திருப்புகழ் கதைகள்: கடம்ப மலர்!

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் – பகுதி 283
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

கடி மாமலர்க்குள் – சுவாமி மலை

            அருணகிரிநாதர் அருளிசெய்துள்ள இருநூற்றி ஒன்பதாவது திருப்புகழான “கடி மாமலர்க்குள்” எனத் தொடங்கும் திருப்புகழ் சுவாமிமலை தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “சுவாமிநாதா, உடலை விட்டு உயிர் பிரியும் முன், அடியேன் பாடலுக்கு இரங்கி என் முன் வந்து அருளவேண்டும்” என வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

கடிமா மலர்க்கு ளின்ப முளவேரி கக்கு நண்பு

     தருமா கடப்ப மைந்த …… தொடைமாலை

கனமேரு வொத்தி டும்ப னிருமாபு யத்த ணிந்த

     கருணா கரப்ர சண்ட …… கதிர்வேலா

வடிவார் குறத்தி தன்பொ னடிமீது நித்த முந்தண்

     முடியான துற்று கந்து …… பணிவோனே

வளவாய்மை சொற்ப்ர பந்த முளகீர னுக்கு கந்து

     மலர்வாயி லக்க ணங்க …… ளியல்போதி

அடிமோனை சொற்கி ணங்க வுலகாமு வப்ப என்று

     னருளால ளிக்கு கந்த …… பெரியோனே

அடியேனு ரைத்த புன்சொ லதுமீது நித்த முந்த

     ணருளே தழைத்து கந்து …… வரவேணும்

செடிநேரு டற்கு டம்பை தனின்மேவி யுற்றி டிந்த

     படிதான லக்க ணிங்க …… ணுறலாமோ

திறமாத வர்க்க னிந்து னிருபாத பத்ம முய்ந்த

     திருவேர கத்த மர்ந்த …… பெருமாளே.

            இத்திருப்புகழின் பொருளாவது – வாசனை தங்கியதும் பெருமை பொருந்தியதும் மலர்களுக்குள் இன்பத்தைத் தருவதும் தேன் துளிப்பதும் அணிவிப்பதனால் தேவரீரது நட்பைத் தரவல்லதுமாகிய பெரிய கடப்ப மலர்களைத் தொடுத்துச் செய்த திருமாலையை, பொன்மேருமலை போன்ற பன்னிரு புயாசலங்களிலும் தரித்துக் கொண்டுள்ள கருணைக்கு உறைவிடமானவரே; மிக்க வேகத்தை உடையதும் ஞானப்ரகாசத்தை வீசுவதும் ஆகிய வேலாயுதத்தை உடையவரே;

            அழகு நிரம்பிய வள்ளியம்மையாருடைய பொன்னடிக் கமலங் களின் மீது, குளிர்ந்த மணிமகுடமானது பொருந்த மகிழ்ச்சியுடன் நாளும் பணிபவரே; செம்பாகமான சொல்லமைப்பு மிக்க நூல்களைப் பாடும் திறமுடைய நக்கீரதேவருக்கு, தமிழிலக்கணங்களின் இயல்புகளை செங் கனிவாய் மலர்ந்து ஓதுவித்து, அடி மோனை சொல் என்ற யாப்புக்கு இணங்க “உலகம் உவப்ப” என்று அடியெடுத்துத் தந்து, திருமுருகாற்றுப் படையெனும் சீரிய நூலைப் பாடச் செய்த கந்தப் பெருமானே; பெரியவரே;

            இந்திரியங்களை வெல்லவல்ல மாதவர்கள் மனங்கசிந்து உருகி வழிபட்டு உமது இரு கமலப் பாதங்களில் உய்வுபெற்ற சுவாமிமலை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே; பாவத்திற்கு உறைவிடமாகிய பறவை முட்டையை ஒத்த உடம்பில், பொருந்தி இருந்து முடிவில் அப்பறவை முட்டையுடைந்தாற்போல், உடலைவிட்டு உயிர் நீங்குவதாலாகிய துன்பத்தை இங்கு அடியேன் அடையலாமோ? அங்ஙனம் அடையாத வண்ணம் அடியேன் பாடிய புன்சொற்களையுடைய பாடலின் மீதும் தேவரீருடைய தண்ணருள் மனங்கமழச் செய்து மகிழ்ச்சியுடன் நாளும் வந்து அருள்புரிவீர் – என்பதாகும்.

            இத்திருப்புகழில் மா கடப்பு அமைந்த தொடை மாலை என்ற வரியில் பெரிய கடப்ப மலர்களாகக் கொண்டு புனைந்த, தொடுக்கப்பெற்ற திருமாலைகளைப் பற்றி அருணகிரியார் குறிப்பிடுகிறார். கடம்பு என்பது தென் ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பசுமை மாறா வெப்பமண்டலத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இது அடர்த்தியான கோள வடிவ கொத்துகளான, நறுமணமுள்ள, செம்மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்டுள்ளது. பூக்கள் வாசனைத் திரவியங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மரம் ஒரு அலங்கார செடியாகவும், கட்டடத் தேவைகளுக்கான மரம் மற்றும் காகித தயாரிப்பிற்காகவும் வளர்க்கப்படுகிறது.

            கடம்ப மரம் முருகனுக்கும், திருமாலுக்கும் உரியது எனச் சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன. கொத்தாக உருண்டு பூக்கும் இதன் மலரின் நிறம் வெள்ளை. நன்னன் என்னும் அரசனின் காவல்மரம் கடம்பு. நீரோட்டமுள்ள கரைகளில் இது செழித்து வளரும். சாமியாடும் வேலன் மட்டும் இதனை அணிந்துகொள்வான். இதன் இலைகளை மாலையாகக் கட்டி முருகனுக்கு அணிவிப்பர். இம்மரத்தின் இலைகளை கம்பளிப் பூச்சி, பட்டாம்பூச்சி, மற்றும் வரியன் பூச்சிகளும் உணவாக உட்கொள்ளுகின்றன.

            கடப்ப மலரைப் பற்றிய மேலும் சில செய்திகளை நாளை காணலாம்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply