திருப்புகழ் கதைகள் : சார்தாம் யாத்ரா!

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் 329
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

நகைத்து உருக்கி – திருக் கயிலை
கங்கை

கங்கையாறு இமயமலையில் கங்கோத்ரி என்னும் இடத்தில் உற்பத்தியாகிறது. ஆனால் இங்கே இதன் பெயர் பாகீரதி. பகீரதன் கொண்டு வந்ததால் பாகீரதி என்ற பெயர். பாகீரதி ஹரித்வார் வந்தடையும் முன்னர் அலக்நந்தா நதியுடன் இணைகிறது.

அதற்கு முன்னர் அலக்நந்தாவுடன் தௌலிகங்கா, நந்தாகினி, பிந்தர், மந்தாகினி ஆகிய நதிகள் கலக்கின்றன. தௌலிகங்கா அலக்நந்தாவுடன் கலக்கும் இடம் விஷ்ணுப்ரயாக் எனவும் நந்தாகினி கலக்கும் இடம் நந்தப்ரயாக் எனவும் பிந்தர் கலக்கும் இடம் கர்ணப்ரயாக் எனவும் மந்தாகினி கலக்கும் இடம் ருத்ரப்ரயாக் எனவும் அழக்கப்படுகின்றன.

இறுதியாக அலக்நந்தா பாகீரதியுடன் கலக்கும் இடம் தேவப்ரயாக் ஆகும். தேவப்ரயாகிலிருந்து இந்நதி கங்கை என்ற பெயரைப் பெறுகிறது. இந்துக்களின் புகழ்பெற்ற புனித தலங்கள் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை என்பதை நாம் அறிவோம்.

கங்கை நதியோடு தொடர்புடைய இவை, இமயமலை அடிவாரத்தில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளன. இந்த நான்கு தலங்களை உள்ளடக்கிய புனித யாத்திரை சார்தாம் யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.

இந்த யாத்திரையை ஹரித்வாரிலிருந்தோ அல்லது ரிஷிகேஷிலிருந்தோ அல்லது டேராடூனிலிருந்தோ தொடங்கவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இந்த சார்தாம் யாத்திரை காலங்களில் இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்தப் புனித தலங்களுக்கும் வந்து வழிபடுகின்றனர்.

chardham yatra - Dhinasari Tamil

யாத்ரீகர்கள் முதலில் யமுனோத்ரியில் வழிபாடு நடத்திவிட்டு, அதன் பின்னர் கங்கோத்ரி, கேதார்நாத் தலங்களில் தரிசனம் செய்துவிட்டு, இறுதியாக பத்ரிநாத் வந்து விஷ்ணுவை வழிபட்டு யாத்திரையை நிறைவு செய்வார்கள். 2022ஆம் ஆண்டிற்கான சார்தாம் யாத்திரை மே மூன்றாம் தேதியன்று (அக்ஷய திருதியை அன்று) தொடங்குகிறது.

இந்த யாத்திரையைத் தொடங்கி முடிக்க சுமார் 15 தினங்கள் ஆகும். நாட்டின் எந்த மூலையிலிருந்தும் ஹரித்வார் அல்லது ரிஷிகேஷ் அல்லது டேராடூன் வரவேண்டும். டேராடூனில் விமானநிலையம் உள்ளது. அங்கிருந்து பேருந்து மூலமாகவோ அல்லது ஹெலிகாப்டர் மூலமாகவோ இத்தலங்களுக்குச் சென்று வரலாம். ஹெலிகாப்டரில் செல்ல ஒரு நபருக்கு சுமார் ரூபாய் 2 இலட்சம் செலவாகும்.

யமுனோத்ரிக்கு அருகில் உள்ள கர்சாலி ஹெலிபேடிலிருந்து யமுனோத்ரி செல்ல ஐந்து கிலோமீட்டர் மலையேற வேண்டும். வெப்பநிலை 5 டிகிரி செல்கியஸிலிருந்து மைனஸ் 5 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். மலையேற மட்டக்குதிரை, பல்லாக்கு வசதிகள் உண்டு. அதற்கு சுமார் ரூபாய் 3000 ஆகும். இரவு கர்சாலியில் தங்கவேண்டும். இதேபோல மறுநாள் கங்கோத்ரி.

கங்கோத்ரிக்கு அருகில் உள்ள ஹர்சாலி ஹெலிபேடிலிருந்து 25 கிலோமீட்டர் காரில் பயணம் செய்ய வேண்டும். இரவு ஹர்சாலியில் தங்கி விட்டு அடுத்த நாள் கேதார்நாத் செல்ல வேண்டும். ஹர்சாலியில் இருந்து சிர்சி என்ற இடம் வரை ஹெலிகாப்டர் பயணம்; அதன் பின்னர் மற்றொரு ஹெலிகாப்டர் பயணம் செய்தால் கேதார்நாத் கோயிலை அடையலாம்.

சிர்சியில் இரவு தங்க வேண்டும். அடுத்தநாள் பத்ரிநாத் தரிசனம் செய்யலாம். ஹெலிகாப்டர் பயணம் இல்லாமல் சாலை வழியாகவும் பயணம் செய்யலாம். இருப்பினும் சாலைப் பயணம் சற்று அயர்ச்சியைத் தரும். eUttaranchal.com என்ற இணையதளத்தில் அனைத்து விவரங்களும் உள்ளன.

50 வயதிற்குள் இந்த சார்தாம் யாத்திரையை மேற்கொண்டால் பயணத்தை நன்கு அனுபவிக்கலாம். கங்கை தோன்றிய இடம், அங்கே உள்ள வெந்நீர் ஊற்றுகள், இயற்கைக் காட்சிகள் ஆகியவற்றைக் கண்டு களிக்கலாம். கங்கையில் நீராடுவதால் நம்முடைய பாவங்கள் போகும். இது குறித்து ஒரு கதை உண்டு.

சிவபெருமான் கங்கை நதியில் நீராடினால் மானிடர்களின் பாவங்கள் அகலும் என கங்காதேவிக்கு வரமளித்தார். இந்த வரத்தினால் பாவங்கள் நீங்குமா என்ற சந்தேகம் பார்வதி தேவிக்கு ஏற்பட்டது. அதனையறிந்த சிவபெருமான் ஒரு உபாயம் கூறினார். அதன்படி கங்கை நதிக்கரையில் வயதானவராக சிவபெருமானும் பாமரப்பெண்ணாக பார்வதியும் வந்தனர்.

கங்கையில் குளிக்கும் பொழுது வெள்ளம் வந்தது. நீச்சல் தெரிந்த அந்தப் பெண் கரையை அடைந்தாள். ஆனால் அவளது கணவர் (சிவபெருமான்) கரைக்கு வரவில்லை. “பாவம் செய்யாதவர் யராவது இருந்தால் நீரில் மாட்டிக் கொண்ட தனது கணவரை காப்பாற்ற” அப்பெண் வேண்டினாள். அனைவரும் சிலையாக நின்றனர்.

ஆனால் ஓர் இளைஞன் மட்டும் கங்கை நீரில் மூழ்கித் தன்னுடைய பாவங்களை நீக்கி, அவளின் கணவனை காப்பாற்றினான். கங்கையில் மூழ்கி அனைவரும் தங்களின் பாவங்களை நீக்கலாம் என்ற பொழுதும், அதனை முழுமையாக நம்பிய அந்த இளைஞனை போலுள்ளவர்கள் மட்டுமே கங்கையில் குளித்து தங்களின் பாவங்களை நீக்கி கொள்ள முடியும் என்பது ஓர் நம்பிக்கையாக இருக்கின்றது.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply