நலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்!

ஆன்மிக கட்டுரைகள்

e0aea8e0aeb2e0aeaee0af8d e0ae95e0af81e0aeb2e0aeaee0af8d e0aeaae0aeb2e0aeaee0af8d e0aea4e0aeb0e0af81e0aeaee0af8d e0aea8e0aebe

srirangam namperumal
srirangam namperumal
srirangam namperumal

கட்டுரை: மகர சடகோபன், தென்திருப்பேரை

மூன்றினுள் எட்டெழுத்து திருமந்திரம் பிரதானம்” என்ற கட்டுரையில் பிரதான, நாராயண நாமத்தின் பெருமையைப் பற்றி அறிந்து கொண்டோம். அத்தகைய பெருமைகளைக் கொண்ட திருமந்திரம் என்ற எட்டெழுத்து( அ) அஷ்டாச்சர மந்திர சப்தங்களில் ஆழ்வார்கள் ஆழங்கால் பட்டுள்ளதை ஆழ்வார்களின் அருளிச்செயல் மூலம் அனுபவிப்போம்.

மூன்று அரசுகள் கூடிய திருமணங்கொல்லையில் திருமங்கையாழ்வாருக்கு ஶ்ரீமந் நாராயணன் காட்சி கொடுத்து, திருமந்திர உபதேசத்தை அருளினார். அன்று முதல் ஆழ்வாராக மாறிய கலியன் என்ற திருமங்கையாழ்வார் “ நான் கண்டு கொண்டேன் நாராயணாய என்னும் நாமம்” என்று தொடங்கி 1084 பாடல்களைக் கொண்ட பெரிய திருமொழி என்ற பிரபந்தத்தை இயற்றினார்,

திவ்ய பிரபந்தத்தை தொகுத்து வழங்கிய ஆசாரியர் ஶ்ரீ நாதமுனிகள் , திவ்ய பிரபந்தத்தை வரிசைப்படுத்தும் பொழுது, திருமந்திரம் என்ற அஷ்டாச்சர மந்திரத்தைக் குறிக்கும் வகையில் வகைப்படுத்தியுள்ளார் என்பதனை, ஸ்வாமி மணவாள மாமுனிகள் இயற்றிய “ உபதேச ரத்தின மாலை” யின் பின்வரும் பாடல்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

திவ்ய பிரபந்தம் என்பது ஆழ்வார்கள் அவதார வரிசையில் அமைக்கப் பெறாமல், அதனை வகைப்படுத்தும் பொழுது முதல் இரண்டாயிரத்தில் திருமந்திரப் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திவ்ய பிரபந்தத்தின் ஏற்றமும் , திருமந்திரத்தின் ஏற்றமும், ஆழ்வார்களின் எண்ணமும் நன்றாகப் புலப்படுகிறது.

nammalwar
nammalwar

திவ்ய பிரபந்தம் என்பது 4000 பாடல்களைக் கொண்ட , நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட, வேதத்தை விரித்து வழங்கிய அற்புதமான தமிழ் நூல்.

முதலாயிரம் – பெரியாழ்வாரின் பல்லாண்டு தொடக்கமாக கண்ணிநுண் சிறுத்தாம்பு ஈறாக

இரண்டாயிரம் – பெரிய திருமொழி தொடக்கமாக திருநெடுந்தாண்டகம் ஈறாக

இயற்பா (மூவாயிரம்)– முதல் திருவந்தாதி தொடக்கமாக இராமானுஜ நூற்றந்தாதி ஈறாக

திருவாய்மொழி ( நாலாயிரம்) – நம்மாழ்வாரின் திருவாய்மொழி

திவ்ய பிரபந்தம் “ பல்லாண்டு பல்லாண்டு” என்ற பதிகத்தில் தொடங்கப்படுகிறது.

கோதிலவாம் ஆழ்வார்கள் கூறுகலைக்கெல்லாம்
ஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும், வேதத்துக்கு
ஓம் என்னு மதுபோல் உள்ளத்துக்கெல்லாம் சுருக்காய்
தான் மங்கலம் ஆதலால்”

periyalwar
periyalwar

வேதத்துக்கு ஓம் என்ற சொல் அமைந்திருப்பது போல், ஆழ்வார்களின் திவ்யபிரபந்தத்துக்கு திருப்பல்லாண்டு பதிகம் அமைந்துள்ளது என்று ஸ்வாமி மணவாள மாமுனிகள் உபதேச ரத்தின மாலையில் குறிப்பிடுகிறார். வேதம் ஓதப்படும் பொழுது ஓம் என்று சொல்லி தொடங்குவது போல் , திவ்ய பிரபந்தம் பல்லாண்டு பதிகத்தில் தொடங்கவேண்டும் என்பது பூர்வர்களின் நிர்வாகம்.

மூன்று வேதங்களை கடைந்து, எழுந்த மூன்று அக்ஷரங்கள் கொண்ட மூல மந்திரம் ” பிரணவம் என்ற ஓம்”. இதனை பெரியாழ்வார் ” மூலமாகிய ஒற்றை எழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி” என்று குறிப்பிடுகிறார்.

திருமந்திரத்தின் முதல் பதம் “ஓம்” , பல்லாண்டு பதிகத்தின் மூலம் ஒப்பிடப்பட்டுள்ளது என்பதனை மேற்கண்ட பாசுரம் மூலம் விளக்குகிறது.

முதலாயிரம் கண்ணிநுண்சிறுத்தாம்பு என்ற திவ்ய பிரபந்தத்தில் முடிவடைகிறது. இந்த பிரபந்தத்தில் “நமோ” என்ற இரண்டாவது பதத்தைத் தெளிவாக விளக்குகிறார் மதுரகவியாழ்வார். அவரது ஆசாரியன் நம்மாழ்வார் ஒருவருக்கே தாசன் என்றும், தாஸத்துவத்தை அதாவது அடிமைநிலையை இந்த பிரபந்தம் மூலம் உணர்த்தியவர்.

இதை உபதேச ரத்தின மாலையில் பின்வருமாறு ஶ்ரீ மணவாளமாமுனிகள் குறிப்பிடுகிறார்.

வாய்த்த திருமந்திரத்தின் மத்திமாம் பதம்போல்
சீர்த்த மதுரகவி செய்கலையை ஆர்த்தபுகழ்
ஆரியர்கள் தாங்கள் அருளிச்செயல் நடுவே
சேர்வித்தார் தாற்பரியம்தேர்ந்து”

thiruppuliyalwar
thiruppuliyalwar

திருமந்திரத்தில் மத்திமாம் “நமோ”பதம் போல் , மதுரகவியாழ்வாரின் ” கண்ணிநுண்சிறுத்தாம்பு” அமைந்துள்ளது என்று குறிப்பிடுகிறார்.

இரண்டாயிரம், பெரிய திருமொழி என்ற திவ்யபிரபந்தத்தைப் பெருவாரியாகக் கொண்டது.

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால் …..
நான் கண்டு கொண்டேன் நாராயணாய என்னும் நாமம் “

நாராயண மந்திரத்தை கண்டு கொண்டேன் என்று தொடங்குகிறது . திருமந்திரத்தின் மூன்றாவது பதம் “நாராயணாய” சப்தம் பெரிய திருமொழியின் முதல் பதிகத்தின் மூலம் அறியப்படுகிறது.

இவ்வாறாக பிரதான மந்திரமான பெரிய திருமந்திரத்தைப் பெருமைப்படுத்தும் வகையில், திவ்ய பிரபந்தம் அமைக்கப்பட்டுள்ளது.

manavalamamunikal - 1

இப் பெருமைகளைக் கொண்ட திருமந்திரத்தை தினம் ஓத வேண்டும் என்றே ஆழ்வார்கள் அனைவரும் வலியுறுத்திப் பாடியுள்ளார்கள்.

பெரியாழ்வார் ஓதக்கூடிய மந்திரம் என்றாலே அது திருமந்திரம் என்று அறுதியிட்டு வலியுறுத்துகிறார் பின் வரும் பாசுரங்கள் மூலம்,

“நாடும் நகரமும் அறிய நமோ நாராயணாயவென்று”

“நல்வகையால் நமோ நாராயணாவென்று நாமம் பலபரவி”

“நல்லாண்டு என்று நவின்றுரைப்பார் ‘ நமோ நாராயணாய’ என்று”

“நமோ நாராணவென்று மத்தகத்திடை கைகளை கூப்பி”

“உண்ணுமாறு உன்னை ஒன்றும் அறியேன் ‘ஓவாத நமோ நாரணா! ‘ என்பன்

“உண்ணா நாள் பசியாவது ஒன்றில்லை ‘ ஓவாதே நமோ நாரணாவென்று’ “

manavala mamunigal

பெரியாழ்வார் “காசு கறையுடைக் கூறைக்கும்” என்ற பதிகத்தில் ஒவ்வொரு பாசுரத்தின் அடியில் “ நாரணன் தம்மன்னை நரகம்புகாள்” என்று சொல்லி, கடைசி பாசுரத்தில் “ சீரணிமால் திருநாமமே இடத்தேற்றிய” என்று நாரணன் நாமத்தின் பெருமையை பரக்க பேசுகிறார்.

திருப்பாவையில் ஆண்டாள் கண்ணனை அனுபவிப்பதிலிருந்தாலும், மூன்று இடத்தில் நாராயணன் நாமத்தை அழைக்கிறாள். பறை தரக்கூடிய சக்தி நாராயணன் ஒருவனுக்கு மட்டுமே என்று முதல் பாசுரத்தில் அறிதிட்டு கூறியதன் மூலம் நாராயண நாமத்தின் பெருமையை உணரமுடிகிறது.

“ நாராயணனே நமக்கே பறை தருவான்”
“ நாராயணன் மூர்த்தி”
“ நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்”

ஆண்டாள் தனது நாச்சியார் திருமொழியில்,

“நாமம் ஆயிரம் ஏற்ற நின்ற நாராயணா! நரனே!”
“நண்ணுறு வாசக மாலை வல்லார் நமோ நாராயணாயவென்பாரே”
என்று நாராயணன் நாமத்தை வலியுறுத்திக் குறிப்பிடுகிறாள்.

குலசேகரயாழ்வார் தனது பெருமாள் திருமொழியில்,
“ நாத்தழும்பெழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுதேத்தி”

thirumangaialwar
thirumangaialwar

திருமங்கையாழ்வார் தனது திருமொழியில் முதல் பதிகத்தில் “ நான் கண்டு கொண்டேன் நாராயணாய என்னும் நாமம்” என்றும், 6-10 திருநறையூர் பதிகத்தில் “ நாமம் சொல்லில் நமோ நாராயணமே” என்றும், ஒவ்வொரு பாசுரத்தின் கடைசியில் அறிதிட்டு பாடியுள்ளார்.

பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதியில்,
“நா வாயில் உண்டே நமோ நாரணாவென்று ஓவாது உரைக்கும் உரையுண்டே” என்று வாயினுள் இருக்கும் நாக்கு எப்பொழுதும் நாராயண நாமத்தைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்று , நாமத்தின் பெருமையை விளக்கியுள்ளார்.

பூதத்தாழ்வார் மூன்றாம் திருவந்தாதியில்,
“நாமம் பல சொல்லி நாராயணா வென்று நாம் அங்கையால் தொழுதும் நன்னெஞ்சே! வா” என்று நாமம் பல சொன்னாலும் , நாராயணா என்று சொல்லி கை தொழும் நன்னெஞ்சே வா என்று நாராயணன் நாமத்தைத் தெரிவித்துள்ளார்.

thirumazhisaialwar
thirumazhisaialwar

விஷ்ணுக்கு நாமம் ஆயிரம் இருந்தாலும், அனைத்து ஆழ்வார்களும் ஒருமித்த கருத்தாக “நமோ நாராயணாய” என்று ஓத வேண்டும் என்று வலியுறுத்திவதை கவனிக்கும் பொழுது, ஏகமூர்த்தி, ஆதிமூர்த்தி நாமம் என்பது “ நாராயணன்” என்று அறியமுடிகிறது. இந்த ஏகமூர்த்தி நாராயணன் பல அவதாரங்களாக அவதரித்து, திவ்ய தேசங்களில் அர்ச்சையாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

திருமழிசை ஆழ்வார் திருசந்தவிருத்தம் என்ற திவ்ய பிரபந்தத்தில் பின்வருமாறு பாடியுள்ளார்.
“ஏகமூர்த்தி மூன்று மூர்த்தி நாலு மூர்த்தி நன்மைசேர்*
போக மூர்த்தி புண்ணியத்தின் மூர்த்தி எண்ணில் மூர்த்தியாய்
நாகமூர்த்தி சயனமாய் நலங்கடற் கிடந்து* மேல்
ஆக மூர்த்தி ஆய வண்ணம் என்கொல் ஆதிதேவனே”

ஏக மூர்த்தி, ஆதி மூர்த்தி, மூன்று மூர்த்தி , நாக மூர்த்தி, அவதார மூர்த்தி, அர்ச்சை மூர்த்தி அனைத்தும் “ ஶ்ரீமந் நாராயணன்”.

நலம் தரும் சொல் நாராயண நாமம்
குலம் தரும் சொல் நாராயண நாமம்
பலம் தரும் சொல் நாராயண நாமம்

நலம் குலம் பலம் தரும்… நாராயணா எனும் நாமம்! முதலில் தினசரி தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply