திருப்புகழ் கதைகள்: விருது கவிராஜ சிங்கம்!

ஆன்மிக கட்டுரைகள்

thiruppugazh stories
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 181
– முனைவர் கு வை பாலசுப்பிரமணியன் –

கருவின் உருவாகி – பழநி
விருது கவிராஜ சிங்கம்

சுப்ரமண்ய மூர்த்தியின் சாரூபம் பெற்ற அபரசுப்ரமண்ய மூர்த்திகளில் ஒன்று, சுப்ரமண்யத்தின் திருவருள் தாங்கி பரசமய கோளரியாகச் சீகாழியில் அவதரித்தது, முக்கண்ணியின் திரு முலைப்பால் உண்டு திருஞான சம்பந்தராக விளங்கி, சமண சமயத்தை அழித்து, சைவ சமயத்தை நிறுவியருளினார். அவர் ஒருவரே கவிராஜ சிங்கம் எனத்தக்கவர். விருதுகள் பல அவர்க்குச் சிவபெருமான் நல்கியருளினார்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர். தாயார் பகவதி அம்மையார். இவர் மூன்று வயது குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை, அம்மை அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அது குறித்துக் கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டி….

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன்1 உள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த
பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே.

என்ற தேவாரத்தைப் பாடினார் என்றும் சொல்லப்படுகிறது.

திருஞான சம்பந்தரின் வரலாற்றைப் பெரிய புராணத்தில் 1256 பாடல்களால் சேக்கிழார் சுவாமிகள் அழகுற விரித்துரைத் துள்ளார். சைவசமய ஆசாரியர்கள் நால்வரில் முதல் ஆசாரியராகவும், அறுபான் மும்மை நாயன்மார்களில் ஒருவராகவும் விளங்கும் இவர் வரலாற்றை முதன்முதல் சுந்தரர் திருத்தொண்டத் தொகையில்,

வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலால் பேணாத
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்`

எனக் குறிப்பிட்டு அருளியதோடு, தாம் அருளிய தேவாரத் திருப் பதிகங்களிலும் திருஞானசம்பந்தர் பெருமைகளைப் போற்றிப் பாடியுள்ளார். இவர் பல அற்புதங்கள் புரிந்திருக்கிறார். அவையாவன:

gnanasambandar
gnanasambandar

மூன்றாம் வயதினிலே, உமையம்மையாரிடம் திருமுலைப்பால் உண்டமை.

சிவபெருமானிடத்தே பொற்றாளமும், முத்துப்பல்லக்கும், முத்துச்சின்னமும், முத்துக்குடையும், முத்துப்பந்தரும், உலவாக்கிழியும் (பொன்முடிப்பு) பெற்றது.

வேதாரணியத்திலே திருக்கதவு அடைக்கப்பாடியது.
சமணர்களை வெற்றி கொள்ள வேண்டி மதுரை சென்ற போது, மதுரைக்குக் கிழக்கு வாயில் வழியாகச் செல்ல வேண்டும் என்று கருதி, மதுரையின் கிழக்கு எல்லையாக விளங்கும் திருப்பூவணத்தின் (தற்போது திருப்புவனம் என்று அழைக்கப்படுகிறது) வைகை ஆற்றின் வடகரையை வந்து அடைந்தார்; ஆற்றில் கால் வைக்க முயன்ற போது, ஆற்று மணல்கள் எல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சி அளித்தன; எனவே அங்கு நின்றபடியே தென்திருப்பூவணமே என முடியும் பதிகம் பாடினார்; சிவபெருமான், நந்தியைச் சாய்ந்திருக்கச் சொல்லிக் காட்சி அருளினார்; இதனால் திருப்பூவணத்திலே நந்தி இன்றும் முதுகு சாய்ந்தே உள்ளது.

வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள சிவலிங்கத்தை, வடகரையில் உள்ள ஆடித்தபசு மண்டபத்தில் நின்றே இன்றும் தரிசிக்கலாம்.

பாலை நிலத்தை, நெய்தல் நிலமாகும்படி பாடியது.
பாண்டியனுக்குக் கூனையும் சுரத்தையும் போக்கியது.
தேவாரத் திருவேட்டை அக்கினியில் இட்டுப் பச்சையாய் எடுத்தது.
வைகையிலே திருவேட்டை விட்டு, எதிரேறும்படி செய்தது. சிவபெருமானிடத்தே, படிக்காசு பெற்றது.
விடத்தினால் இறந்த வணிகனை உயிர்ப்பித்தது.
வெள்ளெலும்பை பெண்ணாக்கியது.

திருஞானசம்பந்தர் ஒரு விருதுக்கவி என்பதை அரிணகிரியார்
விருதுகவி விதரண விநோதக் காரப் பெருமாளே” என்று ஒருபொழுது எனத்தொடங்கும் திருப்புகழிலும் பாடியுள்ளார்.

திருப்புகழ் கதைகள்: விருது கவிராஜ சிங்கம்! முதலில் தினசரி தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply