திருப்புகழ் கதைகள்: தெருவினில் நடவா..!

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் பகுதி 311
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

தெருவினில் நடவா – சுவாமி மலை

     அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றி இருபத்தி ஒன்றாவது திருப்புகழான “தெருவினில் நடவா” எனத் தொடங்கும் திருப்புகழ் சுவாமிமலை தலத்துப் பாடலாகும். இது ஒரு அகத்துறைப் பாடலாகும். அருணகிரியார் தன்னை நாயகியாகவும் முருகனை நாயகனாகவும் பாவித்து எழுதிய பாடல். இத்திருப்புகழில் அருணகிரியார் “சுவாமிநாதா! என்னை மணந்து இன்பம் அருளவேண்டும்” என வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

தெருவினில் நடவா மடவார்

     திரண்டொ றுக்கும் …… வசையாலே

தினகர னெனவே லையிலே

     சிவந்து திக்கும் …… மதியாலே

பொருசிலை வளையா இளையா

     மதன்தொ டுக்குங் …… கணையாலே

புளகித முலையா ளலையா

     மனஞ்ச லித்தும் …… விடலாமோ

ஒருமலை யிருகூ றெழவே

     யுரம்பு குத்தும் …… வடிவேலா

ஒளிவளர் திருவே ரகமே

     யுகந்து நிற்கும் …… முருகோனே

அருமறை தமிழ்நூ லடைவே

     தெரிந்து ரைக்கும் …… புலவோனே

அரியரி பிரமா தியர்கால்

     விலங்க விழ்க்கும் …… பெருமாளே.

     இத்திருப்புகழின் பொருளாவது – மாயையில் நிகரற்ற கிரவுஞ்ச மலையும், தாரகனுடைய மார்பும் பிளக்குமாறு விடுத்தருளிய வேலாயுதத்தை உடையவரே; ஒளியினால் விளங்கும் திரு ஏரகமென்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள முருகக் கடவுளே; வேதங்களையும் தமிழ் நூல்களையும் ஆன்மாக்களின் பக்குவ நிலைக்குத் தக்கவாறு உரைக்கும் பரிபூரண ஞான சிகாமணியே; இந்திரன் மாலயனாதி வானவர்களுடைய காலில், சூரபன்மன் பூட்டிய விலங்கை உடைத்து, அவர்களைச் சிறையினின்றும் நீக்கி ஆட்கொண்ட பெருமையின் மிக்கவரே;

     தெருவினில் உலாவும் பெண்கள் கூடி, கொடிய வசைமொழிகளைச் சொல்லித் துன்புறுத்துவதனாலும்; சூரியனைப் போல் வெம்மையுடன் கடலில் உதிக்கின்ற சந்திரனாலும், போருக்கு வில்லை வளைத்து இளைக்காதவனாகிய மன்மதன் விடுகின்ற மலர்க்கணையாலும், விரக வேதனையுற்று விம்முகின்ற தனங்களை உடையவளாகிய யான் உம்மைத் தழுவி மகிழும் பேறு இன்றி அலைந்து மனஞ்சலிக்க விட்டுவிடுவது முறையாகாது – என்பதாகும்.

     இத்திருப்புகழலில் தெருவினில் நடவா மடவார் எனச் சொல்லும்போது தெருவினில் நாணமின்றி நடக்கும் பெண்களான பொது மகளிரை அருணகிரியார் குறிப்பிடுகிறார். அவர்கள் இளைஞர்களைத் தங்கள் கூந்தலாகிய காட்டில், கண் என்ற வலையை வீசிப் பிடிக்கும் பொருட்டு தெருவினில் எந்நேரமும் உலாவிக் கொண்டிருப்பர் எனவும் அவர்கள் கற்புடைய மகளிரை எள்ளி நகையாடுவர் எனவும் அவர் சொல்கிறார். இத்திருப்புகழின் முதல் நான்கு அடிகளும் நாயகி நாயக பாவமாக அமைந்துள்ளன. மாதர்கள் திரண்டு வந்து “நீ முருகன் மீது காதல் கொண்டு பெற்ற பயன் யாது? இது வரையிலும் ஒரு பயனும் பெற்றாயில்லையே” என்று வசை கூறுவதாக அமைந்துள்ளது.

     மேலும் தினகரன் என- -மதியாலே எனச் சொல்லும்போது அகத்துறைப் பாடல்களில் வருவது போல காதல் நோய் உற்றோருக்குப் பூரண சந்திரன் வெப்பமாகத் துன்புறுத்துவன் எனக் குறிப்பிடுகிறார். கம்பராமாயணத்தில் இராமனைக் கன்னிமாடத்தில் நின்று கண்டு விரகமுற்ற சீதாதேவி, சந்திரனைக் கண்டு வருந்துவதாகக் கூறும் கம்பர் பாடலை நாம் இங்கே நினைவுகூறலாம்.

கொடியை அல்லைநீ, யாரையும் கொல்கிலாய்,

மடுவில் இன் அமுதத்தொடும் வந்தனை,

பிடியின் மெல்நடைப் பெண்ணாடு, என்றால் எனைச்

சுடுதியோ கடல் தோன்றிய திங்களே.         

     பொருசிலை- -கணையாலே என்று பாடுகையில் மன்மதன் கரும்பு வில்லை வளைத்து கரும்பு நாணேற்றி மலர்க்கணையைத் தொடுத்து எத்தகைய திடமுள்ள தவத்தினரையும் மயக்க வல்லவன் எனப்பாடுகிறார். ஒளிவளர் திருவேரகம் என்ற சொற்களில் திருவேரகத்தில் அகத்திருளை நீக்கவல்ல ஞான ஒளி வீசுகின்றது எனக் கூறுகிறார்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply