விஜய தசமி எனும் ‘கொற்றவை வழிபாடு’!

ஆன்மிக கட்டுரைகள்

kotravai worship
kotravai worship
kotravai worship

~ கட்டுரை: பத்மன் ~

பெண் தெய்வ வழிபாடான சக்தி வழிபாடு நம் பாரதம் முழுமைக்கும் பொதுவான பண்பாடு. இதில் தமிழகம் விதிவிலக்கல்ல. கூறப்போனால் கொற்றவை வழிபாடு என இதில் முன்னிலையில் இருப்பது நம் தமிழகமே.

மகிஷாசுரனை அழித்த துர்க்கையை நவராத்திரியை அடுத்த பத்தாம் நாள் – தசராவின் கடைசி நாளில் – விஜயதசமி விழா எடுத்துக் கொண்டாடுகிறோம். வேதம் துதிக்கும் அந்த துர்க்கையும் நம் தமிழர்தம் கொற்றவையும் ஒருவரே. இதற்கு சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில் “வேட்டுவ வரி” என்ற பகுதியில் உள்ள ஆதாரங்கள் இதோ:

வரி வளைக் கை வாள் ஏந்தி, மா மயிடன் செற்று, கரிய திரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்- அரிஅரன் பூமேலோன் அகமலர்மேல் மன்னும் விரிகதிர் அம்சோதி விளக்கு ஆகியே நிற்பாய்!

“வரி அலங்காரம் கொண்ட வளையலை அணிந்த தனது கையிலே வாளை ஏந்திய கொற்றவை, பெரிய அசுரனாகிய மகிடனைக் கொன்றவள். அந்த வெற்றிப் பெருமிதத்தில், கரிய நிறமுடையதும் முறுக்கிய கொம்பையுடையதுமான முரட்டுக் கலைமானின் மேல் நிற்பவள். திருமால், சிவபெருமான், பிரும்மன் ஆகியோரின் உள்ளத் தாமரையில் நிலைபெற்றிருந்து, விரிந்த ஒளிக்கதிரைப் பாய்ச்சும் அழகிய சோதி விளக்குப் போல நிற்பவள். அதாவது அவர்களது ஆற்றலாயும் திகழ்பவள் சக்தியாம் கொற்றவை. மயிடன் அதாவது மகிடனைச் செற்றவள் என்பதன் மூலம் இவள் மகிஷாசுரமர்த்தினி என்பது தெளிவாகிறது அல்லவா? சிங்கத்தைப் போல கலைமானையும் வாகனமாகக் கொண்டவள் என்ற புராண வர்ணனையும் இங்கே பொருந்துகிறது.”

vanadurga ambikai
vanadurga ambikai

மேலும் ஒரு பாடல்:

சங்கமும் சக்கரமும் தாமரைக் கைஏந்தி, செங்கண் அரிமான் சினவிடைமேல் நின்றாயால்- கங்கை முடிக்கு அணிந்த கண்ணுதலோன் பாகத்து, மங்கை உருவாய், மறை ஏத்தவே நிற்பாய்!

“ தாமரை போன்ற தமது கரங்களிலே சங்கும் சக்கரமும் ஏந்தியவள். விஷ்ணு துர்க்கை என்ற வடிவம் இதுதான்.
சிவந்த கண்களையும் சினத்தையும் கொண்ட தனது வாகனமாகிய சிங்கத்தின் மேல் நிற்பவள். அரி என்றால் சிங்கம், மான் என்றால் விலங்கு எனப் பொருள். அந்த சக்தி யார்?
கங்கை நதியை தனது முடிமேல் அணிந்தவரும், நெற்றிக் கண் கொண்டவருமான சிவபெருமானின் இடப்பாகத்திலே பெண் உருகொண்டு நிற்பவள். இங்கே அர்த்தநாரீஸ்வரத் தத்துவம் விளக்கப்படுகிறது. இறுதி வரி மிகவும் முக்கியமானது. மறை ஏத்தவே நிற்பாய்.
வேதம் போற்ற நிற்பவள் துர்க்கையாம் கொற்றவை. அவளே பராசக்தி.”

ஐந்திணைகளில் ஒன்றான பாலை நிலத் தெய்வம் கொற்றவை. வேடர்களின் குல தெய்வம். அந்தக் கொற்றவைதான் வேதம் போற்ற நிற்கிறாள். ஒட்டுமொத்த பாரதப் பண்பாட்டைப் பாதுகாப்பதே வேதம் என்பதற்கு சமண காவியமான சிலப்பதிகாரமே சான்று.

தமிழர்களே, நீங்கள் ஹிந்துக்கள் என்பதை இனிமேலாது வெட்கப்படாமல் பெருமிதத்துடன் தலைநிமிர்ந்து கூறுங்கள்.

simavahini 2
simavahini 2

தனதென நினைக்கும் தனமும் தனமும்
தளரும் விலகும் ஒருபோதில்
நினதென மனத்தை நிறுத்திடும் நிலையில்
நெடுஞ்சீர் தருவாய் மலைமகளே !

குறையற இருக்கும் குணமும் பணமும்
குறையும் குலையும் நொடிப்போதில்
நினதடி நெஞ்சில் பதித்திடு பதத்தில்
நிறைசீர் தருவாய் அலைமகளே!

மறையென விளங்கும் அறிவும் திறனும்
மறையும் திரியும் மறுபோதில்
நினக்கென நினைப்பை செலுத்திடும் விதத்தில்
நிலைச்சீர் தருவாய் கலைமகளே!

விதியின் வலியும் வினையின் பயனும்
விதைக்கும் வலிகள் பலபோதில்
நினதருள் சரணென கிடந்திடும் கதியில்
அருட்சீர் தருவாய் அம்பிகையே!

– பத்மன்

விஜய தசமி எனும் ‘கொற்றவை வழிபாடு’! முதலில் தினசரி தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply