திருப்புகழ் கதைகள்: கொடையொடு பட்ட குணம்!

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் – பகுதி 263
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

மூலமந்திரம் – பழநி
கொடையொடு பட்ட குணம்

ஆறெழுத்து ஓதுவதுடன் ஈகையுமிருத்தல் அவசியம். ஈகையுடன் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவதும் வேண்டும். எல்ல உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவதால் அன்புமயமாகி, பேசா அநுபூதி பெற்று, மனோலயமுற்று அசைவற்ற நிலையையடைவர். மௌன நிலையை மேவி நிற்க, மெய்ஞ்ஞானந் தலைப்படும்.

ஈகை என்பதற்கு பல்வேறு காலங்களில் பல்வேறு விளக்கங்கள் உள்ளன. ஈகை என்பது ஒரு முக்கியமான அறம். பாரதியார் அறம் பற்றிச் சொல்லும்போது

வீடுதோறும் கலையின் விளக்கம்
வீதிதோறும் இரண்டொரு பள்ளி
காடு முற்றிலும் உள்ளன ஊர்கள்
நகர்கள் எங்கும் பலப்பல பள்ளி

என்று அனைவருக்கும் கல்வி அளித்தல் சிறந்தது எனக் கூறி,

இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிர நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

என்று கூறி,

வயிற்றுக்குச் சோறிட வேண்டும்
இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்
பயிற்றிப் பல கல்வி தந்து இந்தப்
பாரை உயரத்திட வேண்டும்

என்றும் கூறினார். ஆயினும் பொதுவாக ஈகை என்பதற்கு வறுமையால் வாடியவர்களாக வந்து இரந்து நிற்பவர்களுக்குத் தம்மிடம் உள்ளதை இல்லை என்று சொல்லாமல் கொடுத்தலே ஈகை ஆகும். இதனால், அவரது வறுமையினால் உண்டான துன்பம் தீரும். மேலும் வழங்கியவர்களுக்கு மறுமையில் இன்பம் வாய்க்கும். மீண்டும் எந்த உதவியையும் செய்ய இயலாத வறுமையில் வாடியவர்க்குத் தருதலே உண்மையான ஈகையாகும். இதனை நாலடியார்,

இல்லா விடத்து மியைந்த வளவினா
லுள்ள விடம்போற் பெரிதுவந்து-மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடை மாந்தர்க்
கடையாவா மாண்டைக் கதவு.

அதாவது கொடுத்து மகிழத்தக்க அளவு செல்வம் நம்மிடையே இல்லாத காலத்திலும், நம்முடைய நிலைமைக்குத் தகுந்தாற் போல மனமுவந்து கொடுத்து உதவும் ஈகைக் குணமுடையோருக்கு சொர்க்கத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். இதனைத் திருக்குறளில்

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.

எனச் சுருக்கமாக கூறப்பட்டுள்ளது.

இறைவனின் திருநாமத்தை ஓதாதவனை மூகன் என அருணகிரியார் அழைக்கிறார். இதனை மூகன் என்று ஒரு பேரும் உண்டு என்ற வரியில் காணலாம். பேய்வாழ் காட்டகத்து ஆடும்பிரான் நமக்கு வாய் தந்தது அவனது வார்கழலை வாழ்த்துவதற்காகவே. “வாழ்த்த வாயும்” “வார்கழல் வாய் வாழ்த்த வைத்து” “வாயே வாழ்த்து கண்டாய்” என்பவை தமிழ் வேத வசனங்கள். ஊர் வம்புகளை ஓயாமல் பேசிக்கொண்டு இறைவனை வாழ்த்தாமையால் வாயிருந்தும் மனிதன் ஊமை ஆகின்றான்.

இதைப்போலவே சிவநெறிக்கு அடையாளங்களாகிய விபூதி உருத்திராக்கம் அணிந்து கொள்ளாத மனிதர்களைப் பாழ்வடிவம் கொண்டோர் என அருணகிரியார் குறிப்பிடுகிறார். மேலும் மூலமந்திர மோதுதல், ஈதல், அன்புசெய்தல், மோனம் ஞானம் ஆகிய நற்குணமின்றி, மோக, தாகம், அபராதம் முதலிய தீக்குணங்களுடையார் நரகில் வீழ்ந்து பலகாலும் துன்புறுவர் என்றும் கூறுகிறார்.

நரகத்தில் பல துன்பங்களை அநுபவித்து எஞ்சி நின்ற மிக்க கருமங்களை அனுபவிக்க வேண்டும். அவற்றை அனுபவிக்க புல், பூண்டு, புழு, பறவை, மிருகம், மனிதன் என பலப்பல பிறப்புக்களை எடுத்து உழலுவர்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply