திருப்புகழ் கதைகள்: நவராத்திரி..!

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் பகுதி 302
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

குமரகுருபர முருக – சுவாமி மலை
நவராத்திரி

     காளி ஏன் உதிரம் உண்டாள் என்பதற்கும் நவராத்திரிப் பண்டிகைக்கும் தொடர்பு உள்ளது. ஒரு வருடத்தில் நான்கு முறை நவராத்திரி வருவதாகச் சொல்வார்கள். சித்திரை மாதத்தில் வருவது வஸந்த நவராத்திரி. ஆடி மாதத்தில் வருவது ஆஷாட நவராத்திரி. புரட்டாசியில் வருவது சாரதா நவராத்திரி. மாசியில் வருவது சியாமளா நவராத்திரி. இவற்றில் புரட்டாசி மாதத்தில் வருகின்ற, மஹாளய அமாவாசைக்கு மறுநாள் முதல் தொடங்கும் சாரதா நவராத்திரியே நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி விரதம் என்பது வியாச மகரிஷி, பரீட்சித்து மகாராஜாவின் குமாரன் ஜனமேஜயன் என்னும் மன்னனுக்கு உபதேசித்ததன் மூலமாக இந்த உலகிற்குத் தெரிய வந்ததாகக் கூறுவார்கள்.

     வட இந்தியாவில் துர்கா பூஜா என்றும், தென்னாட்டில் நவராத்திரி என்றும், மைசூர் உள்ளிட்ட இதர பகுதிகளில் தசரா என்றும் பெரும் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஒன்பது நாட்களில் அம்பிகையின் அம்சமான ஒன்பது தேவியர்கள் கீழ்காணுமாறு வரிசைப்படுத்தப்படுகிறார்கள்.

  • முதல்நாள் – மாஹேஸ்வரி,
  • இரண்டாம் நாள் – கௌமாரி,
  • மூன்றாம் நாள் – வாராஹி,
  • நான்காம் நாள் – மஹாலக்ஷ்மி,
  • ஐந்தாம் நாள் – வைஷ்ணவி,
  • ஆறாம் நாள் – இந்திராணி,
  • ஏழாம் நாள் – மஹாசரஸ்வதி,
  • எட்டாம் நாள் – நாரசிம்ஹி.
  • ஒன்பதாம் நாள் – சாமுண்டி.

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேவியர் முதன்மை பெறுவதாகவும், மற்ற தேவியர் அவர்க்கு துணைசெய்யும் பரிவாரங்களாக இருப்பதாகவும் கூறுவர். ஒவ்வொருவரையும் தனித்தனியே வழிபட இயலாதவர்கள் எட்டாம் நாளான துர்காஷ்டமி நாளில் ஒன்பது தேவியர்க்கும் சேர்த்து விசேஷ பூஜை செய்வது நன்மையைத் தரும். பூஜா முறையைப் பற்றித் தெரியாதவர்கள் ஆயுதபூஜை நாளன்று துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய மூவரையும் பூஜை செய்து வணங்கினாலே எல்லா தேவர்களையும் வழிபட்டதற்கான பலன் வந்து சேரும் என்பது ஆன்மிகப் பெரியோர்களின் வாக்கு. அதனாலேயே ஜாதி, மத பேதமின்றி நாம் அனைவரும் ஆயுதபூஜையை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறோம்.

     நவராத்திரிக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. இராமநவமி, விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி, மஹாசிவராத்திரி ஆகிய விசேஷ நாட்களில் அந்தந்த நாளுக்குரிய தெய்வத்தை மட்டும் பூஜை செய்கிறோம். ஆனால் இந்த நவராத்திரி நாட்களில் மட்டும் எல்லா கடவுளர்களின் திருவுருவங்களையும் பதுமைகளாக கொலுப்படிகளில் வைத்து பூஜை செய்கிறோம்.

     மஹிஷாசுரனை அழிக்க வேண்டி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள், முப்பெருந்தேவியர், விநாயகர், சுப்ரமணியர், நவகிரஹங்கள், ஏனைய தேவர்கள் மற்றும் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகள் என அனைவரின் அம்சங்களிலிருந்தும் தோன்றிய ஒளிச்சக்தியானது ஒன்றிணைந்து அகில உலகத்தையும் காக்கும் தாயாக அம்பிகை உருவானாள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக புல், பூண்டு தாவரங்கள், நீர்வாழ்வன, ஊர்வன, பறப்பன, நிலவாழ் மிருகங்கள், மனிதர்கள், தேவர்கள், கடவுளர்கள் என வரிசையாக படிக்கட்டுகளில் பதுமைகளை வைத்து மத்தியில் நடுநாயகமாய் அம்பிகையின் பொம்மையையும் வைத்து வழிபடுகிறோம்.

     ஆக ஒரு வருடத்தில் வருகின்ற மற்ற விசேஷ நாட்களில் அந்தந்த தேவதைகளைத் தனித்தனியாக பூஜிக்க இயலாதவர்கள் கூட இந்த நவராத்திரி நாட்களில் அம்பிகையை வழிபடுவதன் மூலம் எல்லா கடவுள்களையும் வழிபட்ட பலனை அடைய முடியும். பண்டாசுரன், மது-கைடபர், மஹிஷாசுரன், தூம்ரலோசனன், சண்டன், முண்டன், ரக்தபீஜன், சும்பன், நிசும்பன் ஆகிய அசுரர்களை அழித்தவளும், ஒன்பது கோடி உருவங்களைத் தாங்கி தெய்வீகத் தன்மை பெற்றவளும், உலகத்தின் தாயாகவும் விளங்கும் சண்டி நம்மைக் காப்பாளாக’ என பிரார்த்தனை செய்வோம்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply