திருப்புகழ் கதைகள்: தம்பனம் மோகனம் தயவாம் வசீகரம்!

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் 299
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

கறைபடும் உடம்பு – சுவாமி மலை
தம்பனம் மோகனம் தயவாம் வசீகரம்

     இடைக்காலத்தில் வாழ்ந்த சில சித்த வைத்தியர்கள். சில மருந்துகளின் மூலம் அட்ட் மா சித்திகளை அடையலாம் எனக் கூறினார். “உடம்பின் சூட்சுமங்களை அறிந்துகொண்டு, தவத்தாலும் தகுந்த மூலிகைகளைக் கொண்டும் அவர்கள் அட்டமா சித்திகளை அடைந்தார்கள்” எனச் சில நூல்கள் குறிப்பிடுகின்றன. சித்தர்களும், சித்தர்களுக்குப் பின்னர் வந்த சிலரும் அரிய மூலிகைகளைக் கொண்டு சில சித்துவேலைகளைச் செய்தார்கள். அவை `அஷ்ட கர்மங்கள்’ எனப்படும், எட்டுவித மந்திரச் செயல்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தச் சித்துகள் அத்தனையும் மூலிகைகளைக் கொண்டே செய்யப்பட்டன.

     ஒவ்வொரு சித்துக்கும் எட்டுவிதமான மூலிகைகள் என்ற கணக்கில், மொத்தம் 64 மூலிகைகளும் சில பாஷாணங்களும் பயன்பட்டன என்றும் சொல்கிறார்கள். மொத்தம் எட்டு சித்துகள்.

  • உச்சாடனம் – மூலிகைகளால் மந்திரித்து வியாதிகள், பேய், பிசாசுகள், மிருகங்கள், எதிரிகள், உடலில் ஏறிய விஷங்களை விரட்டும் செயலே உச்சாடனம். “நாதர் முடிமேல் இருக்கும் நல்ல பாம்பே” நினைவுக்கு வருகிறதா?
  • ஆகர்ஷணம் – துர்தேவதைகள், தேவதைகள், இறந்து போன ஆன்மாக்கள் போன்றவற்றை அழைத்துப் பேசுவது.
  • பேதனம் – ஒன்றை வேறொன்றாக மாற்றிவிடுவது. மனிதர்களை, மிருகங்களைப் பேதலிக்கச் செய்வது. “மாயா பஜார்” திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளை மீண்டும் ஒரு முறை பாருங்கள்.
  • மோகனம் – மயங்கச்செய்வது. விராட பர்வத்தின் இறுதியில் அர்ச்சுனன் விராட குமாரன் உத்தரனுடன் பீஷ்ம, துரோண, துரியோதனாதிகளுடன் யுத்தம் செய்யும்போது “சம்மோகனாஸ்திரம்” விடுவான். அப்போது அனைவரும் பயங்கி விழுவர். அக்காட்சி ஞாபகம் வருகிறதா?
  • வசியம் – மனிதர்களை, விலங்குகளை வசியம் செய்வது.
  • வித்துவேஷணம் – விருப்பமில்லாமல் செய்வது அல்லது வெறுப்பை உண்டாக்குவது.
  • மாரணம் – எதிரிகளை மிரட்டி, கொல்வது.
  • தம்பனம் – செயல்களைக் கட்டுவது. (உ-ம். வாயைக்கட்டுவது).

     தேவராய ஸ்வாமிகள் இயற்றிய ஆறு கந்தர் சஷ்டி கவசங்களுல் மூன்றாவது கவசமான பழனி தலத்து கந்தர் சஷ்டி கவசத்தி இந்த சக்திகள் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்தப் பாடல் பகுதி இதோ –

தம்பனம் மோகனம் தயவாம் வசீகரம்

இம்பமா கருடணம் மேவ முச்சாடனம்    

வம்பதாம் பேதனம் வலிதரும் ஆரணம்    

உம்பர்கள் ஏத்தும் உயர்வித் வேடணம்

தந்திர மந்திரம் தருமணி அட்சரம்

என இந்த அட்ட மா சித்திகள் பற்றி இப்பாடல் பகுதி குறிப்பிடுகிறது. மேலும் தேவராய ஸ்வாமிகள் திருச்செந்தூர் கந்தச் சஷ்டி கவசத்தில் இச்சக்திகளை எளிதில் பெற ஒரு வழியைச் சொல்லுகிறார். அந்த பாடல் பகுதி இதோ –

கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்

காலையில் மாலையில் கருத்துடன் நாளும்

ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவது வாகிக்

கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்

சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்

ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு

ஓதியே ஜெபித்து உகந்துநீ றணிய

அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்

திசைமன்ன ரெண்மர் செயலாது அருளுவர்

மாற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்

நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்

எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வார்

கந்தர்கை வேலாம் கவசத் தடியை

வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்

விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்

பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்

நல்லோர் நினைவில் நடனம் புரியும்.

என்று கந்தர் சஷ்டி கவச பாராயணம் பற்றி தேவராய ஸ்வாமிகள் குறிப்பிடுகிறார்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply