திருப்புகழ் கதைகள்: அறிவும் கூட சில நேரங்களில் ஆபத்தாகவே அமைகிறது!

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் பகுதி 272
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

இருவினை புனைந்து – சுவாமி மலை
அறிவு சில சமயங்களில் ஆபத்தானது

வராக வடிவில் கீழே சென்று கொண்டிருந்த விஷ்ணுவிற்குக் கொஞ்சம் கொஞ்சமாக அலுப்புத் தட்ட ஆரம்பித்தது. தன்னை விட ஒரு பெரிய சக்தி உள்ளது என்பதை அவர் உணர்ந்தார். அதன் விளைவாக மேற்கொண்டு செல்லாமல் திரும்பிய அவர், தன்னை ஒரு சோதனைக்கு உள்ளாக்கிய அந்தச் சோதியினை உணர்ந்தார்.

ஒருவன் கை நிறைய சம்பாதித்து செல்வம் கொழித்து இருக்கையில், அவனுக்கு சொல்லொணாத் துயர் வந்தால் என்ன செய்வான்? “செல்வம் இல்லாதபோது, செல்வம் வேண்டினோம்; இதனால் பயனில்லை” என்று அனுபவப்பட்டு, அச்செல்வம் போனாலும் பரவாயில்லை என்று உணர்ந்து அதை இழக்கவும் தயாராக இருப்பான். அந்த நிலையில்தான் அவனுக்கு உலகின் நிலையாமை தெரிய வருகிறது. அவன் துறவுக்குத் தயார் ஆகிறான். இது போன்ற நிலையில்தான் விஷ்ணு இருந்தார்.

ஏறத்தாழ இதற்கு நேர் மாறான நிலையில் பிரம்மன் இருந்தார். கீழே விழுந்துகொண்டிருந்த தாழம்பூவைப் பார்த்த பிரம்மனுக்கோ அவரது புத்தி வேலை செய்ய ஆரம்பித்து, மேலிருந்து பூ வந்தால் அது மேலேயுள்ள முடியிலிருந்துதான் வருகிறது என்றும், அதனால் அப்பூவையே தான் முடியைப் பார்த்ததிற்கு சாட்சியாக வரச் சொல்லலாம் என்ற எண்ணமும் தோன்றி அப்படியே செய்கின்றார்.

இப்படிச் செய்தால் தான் வென்றுவிடுவோம் என்றும் அவருக்குத் தோன்றுகிறது. கலைகளுக்கும், ஞானத்திற்கும் அதிபதியான சரஸ்வதியின் பதிக்கு ஏன் இப்படித் தோன்றியது?.

அறிவு என்பது சரியான முறையில் சரியான மன நிலையில் வளரவில்லை என்றால் அது கில்லி போன்றது. இருபுறமும் கூறான ஒரு ஆயுதம். அப்போது புத்தியானது குறுக்குப் பாதையில் சென்று, அனைவருக்கும் உதவும் யுக்திகளுக்குப் பதிலாக தீய குயுக்திகளை வளர்க்கும். அது ஒருவனை தாழ் நிலைக்குக் கொண்டுசெல்லும். அதிலிருந்து மீள்வது மிகக் கடினமானதாகிவிடும்.

உலக வாழ்க்கையிலிருந்தே தன் செயல்கள் மூலம் ஒருவனுக்கு அறிவு வளர்ந்தாலும், அது படிப் படியாக அவனை நல் வழிப்படுத்தி இறுதியில் அறிவுக்கும் ஆதாரமான தன்னை உணரச் செய்வதாக அமைய வேண்டும். அப்படியாகவில்லை என்றால் அது பாழ் அறிவே. அது பொல்லா விளைவுகளையே கொடுக்கும்.

அதனால் ஒருவன் அனாவசியமாக வாதத்தில் ஈடுபட்டுக்கொண்டோ, அனர்த்தங்களைக் கற்பித்துக்கொண்டோ, தவறான வழிகளில் மற்றவர்களை நடத்திக்கொண்டோ வாழ்நாளை வீணாக்குவான். அதுதான் பிரம்மன் விஷயத்திலும் நடந்தது.

வாழ்வு நன்கு அமைய ஒருவன் இயங்க வேண்டும். முதலில் அது உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் ஆகிய அடிப்படை தேவைகளுக்கும், பின்பு சில கூடுதல் தேவைகளுக்குமாகத் தொடரும். ஆரம்பத்தில் இருந்த ஆசை பின்பு பேராசையாக மாறினாலும், ஒருவனுக்கு தலையில் இடி போன்று ஒரு துயர நிகழ்ச்சி நேரும்போது இவ்வுலகின் உண்மையை அவன் உணரக்கூடும்.

ஓடி ஓடித் தேடிய செல்வத்தின் இயலாமையை உணர்வான். ஆனால், அப்படி செயல்களில் ஈடுபடும்போதே அவன் அப்பொருட்களின் நிலையாத் தன்மையையும் உணர்ந்து, செயலை ஒரு கர்ம யோக வழிப்படி செய்து பலன்களில் நாட்டம் கொள்ளாது இருந்திருந்தால் மன முதுர்ச்சியை அடைந்திருப்பான்.

இவ்வழியில் பலன் கிடைக்க காலதாமதம் ஆகலாம் என்றாலும், பலருக்கும் இது தான் எளிதான, சிறந்த வழி. அவ்வழி செல்லும் போது செயலில் நேர்மை, திறமை கூடுவது அன்றி மனதளவிலும், முடியவில்லை என்னும்போது அதை ஒத்துக்கொள்ளவும், சரண் அடையும் மனப் பக்குவமும் வளரக்கூடும். விஷ்ணு அதைத்தான் செய்தார்.

பக்குவம் அடையாத அறிவு மிக மிக ஆபத்தானது. மனப் பக்குவத்துடனும் பொறுப்புடனும் வளரும் அறிவே நல்லறிவு. அதுவே ஒருவனை மேல் நோக்கி எழச் செய்யும்; உள் நோக்கி விழிக்கச் செய்யும்.  பக்குவத்துடன் அறிவு வளரவில்லை என்றால் அந்த அறிவு, மண்ணைத் தோண்டி நீரைப் பெறுவது போல தன்னைத் தோண்டி ஞானம் பெறுதல் வேண்டும். அவ்வறு செய்யாது பிரம்மனுக்கு தோன்றியது போல் குறுக்கு வழியில் அரிவைச் செலுத்தினால்  அது மேலும் பல துன்பங்களைத்தான் கொடுக்கும்.

பிரம்மா-விஷ்ணுவின் மோதலில் நமக்கு இன்னுமொரு பாடமும் இருக்கிறது. ஸ்ரீதேவியும், பூதேவியும் கொண்ட விஷ்ணுவும் சரி, ஞானாம்பிகையான சரஸ்வதியைக் கொண்ட பிரம்மாவும் சரி, இருவருமே தம்தம் அகந்தையின் எழுச்சியினாலேயே வாதத்தைத் தொடங்கினர்.

விஷ்ணுவோ பாதியிலேயே தன் தவற்றை உணர்ந்து சரணடைகிறார். ஆனால் பிரும்மா தனது அறிவின் அகந்தையால் வீழ்ச்சி அடைந்தார். மனம்-புத்தி-அகங்காரம் அளவிலேயே தான் யார் என்று தன் உண்மை நிலையைத் தேடுபவருக்கும் நேரலாம் என்பதைத்தான் – பிரம்மாவின் வீழ்ச்சி குறிப்பாக உணர்த்துகிறது.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply