திருப்புகழ் கதைகள்: பீமன் பெற்ற ஆயிரம் யானை பலம்!

ஆன்மிக கட்டுரைகள்
thiruppugazh stories - Dhinasari Tamil

திருப்புகழ்க் கதைகள் : பகுதி – 345
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

நெச்சுப் பிச்சி – திருவேங்கடம்
பீமன் பெற்ற ஆயிரம் யானை பலம்

     வாசுகியின் இரத்தினங்களைக் கொடுக்கலாம் என்ற வார்த்தைகளைக் கேட்ட ஆர்யகன், “ஓ பாம்புகளின் மன்னா! மாட்சிமை பொருந்திய நீரே அவனிடம் மனநிறைவு கொண்டிருக்கும்போது, அவனுக்குச் செல்வத்தின் தேவையில்லை. ரசகுண்டத்தின் (அமுத கலசங்களில் உள்ள) சாற்றை {ரசத்தைக்} குடித்து, அதன் மூலமாக அளவிலா பலத்தை அடைய அவனுக்கு அனுமதியளிப்பீராக. அந்தக் கலசங்கள் ஒவ்வொன்றிலும், ஆயிரம் யானைகளின் பலம் இருக்கிறது. இந்த இளவரசன் அவனால் முடிந்த மட்டும் அதைக் குடிக்கட்டும்” என்றான்.

     பாம்புகளின் மன்னனும் {வாசுகியும்} அதற்குத் தனது சம்மதத்தைத் தெரிவித்தான். அதன்பேரில் பாம்புகள் மங்கலச் சடங்குகளைச் செய்யத் தொடங்கின. பிறகு, மிகக்கவனமாகத் தன்னைத் தூய்மை செய்து கொண்ட பீமசேனன், கிழக்கை நோக்கி அமர்ந்து அமுதத்தைப் பருகத் தொடங்கினான். ஒரே மூச்சில் அவன், ஒரு முழு பாத்திரத்தின் உள்ளடக்கத்தையும் குடித்து, இதே வகையில், தான் நிறைவடையும் வரையில் அடுத்தடுத்து எட்டு பாத்திரங்களைக் காலி செய்தான். அதன் பிறகு, பாம்புகள் அவனுக்காக ஆயத்தம் செய்து வைத்திருந்த சிறந்த படுக்கையில் சுகமாகப் படுத்து உறங்கினான்.

     அமிர்தத்தை குடித்த பீமனுக்கு புது பலம் பெற்றது போல் இருந்தது. அதன் பின் பீமன், வாசுகியிடம் இருந்து விடை பெற்றான். நதியின் அடியில் இருந்து பீமன் கரையேறி அரண்மனையை சென்று அடைந்தான். பீமனை கண்ட அனைவரும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். பீமன் உயிருடன் திரும்பி வந்ததை பார்த்த துரியோதனன் அளவற்ற கோபம் அடைந்தான். சகுனி, மருமகனே! நீ கோபப்படாதே. இவனுடன் சேர்த்து மற்ற சகோதரர்களையும் கொல்வதற்கான வழியைப் பார்ப்போம் என்றான்.

     தனக்கு விஷம் கொடுத்து நதியில் தன்னை எறிந்த துரியோதனனை மிகவும் கோபங்கொண்டு பீமன் பார்த்தான். அதன் பின் அனைவரும் அவரவர் மாளிகைக்கு திரும்பி சென்றனர். பீமன், குந்தியிடமும், சகோதரர்களிடமும், நடந்தவற்றை விவரமாக கூறினான். யுதிஷ்டிரன், சகோதரர்களே! இனி நாம் கவனமுடன் செயல்பட வேண்டும். துரியோதனன் தான் இந்த செயலை செய்தான் என யாரும் வெளிக்காட்டிக் கொள்ள வேண்டாம். துரியோதனிடமும், நாம் எதையும் காட்டிக் கொள்ள வேண்டாம். அப்பொழுது தான் அவன் செய்யும் தவறு என்னவென்பது நமக்கு தெரியும்.

     அதன்பிறகு தான் துரியோதனனும், சகுனியும் பாண்டவர்களை அழிக்க நிறைய ஆலோசனை செய்கிறார்கள் என்பது யுயுட்சு மூலம் விதுரருக்கும், யுதிஷ்டிரனுக்கும் தெரியவந்தது. அதன் பிறகு பாண்டவர்கள் எல்லா செயல்களிலும் கவனமுடன் செயல்பட்டனர். இச்செய்தி திருதிராஷ்டிரனுக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவன் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை. திருதிராஷ்டிரன், குழந்தைகள் அனைவரும் விளையாட்டுதனமாக இருப்பதால், அவர்கள் அனைவரும் வில்வித்தை கற்க விரும்பினான். பீஷ்மர் வில்வித்தை கற்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

நரகரி

     இந்தியாவில் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அதில் தீபாவளி பண்டிகை மிக முக்கியமான ஒரு பண்டிகை. நரகாசுரனை கொன்ற நாளை நாம் தீபாவளி பண்டிகை கொண்டாடி வருகின்றோம். பூமா தேவியின் புதல்வன் நரகாசுரன். அவனின் தந்தை வராகன். இவன் பாணாசுரனுடன் சேர்ந்து மக்களை கொடுமைப்படுத்தி வந்தான். மிக சக்தி வாய்ந்தவனாக இருந்த நரகாசுரன் மண்ணுலகத்தை தாண்டி விண்ணுலகத்தையும் ஆள வேண்டும் என ஆசை கொண்டான்.

     இதற்காக அரசவை கூட்டி தன் முடிவை தெரிவித்தார். ஆனால் அவரது அமைச்சர் ஒருவர், தேவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். அவர்களை வெல்வது சாதாரண விஷயம் அல்ல. அதனால் நீங்களும் சாகா வரம் பெற வேண்டும். அதன் பின்னர் மூன்று உலகத்தையும் நீங்கள் எளிதாக கைப்பற்றலாம் என கூறினார். சாகா வரம் வேண்டி கடும் தவம் மேற்கொண்டான் நரகாசுரன். அவன் முன் தோன்றிய பிரம்ம தேவனிடம் சாகா வரம் தரும் படி கேட்டான். ஆனால் பிறந்த ஒருவன் இறந்தே ஆக வேண்டும். அதனால் வேறு ஏதேனும் ஒரு வரம் கேட்க சொன்னார். இதையடுத்து, தன் தாயின் கையால் தான் இறக்க வேண்டும். எந்த ஒரு தாயும் தன் மகனை கொல்ல மாட்டாள் என்பது தான் அவனின் யோசனை. அந்த வரத்தை பிரம்மன் வழங்கினார்.

     இறவா வரம் பெற்றதாக எண்ணிய நரகாசுரன் மேலும் தன் கொடுமையை அதிகரித்தான். நரகாசுரன் தேவலோகத்திற்கு சென்று கைப்பற்றினான். தேவர்களையும் கைது செய்தான். அதோடு இந்திரனின் தாய் அதிதியின் காதணியையும் பறித்து சென்றனர் அசுரர்கள். அங்கிருந்து தப்பிச் என்ற இந்திரன், தங்களை காப்பாற்றுமாறு மகா விஷ்ணுவிடம் வேண்டினர். தற்போது கிருஷ்ண அவதாரம் நான் எடுத்துள்ளேன். அவரிடம் முறையிடுங்கள் அவர் உங்களுக்கு உதவுவார் என்றார்.

     கிருஷ்ணரிடம் உதவி கேட்ட இந்திரனிடம், நரகாசுரனை அழிப்பதாக உறுதி அளித்தார். அவனுடன் போரிடச் செல்வதாக கூறிய கிருஷ்ணரிடம், தானும் வருவதாக அவரது மனைவியான சத்திய பாமா கூறினார். நரகாசுரனுடன் போரிட்ட கிருஷ்ணன், அவனது சேனைகளைத் துவம்சம் செய்தார். ஆனால் நரகாசுரனின் தாயான பூமாதேவி தான், இந்த அவதாரத்தில் சத்யபாமாவாக, கிருஷ்ணரின் மனைவியாக அவதரித்திருந்தார். அவர் திருக்கரத்தால்தான் நரகாசுரன் மடிவான் என்பதால் நரகாசுரனின் சேனையால் தான் காயமடைந்து மயக்கமானது போல் கிருஷ்ணன் நடித்தார். இதனால் மிகவும் கோபமடைந்த சத்யபாமா, நரகாசுரன் மீது அம்பு தொடுத்தாள்

     சத்யபாமாவின் அம்பு துளைக்க நரகாசுரன் மண்ணில் சாய்ந்து உயிரை துறந்தான். அவன் சாகும் தருவாயில் தான் நரகாசுரனுக்கு பூமாதேவியின் அவதாரம் தான் சத்தியபாமா என்றும், நரகாசுரன் தான் அவனின் மகன் என்றும் சத்யபாமாவும் உணர்ந்தார். நரகாசுரனை வதம் செய்ததால் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மா நரகரி என அழைக்கப்படுகிறார்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply