திருப்புகழ் கதைகள்; அரனுக்குத் தாம் மொழிந்த குருநாதர்

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் பகுதி 247
– முனைவர்கு.வை. பாலசுப்பிரமணியன் –

பகர்தற்கு அரிதான – பழநி
அரனுக்குத் தாம் மொழிந்த குருநாதர்

அரனுக்குத் தாம் மொழிந்த குருநாதராகிய அருள்மிகு சுவாமிநாத சுவாமி சுவாமிமலையில் திருக்கோயில் கொண்டு அருளுகிறார். இக்கோவிலின் மூலவர்சுவாமிநாதர் என்ற பெயருடன் சுப்பையா எனவும் அழைக்கபடுகிறார். வள்ளி, தெய்வானை இருவரும் முருகப்பெருமானின் தேவியராக இருந்து அருள்பாலிக்கின்றனர். இங்கே தல விருட்சம் நெல்லிமரம் ஆகும். இத்தலத்தின் தீர்த்தங்களாக வஜ்ர தீர்த்தம், குமாரதாரை, சரவண தீர்த்தம், நேத்திர குளம், பிரம்ம தீர்த்தம் ஆகியவை உள்ளன. இதன் புராண பெயர் திருவேரகம் என்பதாகும்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், சுவாமிமலை, அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாகும். தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உபதேசித்த பிரசித்தி பெற்ற தலமாகும்.

முருகப்பெருமான் இக்கோவிலில் தகப்பன்சுவாமி எனப் புகழ் பெற்று காணப்படுகிறார். குருவாகி இருந்து அருளியதால் குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் மற்றொரு பெயர் திருவேரகம் என அழைக்கப்படுகிறது. இறைவன் இங்கு சுவாமிநாதனாக இருப்பதால் சுவாமிமலை என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது. இங்கு சிவன் சுந்தரேசுவரர் தாயார் மீனாட்சி என பெயரில் உள்ளதால், இக்கோவில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் என அழைக்கப்படுகிறது

சிவபெருமான் பிரணவத்தின் பொருள் அறிந்தவரே, அறியாதவர் அல்ல. ஒருமுறை பிருகு முனிவர் ஈசனக்கு பிரம்மஞானத்தை மறக்க கடவது என சாபமிட்டிருந்தார். பிருகு முனிவரின் சாபத்தை ஏறுக்கொண்டதால் பிரணவ உபதேசத்தை முருகனிடம் அவர் ஏற்றார். ஆத்மாவை புத்திர நாமஸி என்கிறது வேதவாக்கு. அதன்படி தன் பிள்ளையான சுவாமிநாதனிடம் ரிஷியின் வாக்கை உண்மையாக்க சிவன் பிரம்மோபதேசம் செய்து கொள்கிறார்.

தென்கையிலாயம் என அழைக்கப்படும் திருவையாற்றில் இருந்துதான் சிவனின் உபதேசம் பயணம் தொடங்கியது. ஆவணி மாதம், அஸ்த நட்சத்திரம் கூடிய அற்புதமான நன்னாளில் சக்தி, கணபதி உட்பட தன் படைபரிவாரங்களுடன் புறப்பட்டு நந்தியெம்பெருமானை விட்ட இடம் நந்தி மதகு என்றும், கணபதியை அமர வைத்த இடம் கணபதி அக்கிரஹாரம் என்றும், சக்தியை அமரவைத்தது உமையாள்புரம் என்றும், சிவபெருமானின் தலையில் உள்ள கங்கையினை அமர வைத்த இடம் கங்காதரபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

அதன்பின்னர் சிவபெருமானும் முருகனும் தனியாக அருகில் உள்ள மண்குன்று (மலை) பகுதியில் ஓம் எனும் பிரணவ பொருள் உபதேசம் நிகழ்த்திய தலமானதால் சுவாமிக்கே நாதனாக இருந்தமையால் இப்பகுதி சுவாமிமலை என அழைக்கப்பெறுகிறது. பிற்காலத்தில் இம்மண்குன்றினை கட்டுமலையாக அமையப்பெற்றது. இத்தலத்தில் முருகப்பெருமானை தேவர்கள் புடைசூழ வழிபட்ட தேவேந்திரன் தனது நினைவாக ஐராவதத்தினை (வெள்ளை யனை) முருகப்பெருமானுக்கு வழங்கியதால் மூலவருக்கு முன், இன்றும் ஐராவதம் உள்ளது. முருகன் திருக்கோவில்களில் சன்னதி முன் மயில் காணப்படும். தன்னுடன் வரப்பெற்ற தேவர்களில் தமிழ் வருட பெயர் கொண்ட தேவதைகள் அறுபது பேரை இத்தலத்தில் முருகப்பெருமானுக்கு சேவை செய்ய விட்டு சென்றார். தமிழ் வருடத்தேவர்கள் அறுபது பேரும் இத்தலத்தில் முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்கள் முதுகு மேல் ஏறி தரிசிக்க வேண்டிய பாக்கியம் அருள முருகனிடம் இத்தலத்தில் அறுபது படிகளாக அமையப்பெற்றனர்.

முருகப் பெருமானின் அருளால் காவிரி ஆறு இத்தலத்தில் குமார தாரை என்கிற பெயரில் உள்ளது. கங்காதேவி முருகனை தரிசித்து தனது பாபவிமோசனம் பெற்றதால் இத்தலத்தில் விருட்சமாக இருக்க அருள்பாலித்தார். கங்காதேவி இத்தலத்தில் தாத்தாத்ரி (நெல்லி மரம்) தலவிருட்சமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply