திருப்புகழ் கதைகள்: ரகுவம்சம்!

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories
thiruppugazh stories

திருப்புகழ்க் கதைகள் 212
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

சிவனார் மனம் குளிர – பழநி
ரகுவம்சம் 1

     இரகுவம்சம் என்னும் காவியம் சமஸ்கிருத மொழியிலே மகாகவி காளிதாசன் இயற்றியதாகும். இரகுவின் மரபினைப் பாடுவது இரகுவம்சம். 19 சருக்கங்களைக் கொண்ட இரகுவம்சம் இரகுவின் தந்தை திலீபன் வரலாற்றுடன் ஆரம்பமாகும் இக்காவியம் திலீபன், இரகு, அயன், தசரதன், இராமன், குசன் என்போரின் வரலாறுகள் விரிவாகக் கூறப்படுகின்றன. அத்துடன் குசனுக்குப் பின் வந்த அதிதி முதல் அக்கினி, வருணன் வரையான இருபத்து மூவர் வரலாறுகள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. நூலில் இறைவணக்கமாக சிவனைப்பற்றி பாடியிள்ளார். இரகுவசம்சத்தில் முதல் சுலோகத்தில் சிவனும் பார்வதியும் சொல்லும் பொருளும்போல் சேர்ந்திருக்கிறார்கள் என்ற உவமையோடு அவர்களைக் குறிப்பிடுகிறார்.

            இரகுவம்சம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.  இரகுவம்சத்தினைத் தமிழில் முதன் முதலில் பாடியவர் கி.பி. 16 – 17 நூற்றாண்டுகளில் ஈழத்தில் வாழ்ந்த அரசகேசரி என்னும் அரச குடும்பத்துப் புலவராவார். இது 1887ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பதிப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் புன்னாலைக்கட்டுவன் சி. கணேசையர் முதற் பதினாறு படலங்களுக்கு எழுதிய உரை 1915ஆம் ஆணிடிலும் 1932ஆம் ஆண்டிலும் பதிப்பிக்கப்பட்டுள்ளன. சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் எழுதிய இரகுவம்ச சரிதாமிர்தம் 1930இல் வெளிவந்தது. வித்துவான் ரா. இராகவையங்கார் (1870-1946) சில சருக்கங்களைத் தமிழில் மொழிபெயர்த்துப் பாடியுள்ளார். புலோலியூர் வ. கணபதிப்பிள்ளை வசன நடையில் இரகுவம்சத்தை எழுதினார். முதலைந்து சருக்கத்தின் மொழிபெயர்ப்பு சென்னையில் 1874இல் வெளிவந்தது.

    இரகுவம்சம் 1564 பாடல்களைக் கொண்டது. இரமச்சந்திர பிரபுவின் மூதாதையர்களான திலீபன், ரகு, அஜன், தசரதன் ஆகியோரைப் பற்றி முதல் ஒன்பது சருக்கங்களில் மகாகவி காளிதாசர் பாடியிருக்கிறார். இராமயணக்கதையை 10 முதம் 15 வரையிலான சருக்கங்களில் இவர் பாடியிருக்கிறார். அதன் பின்னர் 16 முதல் 19ஆவது சருக்கம் முடிய இரமருக்குப் பின் வந்த இரகுவம்ச அரசர்கள் பற்றிப் பாடுகிறார்.

raghuvamsam vert - 1

    இரகுவம்சத்தின் முதல் பாடல் நாம் அனைவரும் அறிந்தது.

  வாகர்தாவிவ சம்ப்ருக்தௌ வாகர்தப்ரதிபத்தையே |

   ஜகாத பிதரௌ வந்தே பார்வதிபரமேஸ்வரௌ ||

இதன் பொருள் என்னவெனில் – வார்த்தையும் அதன் பொருளும் பிரியதிருபது போல், எப்பொழுதும் பிரியாமல் இருக்கும் எனது தாய் தந்தையாகிய பார்வதி மற்றும் பரமேஸ்வரனை வணங்குகிறேன். இந்த ஸ்லோகம், சலங்கை ஒலி திரைபடத்தில், எஸ் . பி. பி யின் அற்புத குரலில் இடம்பெறுகிறது.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply