திருப்புகழ் கதைகள்: கானகம் போந்த ராமன்!

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் – 256
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

மருமலரினன் – பழநி
இராமன் கானகம் போந்தான்

இத்திருப்புகழில் திருவொடு பெயர்ந்து, இருண்ட வன மிசை நடந்து, என்ற வரியில் அருணகிரியார் ஸ்ரீ இராமபிரான் இளையாளொடும் இளையானொடும் கானகம் சென்றதை விவரிக்கிறார். மன்னன் தசரதன் உன்னைக் கானகம் போகச் சொன்னான் என கைகேயி இராமனிடத்தில் உரைக்கிறாள்.

ஆழி சூழ் உலகம் எல்லாம்
பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இரும் சடைகள் தாங்கித்,
தாங்க அரும் தவம் மேற் கொண்டு,
பூழி வெம் கானம் நண்ணிப்,
புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழ் இரண்டு ஆண்டின் வா ‘என்று
இயம்பினன் அரசன் என்றாள்.
(கம்பராமாயணம், அயோத்தியா கண்டம், கைகேயி சூழ்வினைப் படலம்)

மன்னவரான எனது தந்தை தசரதன் சொன்னல் என்ன? நீங்கள் சொன்னால் என்ன? இதோ மன்னன் ஆணைப்படி நான் கானகம் செல்கிறேன் எனக்கூறி இராமன் தனது தாய்மார்களிடம் விடைபெற்று, சீதையுடனும் இலக்குவனுடனும் கானகம் செல்லத் தயாராகிறான்.

பிறிது ஓர் மாற்றம் பெருந்தகை பேசலன்;
மறுகி வீழ்ந்து அழ மைந்தரும் மாதரும்
செறுவின் வீழ்ந்த நெடுந் தெருச் சென்றனன் –
நெறி பெறாமை அரிதினின் நீங்குவான்.
(கம்பராமாயணம், அயோத்தியா கண்டம், நகர் நீங்கு படலம்)

பெருந்தகையான ஸ்ரீ இராமன் வேறு ஒருவார்த்தையும் பேசாதவனாய் ஆடவரும் மகளிரும் மனங்கலங்கி விழுந்து அழுதலால், அவர் கண்ணீரால் சேறாகி வயல் போலக் கிடக்கின்ற பெரிய தெருவின்கண் வழி கிடைக்கப் பெறாமையால் சிரமப்பட்டு நீங்கிச் சென்றான். – எனக் கம்பர் அழகுறக்கூறுவார். மேலும் அவர்கள் மூவரும் எவ்வாறு சென்றார்கள் என்பதனை

சீரை சுற்றித் திருமகள் பின் செல,
மூரி விற் கை இளையவன் முன் செல,
காரை ஒத்தவன் போம்படி கண்ட, அவ்
ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ?
(கம்பராமாயணம், அயோத்தியா கண்டம், நகர் நீங்கு படலம்)

திருமகளாகிய சீதை மரவுரி அணிந்து பின்னால் வர, வலிய வில் ஏந்திய கையை உடைய இலக்குவன் முன்னே செல்ல, கார்மேக வண்ணனாய இராமன் போகும் தன்மையைப் பார்த்த அந்தநகரத்தவர் அடைந்த துன்பத்தை எடுத்துக் கூறவும் இயலுமோ என அத்துயரை எடுத்துக்கூற இயலாது எனச் சொல்லுகிறார் கம்பர். வேறு ஒரு இடத்தில் ஸ்ரீ இராமன், சீதாப்பிராட்டியார், இளையவர் மூவரும் செல்வதை வருணிக்கும்போது

வெய்யோன் ஒளி தன் மேனியின்
விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
இளையானொடும் போனான் –
‘மையோ, மரகதமோ, மறி
கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர்
அழியா அழகு உடையான்.
(கம்பராமாயணம், அயோத்தியா கண்டம், கங்கைப் படலம்)

கண்ணுக்கு இடக்கூட்டிய மையோ, பச்சை நிற ஒளிக்கல்லாகிய மரகதமோ, கரையின்கண் அலைகளால் மறிக்கின்ற கடலோ, பெய்யும் கார் மேகமோ, உவமை சொல்லமாட்டாத நிலையாகிய ஐயோ, தன் உருவம் என்று சொல்லப்படுவதாகிய ஒப்பற்ற அழியாத அழகினை உடையன் இந்த ஸ்ரீ இராமன். சூரியனது ஒளியானது தன் திருமேனியிலிருந்து வெளிப்படும் நீல ஒளியில் இல்லை எனும்படியாக மறைந்துவிடும்படி, இல்லையோ என்று சொல்லத்தக்க நுண்ணிய இடையினை உடைய சீதையோடும் தம்பியாகிய இலக்குவனோடும் காட்டு வழியே நடந்து செல்லலானான்.

மை, அடர்ந்து கருநிறம் உடையது; செறிவான கருமைக்கு உவமையாயிற்று, மரகதம் பசுமை நிறம் படைத்ததாய்க் குளிர்ச்சி தருவதாதலின் நிறத்தோடு தண்மைக்கும் ஒப்பாயிற்று. மறிகடல் நீல நிறம் படைத்ததாய் இடையறாது இயங்கிக் கொண்டிருக்கிறது; ஆதலின், இயங்குகின்ற ஸ்ரீ இராமனது சோபைக்கு உவமையாயிற்று, மழை முகில் கருநிறம் படைத்து நீர் என்னும் பயனும் உடைய காரணத்தால் உயிர்களுக்கு நலம் செய்வது ஆதலின் உவமையாயிற்று. கருமையும், தண்மையும், இடையறா இயக்கமும், தண்ணளியாகிய கருணையும் இவற்றுள் தனித்தனி காணல் அன்றி இவை நான்கும் ஒருங்கேயுடைய இராமபிரானுக்கு ஒருங்கே உடையதொரு உவமை காண்டல் அரிதாயினமை பற்றி அதிசயித்து இனி உவமை சொல்ல மாட்டாமையாகிய இரக்கமும் தோன்றி ‘ஐயோ’ என முடித்தார். ஆயினும், அதுவே இராமபிரானது பேரழகை அவர் சொல்லி முடித்ததாக ஆயிற்று.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply