திருப்புகழ் கதைகள்: விடாது நடநாளும் பிடாரியுடன் ஆடும் வியாகரண ஈசன்!

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் பகுதி – 282
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

கடாவின் இடை – சுவாமி மலை

            இத்திருப்புகழில் அருணகிரியார் விடாது நடநாளும் பிடாரியுடன் ஆடும் வியாகரண ஈசன் என்று பாடுகிறார். சிவபெருமான் காளியுடன் நடனம் புரிந்ததை இங்கே கூறுகின்றார். காளி ஒரு காலத்தில் உலகைநடுக்கிய போது திருவாலங்காட்டில் இறைவர் அவளுடன் சண்ட தாண்டவம் ஆடி அவளை அடக்கியருளினார்.

            அம்பிகையின் சகஸ்ரநாமங்களில் பட்டாரிகா என்று ஒரு நாமம் வரும். இது படாரிகா என மருவி பிடாரி என மருவியது. தமிழ் சாசனங்களில் படாரி மான்யம் என இருக்கிறது. பிடாரி என்றதும் சில பழமொழிகள் நம் நினைவுக்கு வரும்.

  • ஊருக்கொரு பிடாரியும் ஏரிக்கொரு ஐயனாரும் வேண்டும்.
  • ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியதாம்.
  • ஒரு கூடை செங்கல்லும் பிடாரி.

என்பன அத்தகைய சில பழமொழிகள். இந்தப் பழமொழிகளிலிருந்து ஒவ்வொரு ஊரிலும் பிடாரி அம்மனுக்குக் கோயில் இருந்ததும் மக்கள் வழிபாடு செய்ததும் நமக்குப் புலப்படும். இன்று தென் மாவட்டங்களில் பிடாரி அம்மன் கோயில்கள் சில காணப்படுகின்றன. பிடாரி அம்மனைப் பிடாதி, முப்பிடாதி என்ற பெயரில் தென் மாவட்டங்களில் வழிபடுகின்றனர். பிடாரி பற்றி காப்பியங்களில் சில தகவல்கள் கிடைக்கின்றன. நாட்டுப்புறக் கதைப்பாடல்களில் அவளைக் காளி என்ற பெயரில் குறிப்பிடுகிறார்கள்.

            பிடாரி என்பவள் நாகர் குலத்தின் அல்லது தொல் திராவிடர் குலத்தின் தெய்வம் எனக் கருதப்படுகிறாள். ஆதியில் தென்னிந்தியா முழுக்க வாழ்ந்த தொல் தமிழர் நாகத்தை தமது குல முதுவராகக் கருதி வழிபட்டதால் அவர்கள் தம்மை நாகர் இனத்தவர் என்று கருதினர். ஆண்கள் பிடாரன் என்றும் பெண்கள் பிடாரி என்றும் தம்மை அழைத்துக் கொண்டனர்.

            நாகத்தைப் பிடிப்பவன் அல்லது நாகத்திடம் இணங்கிப் பழகுபவன் இன்றும் பாம்புப் பிடாரன் எனப்படுகிறான். பெண்கள் கொடிய நஞ்சுள்ள நாகத்தைக் கண்டும் அஞ்சாத நெஞ்சம் கொண்டவர்கள் என்பதால் பிற்காலத்தில் யாருக்கும் அஞ்சாத பெண்களை ‘அடங்காப் பிடாரி’ என்றனர். பாம்புக்கே அஞ்சாதவள் மனிதனுக்கு அஞ்சுவாளா? அதனால் அடங்காத பெண்ணை கட்டியவனை ‘பிடாரியை பெண்டு வைத்ததுக் கொண்டது போல’ என்று சுட்டிக் காட்டினர். இப் பழமொழியும் பிடாரி என்பவள் யாருக்கும் அஞ்சாத நெஞ்சுரம் கொண்டவள் என்ற பொருளையே தருகிறது.

            நாகர் வழிபாடு இன்றும் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது, தமிழ்நாட்டில் எல்லா கோயில்களிலும் நாக வழிபாடு ஏதேனும் ஒரு வடிவில் இருக்கிறது. சிவன் திருமால் ஆகியவர்களோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.  மலையாளத்தில் ஆந்திராவில் கர்நாடகத்தில் என அனைத்து மாநிலங்களிலும் கிழக்காசிய தீவுகளிலும், ஆப்பிரிக்காவிலும் நாகர் வழிபடு தெய்வமாக உள்ளது. பிடாரி அம்மனின் பெயர்க் காரணம் பற்றி அறிய முற்படும் போது அச்சொல்லை பீடாஹாரி எனப் பிரித்து தீமைகளை அழிப்பவள் என்று பொருள் சொல்கின்றனர். பேச்சியம்மன் கூட  பேச்சுக்குரிய அம்மன் சரஸ்வதி என்கிறார்கள்.

            தமிழில் காப்பியங்கள் இயற்றப்பட்ட போது தமிழ் நாட்டில் ஆசிவகம், சமணம், பவுத்தம் ஆகிய சமயங்கள் இருந்தன.  சிலப்பதிகாரத்திலும் நீலகேசியிலும் பிடாரி பற்றிய குறிப்புகளை காண்கிறோம். சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம் எனப்படும். அது மன்னர்கள் அல்லது கடவுளர் பற்றியதன்று. பாண்டியன் அவைக்கு நீதி கேட்க வந்து வாயிலில் நின்ற கண்ணகியைப் பற்றி மன்னனிடம் தகவல் தெரிவித்த வாயில் காப்பாளன் அவளைப் பிடாரி போலத் தோன்றுகிறாள் என்கிறான்.

            நீலகேசியில் சுடுகாட்டுக்குள் இருக்கும் பிடாரி கோயிலில் ஒருவன் ஆடு வெட்டிப் பலி கொடுக்க வரும் போது முனி சந்திரன் என்ற துறவி அதனைத் தடுத்து நிறுத்துகிறார். உயிர்க் கொலை கூடாது என்று போதிக்கிறார். களிமண்ணால் ஆட்டுக்குட்டி செய்து அதனை வெட்டுமாறு குறிக்கிறார். அவனும் அவ்வாறே செய்கிறான்,.  பிடாரி என்ற தெய்வத்துக்குத் தனிக் கோயில் இருந்ததை நீலகேசி தெரிவிக்கிறது. அங்கு குழந்தை வரம் வேண்டி உயிர்ப் பலி கொடுக்கும் பழக்கம் இருந்ததையும் அறிகிறோம். நீலகேசி என்ற காப்பியம் தமிழில் முதன் முதலில் தோன்றிய நூல் அன்று. அந்நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூல். அந்நூலிலும் பிடாரி வழிபாடு காணப்படுகிறது.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply