திருப்புகழ் கதைகள்: வினைப்பயன்!

ஆன்மிக கட்டுரைகள்

e0aea4e0aebfe0aeb0e0af81e0aeaae0af8de0aeaae0af81e0ae95e0aeb4e0af8d e0ae95e0aea4e0af88e0ae95e0aeb3e0af8d e0aeb5e0aebfe0aea9e0af88

e0aea4e0aebfe0aeb0e0af81e0aeaae0af8de0aeaae0af81e0ae95e0aeb4e0af8d e0ae95e0aea4e0af88e0ae95e0aeb3e0af8d e0aeb5e0aebfe0aea9e0af88 1

திருப்புகழ்க் கதைகள் 218
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

சீறல் அசடன் – பழநி
வினைப்பயன்

தன்னை இத்திருப்புகழில் அருணகிரியார் ‘வினைகாரன்’ என்று குறிப்பிடுவார். அதாவது வினைப்பயனை அனுபவிப்பவன். வினைப்பயன் என்றால் என்ன?

இந்து சமயத்தில் வினை அல்லது கருமம் என்பது தொல்வினை, நுகர்வினை அல்லது ஊழ்வினை, வரும் வினை ஆகிய மூவகைப்பட்டது. இம்மூன்றும் சேர்ந்து ஒன்றாகப் பேசப்படும்பொழுது மூவினைத் தத்துவம் எனப்படும். மனிதன் ஏன் துன்புறுகிறான்? ஒருவன் செல்வந்தனாகவும் மற்றொருவன் ஏழையாகவும் பிறப்பது ஏன்? குறைந்த வயதில் திடீரென ஒருவன் இறப்பது ஏன்? இதற்கெல்லாம் பதில் சொல்ல இந்து மதத்தின் ஆசாரியர்கள் சொன்ன விளக்கம்தான் இந்த மூவினைத் தத்துவம்.

இந்த மூவினைகளிலே நுகர்வினை அல்லது ஊழ்வினை என்பது பிராரப்த கர்மம் என்று வடமொழியில் சொல்லப்படும். எல்லா முற்பிறப்புகளிலும் நாம் செய்த, செய்ய நினைத்த, செய்ய விரும்பிய செயல்களின் மூட்டை தான் கருமம் அல்லது வினைப்பயன் என்பர். இம்மூட்டையிலிருந்து ஆண்டவன் திருவருளால் இப்பிறவிக்காக ஒரு பிடியளவு நாம் பிறக்கும்போதே நம் கூட வருகிறது.

வில்லிலிருந்து புறப்பட்டுவிட்ட அம்பை அம்பு எய்தியவனே எப்படி எதுவும் செய்யமுடியாதோ அப்படி, நாம் பிறந்தபிறகு அதை அந்த ஆண்டவனும் ஒன்றும் செய்வதில்லையென்று அத்தனை இந்து சமய நூல்களும் கூறுகின்றன. இந்தப் பிடியளவு வினைதான் மாறாத வினை எனப்படுகிறது. இந்து சமய சாத்திரங்களும் புராணங்களும் எங்கெல்லாம் விதி வலிது, அதை மாற்ற ஈசனாலும் முடியாது என்று சொல்கின்றனவோ அங்கெல்லாம் இந்த ஊழ்வினையைத்தான் அப்படிச் சொல்கிறார்கள். இதை அனுபவித்துத்தான் ஆகவேண்டும். பிரம்மாவால் நெற்றியில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் தலையெழுத்து இந்து உலக வழக்கு இவ்வினையைப் பற்றித்தான்.

ஒரு நபருக்கு வாய்க்கும் பெற்றோர், வாய்த்திருக்கும் அல்லது வாய்க்கப்போகும் கணவன்/மனைவி, வாய்க்கப்போகும் வாழ்க்கைச் சூழ்நிலை, பொதுவாக கஷ்ட வாழ்க்கையா சுக வாழ்க்கையா, மற்றும் ஆயுள், இதெல்லாம் ஊழ்வினையைப் பொறுத்தது என்பது இந்து சமய நூல்களின் கூற்று.

e0aea4e0aebfe0aeb0e0af81e0aeaae0af8de0aeaae0af81e0ae95e0aeb4e0af8d e0ae95e0aea4e0af88e0ae95e0aeb3e0af8d e0aeb5e0aebfe0aea9e0af88 2

நதியின் பிழையன்று நறுபுனல் இன்மை, அற்றே
பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தான்
மதியின் பிழையன்று; மகன் பிழையன்று; மைந்த
விதியின் பிழை; நீ இதற்கு என்கொல் வெகுண்டது?’

என்று இராமன் இலக்குவனுக்குச் சொல்வதாக கம்பன் சொல்வது இந்த ஊழ்வினையைத்தான். ஊழிற்பெருவலி யாவுள என்று வள்ளுவர் சொல்வதும் இவ்வினையைப்பற்றித்தான்.

தொல் வினை என்பது ஒரு நபரின் முற்பிறப்புகளில் சேகரித்துக்கொண்ட செயல்களின் மூட்டையிலிருந்து ஒரு துளியளவு ஊழ்வினைக்காக இப்போதைய பிறவியில் அனுபவிப்பதற்காக எடுக்கப்பட்டுவிட்டது. எஞ்சியுள்ளது இனி வரப்போகும் பிறவிகளுக்காக உள்ளது. இந்த எஞ்சியுள்ள மூட்டை தான் தொல் வினை எனப்படும். வடமொழியில் சஞ்சித கருமம் என்பர்.

மொத்த வினையின் இப்பகுதிதான் மிக அதிகமான பகுதி. ஆனால் இது மாறக்கூடிய விதி, மாற்றக்கூடிய விதி. விதியை மதியால் வெல்லலாம் எனப் பெரியோர்கள் சொல்வது இத்தொல்வினையையே. காசிக்குப்போய் பாவத்தைத் தொலைக்கலாம் என்றும், கோயில் தரிசனம், தீர்த்த ஸ்நானம், பெரியோர் ஆசிகள் இவைகளால் பாவம் தொலையும் என்றும் இந்து மத நூல்கள் சொல்லும்போது இத்தொல்வினையில் உள்ளடங்கிய பாவத்தைத்தான் சொல்கின்றன.

ஊழ்வினை அனுபவிக்கப்பட்டுத்தான் ஒழியும். ஆனால் தொல்வினை என்பது புண்ணியம் செய்வதாலும், ஆண்டவன் திருநாம ஜபத்தாலும் கரையும் என்பது இந்து சமய நூல்களின் கூற்று. லிங்காஷ்டகம் என்ற சிவபெருமான் தோத்திரத்தில் ஸஞ்சித பாப வினாசக லிங்கம் என்று வெளிப்படையாகவே தொல்வினையை அழிக்கக்கூடிய பெருமான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

திருப்புகழ் கதைகள்: வினைப்பயன்! News First Appeared in Dhinasari

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply