இவ்விரண்டு தெய்வங்களுக்கும் ஜடா மகுடம் இருக்கிறது. அதுவும் ஞானிகளின் அடையாளம்.

இருவருமே வெள்ளை வெளேரென்று இருக்கிறார்கள். ஏழு வர்ணங்களில் சேராத வெள்ளை, பரம நிர்மலமான சுத்த ஸத்வ நிலையைக் குறிப்பது. இந்த வெள்ளையும்கூட இன்னும் நிர்மலமாக, தன் வழியாக ஒளி ஊடுருவிச் செல்கிற அளவுக்கு, (transparent) தெளிந்துவிடுகிறபோது ஸ்படிகமாகிறது.

தக்ஷிணா மூர்த்தி, ஸரஸ்வதி இருவருமே இப்படிப்பட்ட ஸ்படிகத்தினாலான அக்ஷமாலையைத்தான் வைத்திருக்கிறார்கள். வெள்ளை நிறம், சந்திர கலை, ஸ்படிகமாலை ஆகிய இவற்றை நினைத்தாலே நமக்கு ஒரு தூய்மை, தாப சாந்தி, அமைதி எல்லாம் உண்டாகின்றன.

  • தெய்வத்தின் குரல் (முதல் பகுதி) -இல் இருந்து…

நவராத்ரி ஸ்பெஷல் : ஸரஸ்வதி! முதலில் தினசரி தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply