திருப்புகழ் கதைகள்: தகர நறுமலர்!

ஆன்மிக கட்டுரைகள்
e0aea4e0aebfe0aeb0e0af81e0aeaae0af8de0aeaae0af81e0ae95e0aeb4e0af8d e0ae95e0aea4e0af88e0ae95e0aeb3e0af8d e0aea4e0ae95e0aeb0 e0aea8

– Advertisement –

– Advertisement –

<

p class=”has-text-align-center”>திருப்புகழ்க் கதைகள் 226
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

தகர நறுமலர் – பழநி

அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றியறுபத்திமூன்றாவது திருப்புகழ், ‘தகர நறுமலர்’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “பழநியப்பா, ஆசைப் பெருங்கடலில் அடியேன் அழுந்தித் துன்புறாமல், மெய்ப்பொருளை அடியேனுக்கு உபதேசிக்கக் கோழிக் கொடியுடன் மரகத மயிலில் வந்து அருள் புரிவாயாக”என அருணகிரிநாதர் இத்திருப்புகழில் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

தகர நறுமலர் பொதுளிய குழலியர்
கலக கெருவித விழிவலை படவிதி
தலையி லெழுதியு மனைவயி னுறவிடு …..வதனாலே

தனயர் அனைதமர் மனைவியர் சினெகிதர்
சுரபி விரவிய வகையென நினைவுறு
தவன சலதியின் முழுகியெ யிடர்படு …… துயர்தீர

அகர முதலுள பொருளினை யருளிட
இருகை குவிசெய்து ளுருகிட வுருகியெ
அரக ரெனவல னிடமுற எழிலுன …… திருபாதம்

அருள அருளுடன் மருளற இருளற
கிரண அயில்கொடு குருகணி கொடியொடு
அழகு பெறமர கதமயில் மிசைவர …… இசைவாயே

சிகர குடையினி னிரைவர இசைதெரி
சதுரன் விதுரனில் வருபவ னளையது
திருடி யடிபடு சிறியவ னெடியவன் …… மதுசூதன்

திகிரி வளைகதை வசிதநு வுடையவ
னெழிலி வடிவின னரவுபொன் முடிமிசை
திமித திமிதிமி யெனநட மிடுமரி …… மருகோனே

பகர புகர்முக மதகரி யுழைதரு
வனிதை வெருவமுன் வரஅருள் புரிகுக
பரம குருபர இமகிரி தருமயில் …… புதல்வோனே

பலவின் முதுபழம் விழைவுசெய் தொழுகிய
நறவு நிறைவயல் கமுகடர் பொழில்திகழ்
பழநி மலைவரு புரவல அமரர்கள் …… பெருமாளே.

இத்திருப்புகழின் பொருளாவது – மழையின் கொடுமையால் பசுக்கள் வெருவி நாற்புறமும் ஓடிய போது கோவர்த்தன கிரியை எடுத்துக் குடையாகப் பிடித்து, அக்குடையின் கீழ் பசுக்கள் வந்து சேர வேணுகானம் செய்த சாமர்த்தியம் உடையவரும், தூது போனபோது தம்மிடத்துப் பேரன்பு உடைய விதுரர் திருமாளிகைக்கு விருந்தாகச் சென்றவரும், கோபிகைகள் வீடுகள் தோறும் வெண்ணெயைத் திருடி அவரால் அடிபட்டவரும், பாலகிருஷ்ணரும், மாவலிபால் மூவடி கேட்டு மூதண்ட கூட முகடு முட்ட சேவடி நீட்டி அளக்கப் பேருருக் கொண்டவரும், மது என்னும் அசுரனை அழித்தவரும்; சங்க, சக்ர, கதை, வில், வாள் என்னும் ஐம்பெரும் படைகளைத் தரித்தவரும், நீலமேகவண்ணரும், காளிங்கன் என்னும் பணியரசனுடைய அழகிய பணாமுடியின் மீது நின்று திமித திமிதிமி என்ற தாள ஒத்துடன் திருநடனம் இட்டு அருளியவரும், பாவத்தை நீக்குபவருமாகிய நாராயணமூர்த்தியின் மருகரே;

மான் மகளாகிய வள்ளியம்மையார் அச்சப்பட, அவர் முன் ஒளியுடையதும் கபில நிறம் உடையதுமாகிய முகத்தோடு கூடிய மதயானையை வருமாறு செய்து அருள்புரிந்த குகப்பெருமானே; பெரிய பொருளே; குருபரா; பனி மாமலைக்கு அரசு தந்த பார்வதி தேவியாரது திருக்குமாரரே; முதிர்ந்த பலாப்பழங்களின் சாறு காண்போர் விரும்புமாறு பெருகி நிரம்பிய வயல்களும் நெருங்கிய கமுகு சோலைகளுஞ் சூழ்ந்த பழநி மலைமீது எழுந்தருளியுள்ள தனிப்பெருந் தலைவரே; தேவர்கள் பெருமாளே;

தகர விதையின் மணம் வீசும் மலர்களை முடித்துள்ள கூந்தலையுடைய விலைமகளிரது கலகத்தைச் செய்யும் செருக்குடன் கூடிய கண் வலையிற் பட்டுழலுமாறு அடியேனுடைய தலையில் பிரமன் எழுதி, தாய் வயிற்றில் விடுவதனால், அடியேன் மக்கள், தாய், சுற்றம், மனைவியர், நண்பர், பசு முதலிய பொருள்களின் மீது மிகவும் பற்றுடையவனாகிய அவற்றையே நினைத்து ஆசைக் கடலில் மூழ்கி இடர்படுகின்ற இன்னல் நீங்குமாறு, அகர எழுத்தை முதலாகவுடைய குடிலை மந்திரப் பொருளை உபதேசிக்கவும், அடியேன் இருகரங்களையும் குவித்து உள்ளம் அழலிடை மெழுகேபோல் உருகவும், அங்ஙனம் உருகி “அரகர” என்று துதித்து வலம் இடமாக வந்து வழிபடவும், தேவரீருடைய அழகிய சரண கமலத்தை அடியேனுக்குத் தந்தருளவும், உலக பசுபாச சொந்தத்தால் வருகின்ற மயக்கம் நீங்கவும், அஞ்ஞான இருள் நீங்கவும், ஞான ஒளியையுடைய வடிவேலைக் கரத்தில் ஏந்தி அழகிய சேவற்கொடியுடனும், மிகுந்த அழகுடனும் அருளுடனும், மரகதமயில் மிசை வந்து அருள் செய்ய இசையவேண்டும் – என்பதாகும்.

இத்திருப்புகழில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கோவர்த்தன கிரியை குடையாகப் பிடித்த வரலாறும், பாண்டவர்களுக்காக தூது சென்றபோது விதுரன் வீட்டில் தங்கியது பற்றியும் சொல்லப்படுகிறது. இவற்றைப் பற்றி நாளை காணலாம்.

– Advertisement –

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply