திருப்புகழ் கதைகள்: விதுரரும் ஸ்ரீகிருஷ்ணரும்!

ஆன்மிக கட்டுரைகள்
thirupugazhkathaikal - Dhinasari Tamil

– Advertisement –

– Advertisement –

<

p class=”has-text-align-center has-pale-cyan-blue-background-color has-background”>திருப்புகழ்க் கதைகள் 228
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

தகர நறுமலர் – பழநி
கோவர்த்தனகிரிதாரி 2

அப்பொழுது பசுக்கள் வெகு வேகமாக வீசிய காற்று மழையிலே அலைக்கழிக்கப்பட்டு, மூர்ச்சித்து விழுந்தன. அனைவரும் கிருஷ்ணனை நோக்கி, ‘‘கிருஷ்ணா, நீயே எங்களைக் காப்பாற்ற வேண்டும்’’ என்று தீனக்குரலில் வேண்டினர். இந்தப் பிரார்த்தனையைக் கேட்ட கிருஷ்ண பரமாத்மா, பிருந்தாவனத்தில் உள்ள என் பக்தர்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டும். எனவே பெரிய கற்பாறைகளும், மரம், செடி கொடிகளும் நிறைந்த இந்தக் கோவர்த்தன பர்வதத்தை அடியோடு பெயர்த்து எடுத்து இந்த இடைச்சேரிக்கே ஒரு பெருங்குடையாகப் பிடித்துக் காப்பேன் – என்று திருவுள்ளம் கொண்டார். கிருஷ்ணர் தரையிலிருந்து குடைக்காளானைப் பறிப்பதுபோல், பிரமாண்டமான கோவர்த்தன கிரியைத் தூக்கி, அதைத் தாங்கிப்பிடித்துக்கொண்டு கோபாலரையெல்லாம் கூவியழைத்தார். அவர்களும் தங்களது மாடு கன்றுகளுடனும், தங்கள் உடைமைகளுடனும் வந்து சேர்ந்தனர்.

பகவானும் அந்த மலையை ஆடாமல் அசையாமல் தமது இடதுகையின் சுண்டுவிரலின் நுனியில் நிறுத்தினார். அப்போது பசி, தாகம், வேறு எந்தவிதமான கவலையுமில்லாமல் அவர் முகம் ஒளிவிட்டதை எண்ணி அனைவரும் ஆச்சர்யமடைந்தார்கள். ஏழு தினங்கள் ஓயாமல் மழை பெய்ய, சுவாமியும் அந்த கோவர்த்தனகிரி மலையை குடைபோல ஏந்தி அனைவரையும் காத்தருளினார்.

கிருஷ்ணரின் அசாதாரணமான யோக சக்தியைக் கண்டு சுவர்க்கத்தின் அதிபதியான இந்திரன் இடியால் தாக்கப்பட்டவனைப்போல் திகைப்படைந்து உறுதி குலைந்தான். தன் முயற்சிகளெல்லாம் வீணாயிற்றே என்று நினைத்து உடனே மேகங்களையெல்லாம் விலகிச்செல்லும்படி கட்டளையிட்டான். ஆகாயம் தெளிவு பெற்றதும் பலத்த காற்று வீசுவது நின்றது. அப்போது ‘கோவர்த்தன கிரிதாரி’என்ற பெயரைப் பெற்றார் கிருஷ்ண பரமாத்மா.

விதுரரும் ஸ்ரீ கிருஷ்ணரும்

ஸ்ரீ கிருஷ்ணரின் பாண்டவர்களின் தூதராக வருகிறார் என்பதை அறிந்து திருதராட்டிர மகராஜா அவரை வரவேற்க பல ஏற்பாடுகளைச் செய்கிறார். பெரிய மாளிகைகளை நவமணிகளால் இழைத்துத் தயாராக வைத்திருக்க ஆணையிடுகிறார். யானைகளையும், உயர்சாதிக் குதிரைகளையும், பணியாட்களையும், நூறு கன்னிப் பெண்களையும், கால்நடைகளையும் பரிசளிக்க ஏற்பாடு செய்தார்.

இவற்றையெல்லாம் பார்வையிட்ட விதுரர் “நல்லது. நீர் நீதிமான் என்பதோடு புத்திமானும் கூட. அதிதியாக வரும் ஸ்ரீ கிருஷ்ணர் நீர் கொடுக்க நினைக்கும் பரிசுப் பொருட்களைப் பெற தகுதியுடையவரே. கேசவர் எந்தப் பொருளுக்காக, பாண்டவர்களின் நன்மையை விரும்பி வருகிறாரோ அதை அன்றோ நீர் கொடுக்க வேண்டும்?” என்று வினா எழுப்புகிறார்.

vidhura and sri krishna - Dhinasari Tamil

திருதராட்டிரன் கபடதாரி; விதுரர் வெளுத்ததெல்லாம் பால் என எண்ணுபவர். துரியோதனன் கொண்டிருந்த எண்ணமோ வேறு. அவன் “ஸ்ரீ கிருஷ்ணர் பூஜைக்கு உரியவர் என்றாலும் அவருக்கு நாம் மரியாதை செய்யக் கூடாது. பகை தவிர்ப்பதற்காக அவர் கூறும் அறிவுரைகளை எவ்வாறாயினும் நாம் ஏற்கப் போவதில்லை எனும்பொழுது அவரை எவ்வாறு நல்லவிதமாக வரவேற்க முடியும்? அவரை அப்படி வரவேற்று பூஜை செய்வோமேயானால் அவருக்கு பயந்து கொண்டு செய்வதாகத்தானே மற்றவர் கருதுவர்? நாம் கிருஷ்ணரை சிறைப் பிடிப்போம். ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்களின் பலம்; அவர்களுடைய சூத்திரதாரி. அந்த ஜனார்த்தனரை பிடித்து அடைத்து விட்டால் பிறகு பாண்டவர்கள் என் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விடுவார்கள்.“ என்று துரியோதனன் நினைத்தான். அதற்குத் தகுந்த ஏற்பாடுகளை அவன் செய்தான்.

கௌரவர்களில் சிலரும் அத்தினாபுர மக்களும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு உரிய மரியாதை அளித்து அவரை அழைத்து வந்தனர். தனது வருகைக்காக அலங்கரிக்கப் பட்டிருந்த மாளிகைகளையும், பரிசுப் பொருட்களையும் பார்வையிட்ட ஸ்ரீ கிருஷ்ணர் அவற்றை ஒதுக்கி விட்டு நேரே திருதராட்டினன் மாளிகைக்குச் செல்கிறார். தானே ஒரு ஆசனத்தில் அமர்ந்து கொண்டு அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் அவரவர் தகுதிக்கு ஏற்றது போல பேச ஆரம்பிக்கிறார். திருதராட்டிரருக்கும் விதுரருக்கும் வேத வியாசர்தான் நேரடித் தந்தை. திருதராட்டிணனின் தாயான அம்பிகா விசித்திரவீரியனின் தர்ம பத்தினி. விசித்திர வீரியனின் அரண்மனையில் பணிபுரியும் வைசிய குல தாசியின் மகனே விதுரராவார். அந்த கால வழக்கப்படி விசித்திர வீரியனுக்கு நேரடி வாரிசாக திருதராட்டினனே அறியப் பட்டார். அதே சமயம் விதுரனை விசித்திர வீரியனின் மகனாகவே ஜனங்கள் கருதவில்லை.

மிகவும் எளியவரான விதுரர் தர்மத்தின் வழி நிற்பவர். கௌரவர் மாளிகைக்குள் நுழையும் ஸ்ரீ கிருஷ்ணர் நேரே விதுரரின் குடிலுக்குள் நுழைந்து அவருடைய வரவேற்பை ஏற்றுக் கொள்கிறார். பாண்டவர்களின் தாயும் ஸ்ரீ கிருஷ்ணரின் அத்தையுமான குந்தி தேவி அந்த குடிலில்தான் வசித்து வந்தார். வனவாசம் செல்ல நேரிடும்பொழுது பாண்டவர்கள் தங்கள் அன்னையை விதுரரின் பாதுகாப்பில்தான் விட்டு விட்டு செல்கின்றனர். அவளையும் ஸ்ரீ கிருஷ்ணர் அங்கே சந்திக்கிறார். அப்போது அவர்கள் என்ன பேசினார்கள்? நாளை காணலாம்.

– Advertisement –

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply