திருப்புகழ் கதைகள் : அஷ்டாங்க யோகம்!

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் பகுதி – 296
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

கறைபடும் உடம்பு – சுவாமி மலை
அட்டாங்க யோகம்

     யோகம் செய்வது பற்றி இப்போது பலர் பேசுகின்றனர். “நான் யோகா வகுப்பிற்குச் செல்கிறேன்” என்ற வாக்கியத்தைப் பலர் சொல்கிறார்கள். அண்மையில் கத்தாரில் 114 நாடுகளைச் சேர்ந்த பலர் ஒரு கூட்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டு கின்னஸ் சாதனை படைத்தனர். இந்த ஆண்டு பத்ம விருது, பாபா சிவானந்த் என்ற 126 வயதுடைய வாராணசியைச் சேர்ந்த பெரியவருக்கு வழங்கப்பட்டது. அவர் விருது பெறும் முன்னர் “நந்தி முத்திரை”யில் பிரதமரையும் ஜானாதிபதியையும் வணங்கினார். ஆனால் நம்முடைய பழம்பெரும் நூல்கள் சொல்வதைப் பார்த்தால் யோகம் செய்வது அப்படி ஒன்றும் எளிதானாதல்ல எனத் தோன்றுகிறது. அதன் முதல் இரண்டு படிநிலைகளே கடினமானது.

     அந்த முதல் இரண்டு படிநிலைகள் இயமம் மற்றும் நியமம் ஆகும். பதஞ்சலி யோகசூத்திரம் ஐந்து இயமங்களை நவில்கின்றது: கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, வெஃகாமை புலன் அடக்கம் என்பன அவையாம். ஆனால் திருமந்திரமோ பத்தினை நவில்கின்றது: கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, நல்ல குணங்கள், புலன் அடக்கம், நடுநிலைமை (விருப்பு வெறுப்புக்கள் இன்மை), பகுத்துண்டல், மாசின்மை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை என்னும் பத்தனையும் முற்ற உடையவனே இயம யோகம் கைவரப் பெற்றவனாவான் ஆகும்.

கொல்லான், பொய் கூறான், களவிலான், எள்குணன்,

நல்லான், அடக்க முடையான், நடுச்செய்ய

வல்லான், பகுத்துண்பான், மாசிலான், கட்காமம்

இல்லான் இயமத் திடையில்நின் றானே.

[எள்குணன் = எள்கு உணன்; எள்கு = இகழ், புறக்கணி; எள்கும், அதாவது, தான் பெரிதும் ஆவல்கொள்ளாது எள்ளும் அல்லது இகழும் உணவினை உடையோன், எளிய உணவினன்]

எனவே யோகம் செய்யத் தொடங்கும் முன்னர் இத்தனை இயமங்களைக் கடைபிடிக்க வேண்டும்.

     அடுத்து நியமம் என்பது தவம், மனத்தூய்மை, வாய்மை, தத்துவ நூலோர்தல், பெற்றது கொண்டு மகிழ்தல், தெய்வம் வழிபடல் ஆகியவையாகும். இவையும் இன்றைய வாழ்க்கை முறையில் மிக மிகக் கடினமாகத் தோன்றுகிறது.

     இதன் பின்னர் உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல் ஆசனம் எனப்படும். பின்னர் உயிர்க்கும் உயிர் மூச்சைக் கட்டுக்குள் கொண்டுவருவது பிராணாயாமம் எனப்படும். இதுவும் இரண்டு வகைப்படும். மந்திரமில்லாது நிறுத்தல் ஒருவகை. பிரணவம் காயத்திரி முதலான மந்திரத்தைச் சொல்லிக்கொண்டு நிறுத்தல். அடுத்து வரும் பிராத்தியாகாரம் என்பது மனத்தை புலன்கள் வாயிலாக விஷயாதிகளில் சென்று பற்றி உழலாவண்ணம் அடக்குதல்.

     தாரணை என்பது, உந்தி, இதயம், உச்சி என்னும் மூன்றிடத்தும் உள்ளத்தை நிலைநிறுத்தல். தியானம் என்பது, கண்களைத் திறந்தும் திறவாமலும் வைத்துக்கொண்டு சிவனை உள்நோக்குதல். சமாதி என்பது விந்துநாதம் காணல். பலவித யோக முறைகளில் ஹடயோகமும் ஒன்று.

     இயமம் என்பது வாழ்வியல் சார்ந்த நல்லொழுக்கத்தைக் குறிக்கும். நாள்தோறும் இறைவனை வணங்குதல், உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல், உண்மையைக் (சத்தியம்) கடைபிடித்தல், கொல்லாமை, புலன் அடக்கம், ஆசை இல்லாமை ஆகியவற்றைக் கடைபிடித்து வாழ்தலே இயமம் எனும் முதற்படி நிலையாகும்.

     சகல மக்களும் அநுசரிக்க வேண்டிய சாதாரண அறங்களில் முதலாவது அன்பு அதாவது பிற உயிர்களை துன்புறுத்தாமல் இருத்தல். அடுத்தது உண்மையையே பேசுதல் அல்லது சத்தியம் பேசுதல்.  சத்தியம் என்றால் வாக்கும் மனசும் ஒன்றாக இருப்பது. மனதில் ஒன்றும் வாக்கில் வேறொன்றுமாக இருந்தால் அதுவே பொய்மை எனப்படும் அசத்தியம் என்று பெரியவர்கள் லட்சணம் சொல்லியிருக்கிறார்கள். மனத்தில் உள்ளதை வெளியிட்டுச் சொல்வதற்கென்றே இறைவன் மனிதனுக்குப் பேசும் சக்தியைத் தந்திருக்கிறார்.

     முழுமையான, பிறருக்குத் துன்பம் தராத வாழ்க்கைக்கு, அதாவது அகிம்சைக்கு நமது நீதி இலக்கியங்களில் சில விலக்குகள் இருக்கின்றன. அறத்தினைக் காப்பதற்காக போர் புரியும் போதும், வேறு சில சமயங்களின் போதும் அகிம்சைக்கு விலக்குத் தரப்பட்டிருக்கிறது. ஆனால் சத்தியத்துக்கு இவ்விதமாக விலக்கே இருக்க முடியாது. ஆனால் சத்தியத்துக்கும் வேறொரு விதத்தில் விலக்கு இருக்கிறது.

அது என்ன? நாளை காணலாம்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply