திருப்புகழ் கதைகள்: சுருளளக பார..!

ஆன்மிக கட்டுரைகள்

திருப்புகழ்க் கதைகள் 221
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

சுருளளக பார – பழநி

அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றியறுபத்தியோராவது திருப்புகழ், ‘சுருளளக பார’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “பழநியப்பா, உமது அடியார் போல் அடியேன் வேதங்களை ஓதி, மநுநெறியில் நடந்து, அறிவை அறிவால் அறிந்து நிறைவாகி, எங்கும் பரவெளியாகக் கண்டு, மெய்ஞ்ஞான இன்ப அமுதை ஒழியாது பருக அருள்புரிவீர்”என அருணகிரிநாதர் இத்திருப்புகழில் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

சுருளளக பார கொங்கை மகளிர்வச மாயி சைந்து
சுரதக்ரியை யால்வி ளங்கு …… மதனூலே

சுருதியென வேநி னைந்து அறிவிலிக ளோடி ணங்கு
தொழிலுடைய யானு மிங்கு …… னடியார்போல்

அருமறைக ளேநி னைந்து மநுநெறியி லேந டந்து
அறிவையறி வால றிந்து …… நிறைவாகி

அகிலபுவ னாதி யெங்கும் வெளியுறமெய்ஞ் ஞான இன்ப
அமுதையொழி யாத ருந்த …… அருள்வாயே

பருதிமகன் வாசல் மந்த்ரி அநுமனொடு நேர்ப ணிந்து
பரிதகழை யாமுன் வந்து …… பரிவாலே

பரவியவி பீஷ ணன்பொன் மகுடமுடி சூட நின்ற
படைஞரொடி ராவ ணன்ற …… னுறவோடே

எரிபுகுத மாறி லண்டர் குடிபுகுத மாறு கொண்ட
ரகுபதியி ராம சந்த்ரன் …… மருகோனே

இளையகுற மாது பங்க பழநிமலை நாத கந்த
இமையவள்த னால்ம கிழ்ந்த …… பெருமாளே.

இத்திருப்புகழின் பொருளாவது - சூரிய குமாரனாகிய சுக்ரீவனுடைய அரண்மனை வாசலில் மந்திரித் தொழில் பூண்டிருந்த அநுமார் தன்னைத் தக்கவனென்று கூறி உதவ, அவருடன் ஸ்ரீராமர் பரிவுடன் தன்னை அழையா முன்னரே தானே வலிதில் வந்து, அவருடைய சந்நிதியில் பணிந்து மிகுந்த மெய்யன்புடன் தோத்திரம் புரிந்த விபீஷணர் இலங்கைக்கு அரசராகப் பொன்முடி புனைந்து இன்புறுமாறும்; எதிர்த்து நின்ற சேனைகளுடனும், பந்துக்களுடனும் இராவணன் அழிந்து தீக்கு இரையாகுமாறும், அறநெறி பிறழாத அமரர்கள் சுவர்க்கலோகத்தில் குடிபுகுந்து இன்புறுமாறும், இராவணாதிகளிடம் மாறுபாடு கொண்டவரும் இரகு குலத்திற்குத் தலைவராக திருவவதாரம் புரிந்தவருமாகிய ஸ்ரீஇராமச்சந்திரப் பெருமானுடைய மருகரே; இளம் பருவமுடையவரும் குறவர் குடியில் பிறந்தவருமாகிய வள்ளியம்மையாரை ஒரு பாகத்தில் கொண்டவரே; பழநி மலையில் எழுந்தருளியுள்ள எப்பொருட்கும் இறைவரே; கந்தவேளே; இமயவல்லியாகிய உமாதேவியார் திருவுளம் மகிழ்கின்ற பெருமையில் சிறந்தவரே; மகளிர் சுகத்தை செல்வமெனக் கருதி அறிவற்ற கசடர்களுடைய கூட்டுறவைக் கொண்ட அடியேன், இந் நிலவுலகில் தேவரீருடைய மெய்யடியார்களைப் போல், அறிவைத் தருகின்ற அரிய வேதங்களையே பற்றுக் கோடாகக் கொண்டு மநுநெறியில் நடந்து, அறிவை அறிவினால் அறிந்து, பூரண ஞானம் பெற்று, எல்லா உலகங்களிலும் எங்கும் வெட்ட வெளியாகவே கண்டு, மெய்ஞ்ஞானப் பேரின்பத் திருவமுதை எக்காலமும் இடையறாது பருகி இன்புற்றிருக்கத் திருவருள் புரிவீர் – என்பதாகும். இத்திருப்புகழில், 

பருதிமகன் வாசல் மந்த்ரி அநுமனொடு நேர்ப ணிந்து
பரிதகழை யாமுன் வந்து …… பரிவாலே
பரவியவி பீஷ ணன்பொன் மகுடமுடி சூட நின்ற
படைஞரொடி ராவ ணன்ற …… னுறவோடே
எரிபுகுத மாறி லண்டர் குடிபுகுத மாறு கொண்ட
ரகுபதியி ராம சந்த்ரன் …… மருகோனே

என்ற வரிகளில் இராமாயண நிகழ்ச்சிகள் சிலவற்றைச் சுட்டிக்காட்டுகிறார். அநுமனை நண்பனாகப் பெறுதல்; விபீஷணன் இராவணனுக்கு அறிவுரை பகர்ந்தது; பின்னர் விபீஷணன் இராமனைச் சரணாகதி அடைந்தது; இராவணாதியர்கள் அழிந்தது; தேவர்கள் மகிழ்ந்தது ஆகிய இராமாயண நிகழ்ச்சிகளை அருணகிரிநாதர் இத்திருப்புகழில் சுட்டிக்காட்டுகிறார். இவை ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாகக் காணலாம்.

திருப்புகழ் கதைகள்: சுருளளக பார..! News First Appeared in Dhinasari

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply