திருப்புகழ் கதைகள்: கோங்கிள நீரிளக – திருவேங்கடம்

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் 338
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

கோங்கிள நீரிளக – திருவேங்கடம்

வள்ளிமலை முருகன்

            தினைப்புலத்தைக் காத்துக் கொண்டிருந்த வள்ளியிடம், கிழவேடர் வேடத்தில் சென்று, தான் வேட்டையாடி துரத்தி வந்த மான், வள்ளி இருக்கும் இடத்திற்கு வந்ததாகக் கூறி, வள்ளியை முருகப்பெருமான் வம்புக்கு இழுத்தார். முருகனோ, வள்ளியைக் கண்டவுடன் காதல் கொண்டார். அவளிடம் சில வாலிபக் குறும்புகளிலும், வாய் ஜாலத்திலும் ஈடுபட, இதனால் வள்ளிக்கு கோபமும், எரிச்சலுமே ஏற்பட்டது. ஒரு கிழவன் தன்னிடம் வம்புக்கு வருவதாகக் கூறி, தந்தையையும், தமயனையும் உதவிக்கு கூவி அழைத்தாள். அவர்கள் வருவதற்குள், முருகன், வேங்கை மரமாக மாறி நின்று விட்டார். எத்தனையோ விதமான காதல் நாடகங்களை முருகன் ஆடியும் வள்ளியைக் கவர முடியவில்லை. ஆனால் தனது மாமனாரை எப்படியோ மடக்கி, திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்தார். தந்தை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் வள்ளி கிழவனை மணக்க முடியவே முடியாது என்று பிடிவாதம் பிடித்தாள்.

            முருகப்பெருமான், தனது காதல் ஈடேற, தனது அண்ணனான விநாயகரின் துணையை நாடினார். வேழமுகத்தோனும், யானை வடிவில் வந்து வள்ளியை அச்சுறுத்தி, அங்கும், இங்குமாக துரத்தி ஓட வைத்து, கடைசியில், பயத்தில், அவளாகவே ஓடிச் சென்று முருகனை அணைத்துக் கொள்ள வைத்தார். முருகனும், அவளுக்கு தனது சுந்தரவடிவான சுயவடிவினைக் காட்டியருளினார். வள்ளிக்கு அப்பொழுது முன்பு கசந்த காதல் இனிக்கத் தொடங்கியது.

            தெய்வமகள், வள்ளி, பிறந்து, வளர்ந்த மலை, எழிலார்ந்த மலையாகவும் தெய்வீக மலையாகவும் இம்மலை திருக்காட்சி அளிக்கின்றது. மலை மீது அமைந்திருக்கும், வள்ளி, தெய்வானை, சமேத ஆறுமுகசாமி திருக்கோயிலை அடைய 450 படிகளைக் கடந்தாக வேண்டும்.

            மலையடிவாரத்தில் தாழக்கோயில் அமைந்துள்ளது. 5 நிலை கொண்ட ராஜ கோபுரத்தின் உள்ளே நுழைந்ததும், வலப்புறம் விநாயகர் சந்நதி அமைந்துள்ளது. கருவறையில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி எழுந்தருளியுள்ளார். அந்தத் திருமூர்த்தியின் கோலத்தைத் தரிசிக்க நாலாயிரம் கண்களை இறைவன் படைக்க மறந்தானே என நமக்குத் தோன்றும். திருத்தணியிலிருந்து மயிலும் முருகரைத் தேடி, அவரை நாடி வள்ளி மலைக்கு வந்து விடவே, இங்கு மயில் வாகனம் உள்ளது. திருத்தணியில் மயில் வாகனம் கிடையாது.

            கருவறை அமைந்துள்ள பாறை மேல் விமானம் அமைந்துள்ளது.  கொடி மரம், பலிபீடம், மயில் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் உள்ளே அமைந்துள்ள பாறையில் 1 மீ உயரமுடைய ஆயலோட்டும் வள்ளியின் திருமேனி இடம் பெற்றுள்ளது. வள்ளியின் திருக்கரங்களில், பறவைகளை விரட்டப் பயன்படுத்தும் உண்டிவில், கவண்கல் உள்ளன. வேடர் குலத்தில் வளர்ந்ததால் அர்த்த ஜாம பூஜையில், தேனும், தினைமாவும் நைவேத்தியமாக கீழ், மேல் கோயில்களில் படைக்கப்படுகின்றன.

            பர்வதராஜன் குன்று என்ற இடத்தில் வள்ளி, முருகன் ஊடல் தீர்ந்து தன்னை வந்து மணம் புரிந்து கொள்ள வேண்டி, சிவனை வழிபட்ட, சிவசொரூபமாகிய சிவலிங்கம் உள்ளது. விநாயகர், யானை வடிவில் வந்தவர், கல்லாகி நின்ற இடம் கணேசகிரி என அழைக்கப்படுகின்றது. முருகன், வேங்கை மரமாகி நின்ற மரமே தல மரமாக உள்ளது. இருவரது ஊடலும் நீங்கிட, நம்பிராஜன், வள்ளித் திருமணத்தை, திருத்தணியில் நடத்தி வைத்துள்ளார். இத்தலத்தில், கோயில் கொண்டுள்ள இறை மேனிகளை வழிபட, வாழ்வில் பிரிவின் விளிம்பு வரைச் சென்றவர்கள் கூட ஒன்று சேர்ந்திட அருளப்படுகின்றனர். திருமண வரம் பெறவும், திருமணத் தடை நீங்கிடவும் இங்கே மனமுருக வேண்டிக் கொள்ளலாம். காதலர்கள், காதல் மெய்ப்படவும், கணவன், மனைவி பிணக்குத் தீரவும், முருகனும், வள்ளியும் வரமருளுகின்றனர்.

            இங்கு வள்ளியம்மை தவபீடம், மயிலை குருஜி சுந்தர ராம சுவாமிகளின் ஆஸ்ரமும் அமைந்துள்ளது. இங்கிருந்து சற்று தூரத்தில் உள்ள வனத்திற்குள் வள்ளி பறவைகளை விரட்டிய மண்டபம், அவர் நீராடிய வள்ளிச் சுனை, மஞ்சள் தேய்த்துக் கொண்ட மண்டபம், முருகன் நீர் அருந்திய குமரன் தீர்த்தம், கருமான் ஓடை போன்ற சுனைகளும், வெயில் படாத பாழிகளும் அமைந்துள்ளன. ஊரின் வடக்கில், திருமாலீஸ்வரர் கோயிலும் உள்ளது. வள்ளி மலையை கிருபானந்த வாரியார் சுவாமிகளும், திருப்புகழ் சுவாமிகளும் மிக அதிகமாக நேசித்தவர்கள் ஆவார்கள். திருப்புகழ் சுவாமிகள் என புகழ்ந்துரைக்கப் பெற்ற அர்த்தநாரி என்பவர், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 25.11.1870 அன்று பிறந்தவர் ஆவார். இவர் வீணைபோன்ற தம்புராவை மீட்டியபடி சந்தமிகு திருப்புகழ் என்னும் தூயதமிழ் மந்திரத்தை பாடிப்பரவக் கூடிய நிலையை ஏற்படுத்திய மகான் ஆவார்.பல தலங்களுக்கும் சென்று திருப்புகழை செவியாறக் கேட்டு மகிழ வைத்தார்.

            இவர் 12 ஆண்டுகள், வள்ளிமலையில் இருக்கும் குகைகளில் ஒன்றில், திருப்புகழைப் பாடியபடி தவமிருந்தார். இத்தனைக்கும் இவர் படிக்காதவர். முருகன் அருளால் திருப்புகழ் மந்திரத்தைப் பாடிப் பரப்பும் பேரருள் வாய்க்கப் பெற்றார். வள்ளிமலையில், ஆசிரமம் ஏற்படுத்தும் திருப்பணியில் ஈடுபட்டிருந்த இவருக்கு அன்றைய கட்டுமான செலவான ரூ200 இல்லாமல் போய்விட்டது. இது குறித்து அன்பர்கள் கவலைப்பட, ‘‘முருகன் தருவான். ஆகாயத்திலிருந்து கூடப் போடுவான்.’’ என்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார். சிறிது நேரத்திற்கு பிறகு அவர் அருகே ஆகாயத்திலிருந்து ஒரு சிறிய துணி மூட்டை விழ, அதைப் பிரித்துப் பார்க்க அதில் ரூ200 வெள்ளிப் பணங்கள் இருந்தன. அப்பொழுது சென்னையில் பிரபல டாக்டர் ஆக இருந்த ரங்காச்சாரியார், சுவாமிகளின் பெரும் பக்தர். இவரது திருவுருவச்சிலை இன்றும் சென்னை பொது மருத்துவ மனையில் அமைந்துள்ளது. அவர் கனவில் முருகன் குழந்தை வடிவில் தோன்றி, நாளை வள்ளி மலை சுவாமிக்கு ரூ.200 தேவைப்படும். அதை கொடுத்து விடு.’’ எனக் கூறிவிட்டு மறைந்தருளியுள்ளார்.

            அதன்படி டாக்டரும், தனது சொந்த தனி குட்டி விமானத்தில் பெங்களூர் புறப்பட்டவர், வள்ளி மலை மீது தாழப்பறக்க விடுமாறு கூறி அந்த துணி மூட்டையை சுவாமி அருகே விழுமாறு போட்டுள்ளார். திருப்புகழ் சுவாமிகள், ஆண்டு தோறும் ஜனவரி ஒன்றாம் தேதி, பிரபலமானவர்கள், ஆங்கில துரைமார்களை சந்தித்து காணிக்கை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்த, பழக்கத்தை மாற்றி அமைத்தார். அன்று திருத்தணியிலும், வள்ளி மலையிலும், ஒவ்வொரு படிக்கும் திருப்புகழ் பாடியபடி ஏறும் திருப்படி விழாவினைத் தொடங்கி வைத்தார். 22.11.1950இல் முருகன் திருவடியினை அடைந்தார். அவரது பூத உடலை வள்ளி மலை, சமாதி நிலையத்தில் வைக்கப்பட்டது. வள்ளிமலையில் சித்திரை முதல் நாள் அன்று திருப்படித் திருவிழா நடை பெறுகின்றது. வேடுவர்பறி உற்சவத்தை வேடவர் குல தலைவர் நம்பிராஜன் வம்சத்தவர்கள் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். வள்ளிமலை, வனத்துறையினராலும், தொல்பொருள் துறையினராலும், இந்து சமய அறநிலையத் துறையினராலும் சீரும் சிறப்புமாகப் பராமரிக்கப்பட்டு வரப்படுகின்றது. வேலூரிலிருந்து பொன்னை செல்லும் பேருந்துகள் வள்ளி மலை அடிவாரம் வழியே செல்கின்றன.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply