ஸ்வாமி மணவாளமாமுனிகள் திருவத்யயனம்!

ஆன்மிக கட்டுரைகள் விழாக்கள் விசேஷங்கள்
manavalamanunigal sannidhi srirangam - Dhinasari Tamil

மாமுனிகள் திருவத்யயனம்

-> பிள்ளைலோகம் இராமானுசன்

சிஷ்யனானவன் ஆச்சார்யனுடைய ஜென்ம தினம் மற்றும் அவர் ஆசார்யன் திருவடி அடைந்த நாளை கொண்டாடவேண்டும்.

ஆச்சார்யனுடைய ஜென்ம தினம் “திருநக்ஷத்திரம்” எனப்படும் ,ஆசார்யன் திருவடியடைந்த நாள், ஸ்ரீ வைஷ்ணவர்களால், திருவத்யயநம் (தீர்த்தம்) எனப்படும்.

நம்மாழ்வார் தொடங்கி திருவாய்மொழிப்பிள்ளை வரை உள்ள ஆச்சார்யர்களுக்கு நேரே தொடங்கி, ஓராண்வழி ஆச்சார்யர்களுக்கும், மற்றுள்ள ஆச்சார்களுக்கும் அவர்களிடத்தில் நேரே சிஷ்யராக அடைந்தவர்கள் இந்நிலவுலகில் தற்போது இல்லை, அதலால் அவர்களது திரு நக்ஷ்த்திரம் கொண்டாப்படுகிறதே தவிர அவர்களது தீர்த்தம் கொண்டாப்படுவதில்லை.

ஆனால் ஸ்வாமி மணவாளமாமுனிகள் மட்டும் விதிவிலக்கு! அதிலும் கோயில் மணவாளமாமுனிகளின் சன்னதியில் மட்டும் கொண்டாப்படுகிறது. மற்ற திவ்யதேசங்களில் மணவாளமாமுனிகளுக்கு சன்னதி இல்லாமல் இல்லை, அதிலும் கோயில் மணவாள மாமுனிகளுக்கு மட்டுமே தீர்த்தம் கொண்டப்படுகிறது, அதற்கு காரணம்;

நம்பெருமாள் மணவாளமாமுனிகளை ஆச்சாரியனாய் கொண்டு ஒரு வருட காலம் தான் ஸிஷ்யனாய் திருவாய்மொழியின் ஈடு அர்த்தத்தை செவிசாய்த்தான், மேலும் சாற்றுமுறை தினத்தன்று, சிறிய பாலகனாய் அவர் முன் தோன்றி “ஸ்ரீ சைலேச” என்ற தனியனை அருளிச்செய்தார் என்பது ஜகத் ப்ரசித்தம். அது முதற்கொண்டே மாமுனிகளின் திருநக்ஷத்திரத்திற்கு அநேக பகுமானங்கள் நம்பெருமாள் சன்னதியில் இருந்து அனுப்பப்படுகிறது.

மணவாள மாமுனிகள் தன் ஆசாரிய திருவடியை அடைந்த நாள் மாசி , கிருஷ்ணபக்ஷ துவாதசி (16-2-1444, திருவோணம், ஞாயிற்றுக்கிழமை). ஒவ்வொரு ஆண்டும் இந்நாளை மணவாள மாமுனிகளின் திருவத்யயன உற்சவமாக தெற்கு உத்தர வீதியில் உள்ள ஸ்ரீமணவாளமாமுனிகள் சன்னதியில் நடைபெறுகிறது. திருநக்ஷத்திரத்தை போலவே மாமுனிகளின் தீர்த்தத்திற்கும் அநேக பகுமானங்கள், பெரிய பெருமாள் சன்னதியில் இருந்து அனுப்பப்படுகிறது.

மாமுனிகள் பரமபதித்தபோது பெரியபெருமாள் அவருக்கு சிஷ்யனாய் இருந்தமை தோற்ற பிரதி வருடமும் மாமுனிகள் தீர்த்தமும் கொண்டப்படவேண்டும் என்று நியமித்தாராம். மாமுனிகளிடத்தில் சிஷ்யராக ஆச்ரயித்த நம்பெருமாள் இன்றைக்கும் ஏழுந்தருளியிருப்பதால், ஸ்ரீரங்கத்தில் மட்டும் மாமுனிகளின் தீர்த்தம் கொண்டப்படுகிறது.

மாசி கிருஷ்ணபக்ஷ துவாதசி திதியன்று பெரியவசரத் தளிகை பெரியகோவில் அர்ச்சகர்களால் மாமுனிகளின் ஸந்நிதி சென்று கண்டருளப்படுகின்றது.அன்றைய தினம் தம்முடைய ஆச்சார்யனின் தீர்த்த தினமாகையினாலே அரங்கன் சந்தனம் சாற்றிக் கொள்வதில்லை.தாம்பூலமும் தரிப்பதில்லை.

திருவத்யயன கோஷ்டி, ஏகாதசி தினம் தொடங்கி, மறுநாள் துவாதசி தினம் அன்றைய தினம் திருவாய்மொழி கோஷ்டி முடிகிறது.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply