திருப்புகழ் கதைகள்: முதிர உழையை..!

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் 258
– முனைவர் கு வை பாலசுப்பிரமணியன்-

முதிர உழையை – பழநி

அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றியெண்பத்தி ஆறாவது திருப்புகழ், ‘முதிர உழையை’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். இத்திருப்புகழில் “பழநியப்பா, அறிவற்றவனும் முழுப்புரட்டனும் ஆகிய என் உள்ளம் மகிழ, திருவடியைத் தந்து அருள்” என அருணகிரியார் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

முதிர வுழையை வனத்தில் முடுகி வடுவை யழித்து
முதிய கயல்கள் கயத்தி …… னிடையோடி

முரண வளரும் விழிக்குள் மதன விரகு பயிற்றி
முறைமை கெடவு மயக்கி …… வருமாதர்

மதுர அமுத மொழிக்கு மகுட களப முலைக்கு
வலிய அடிமை புகுத்தி …… விடுமாய

மனதை யுடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன்
மகிழ வுனது பதத்தை …… யருள்வாயே

சதுரன் வரையை யெடுத்த நிருத னுடலை வதைத்து
சகடு மருத முதைத்த …… தகவோடே

தழையு மரமு நிலத்தில் மடிய அமரை விளைத்த
தநுவை யுடைய சமர்த்தன் …… மருகோனே

அதிர முடுகி யெதிர்த்த அசுர ருடலை வதைத்து
அமரர் சிறையை விடுத்து …… வருவோனே

அரிய புகழை யமைத்த பெரிய பழநி மலைக்கு
ளழகு மயிலை நடத்து …… பெருமாளே.

இத்திருப்புகழின் பொருளாவது – ஆற்றல் படைத்தவரும், கயிலை மலையை எடுத்த இராவணனுடைய உடலை அழித்தவரும், சகடாசுரனை உதைத்தவரும், நன்கு தழைத்திருந்த மருத மரத்தை நிலத்தில் விழுமாறு உதைத்தவரும், போர் புரிந்த வில்லை ஏந்தியவரும், திறமையுடையவருமாகிய திருமாலின் மருகரே; பூமி அதிருமாறு எதிர்த்து வந்த அரக்கர்களின் உடல்களை வதைத்து, தேவர்களைச் சிறையிலிருந்து விடுவித்து அருள் புரிந்தவரே;

அருமையான புகழைக் கொண்டுள்ள உயர்ந்த பழநி மலையின் மீது அழகிய மயிலை நடத்தி உலாவும் பெருமிதம் உடையவரே; மாதர்களின் இனிய அமுதம் போன்ற சொற்களுக்கு வலிய என்னை அடிமைப்படுத்தி வைக்கும் மாயம் நிறைந்த மனத்தைப் படைத்த அறிவற்ற மனிதனும் முழுப் புரட்டனுமாகிய அடியேன் உள்ளம் உவக்குமாறு தேவரீருடைய திருவடியைத் தந்தருளுவீராக என்பதாகும்.

இத்திருப்புகழில் பெண்களுக்கு பல உவமைகளை அருணகிரியார் கூறுகிறார். முதலில் ‘மான்கள் வனத்திற்குள் ஓடிவிட்டன’ என்கிறார். புலவர்கள் பெண்களுடைய கண்களுக்கு உவமையாக மானைப் புகல்வார்கள். மான்போல் மிரண்டு பார்க்கும் இயல்புடையன கண்கள். ஆனால் அழகிற் சிறந்த மாதர்களுடைய கண்களுக்கு மான் தோல்வியுற்று தளர்ச்சியடைந்து காட்டுக்குள் ஓடி விட்டதாம், மான் இயல்பாக காட்டில் வாழும் தன்மை யுடையது. இவர்கள் கண்கள் காட்டுக்கு மானை ஓட்டி விட்டது என்று தற்குறிப்பேற்றி கூறுகின்றார்.

மாம் பிஞ்சினைப் பிளந்தால் கண்களைப்போல் அது காட்சி தரும். அந்த மாவடுவை உப்பில் இட்டு ஊற வைத்து ஊறுகாயாக மக்கள் உண்பர். இதனை இக்கண்களைத் தான் உப்பிலிட்டு அழித்துவிட்டதாகக் கூறுகின்றார். மாவடுவும் கண்களுக்குத் தோல்வியுற்றது. பெரிய மீன்கள் கண்ணுக்கு உவமைப் பொருள்களாகும். மீன்கள் குளத்தில் வாழும் இயற்கையுடையன. விழிக்குத் தோல்வியுற்றுக் குளத்திற் சென்று ஒளிந்து வாழ்கின்றன என்கின்றார்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply