கங்கா பிரவேசம்: திருவிசநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள்!

ஆன்மிக கட்டுரைகள்
sridhara aiyaval - Dhinasari Tamil

நங்கநல்லூர் ஜே.கே. சிவன்

ஒவ்வொரு வருஷமும் கார்த்திகை அமாவாசை வரும். அது விசேஷம் இல்லை. ஆனால் தமிழகத்தில் கும்பகோணம் அருகே ஒரு சின்ன கிராமத்தில் ஒரு அதிசயம் நிகழ்கிறது. அது தான் உலக பிரசித்தம்.

அந்த கிராமம் திருவிசநல்லூர், (இப்போது திருவிசலூர்) இரு நூறு வருஷங்களுக்கு முன்பு ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள் என்ற சிவபக்தர் வாழ்ந்த வீடு அது. அவர் வீட்டு பின்புறம் உள்ள ஒரு சின்ன கிணற்றில் கங்கா ஜலம் கார்த்திகை அமாவாசை அன்று பொங்கி எழுந்தது மட்டும் அல்ல அன்று முதல் ஒவ்வொரு வருஷ முமே மேலே சொன்னது போல் கிணறு பொங்கி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கங்கா ஸ்னானம் செய்து ஐயாவாள் ஆசி பெறுகிறார்கள். அது தான் அதிசயம். இதை பொய்யென்று மறுப்பவரோடு எனக்கு எந்த வாதமும் கிடையாது. ஆமாம் என்று ஒப்புக் கொண்டு கையுயர்த்தும் ஆயிரக் கணக் கானோர்களில் நானும் கை தூக்குபவன்.

சின்ன கிராம கிணற்றில் கங்கை புகுந்து பொங்குவதை உண்மையென்று நம்பி தானே அந்த ஒரு நாள் மட்டும் அமைதியான அந்த கிராமம் புத்துயிர் பெற்று அநேக கார்கள், பஸ்கள், வாகனங்கள், எங்கெங்கோ இருந்தெல்லாம் மனிதர்கள் கூட்டம் ஆயிரத்தில், அங்கே கூடுகிறது. விடியற்காலை மூன்று மணிக்கே அருகே காவிரிக்கரையில் ஆயிரக் கணக்கானவரோடு ஸ்நானம் செய்து ஈரத்துணியோடு வரிசையில் நின்றேன்.

அந்த விடிகாலை நேரத்திலும் எனக்கு முன்னே பல நூறு பேர். பின்னே இன்னும் எத்தனையோ பக்தர்கள். எல்லோரும் சொட்ட சொட்ட ஈரத்தோடு. குளிரில் உடம்பு நடுங்க மெதுவாக வரிசை முன்னேறி ஒரு மணி நேரத்தில் திருவிச நல்லூர்ஐயாவாள் அதிஷ்டான கிணற்றங்கரைக்கு நகர்ந்து சென்றோம். மூன்று நான்குபேர் அந்த சின்ன கிணற்றின் மேல் நின்று வாளியில் நீர் மொண்டு ஒவ்வொரு தலையிலும் அரை வாளி கங்கா ஜலம் ஸ்னானம் செய்வித்தார்கள். அப்புறம் ஜருகண்டி. கிணற்றில் ஜலம் .கிட்டத்தட்ட விளிம்பு வரை பெருகிக் கொண்டே இருக்கிறது.

sridhara aiyaval1 - Dhinasari Tamil

வரிசையாக கங்கா ஸ்நானம் செய்து விட்டு தலையைத் துவட்டினை கையோடு யாரோ ஒரு மஹானுபவன் சூடான காப்பி எல்லோருக்கும் விநியோகம் செய்தார். அன்று எப்படி ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஸ்னானம் செய்ய கிணறு பொங்கி வழிந்தது? விடை இன்னும் தெரியவில்லை.

யாரோ ஒரு கெட்டிக்காரர், காவிரி ஆற்றில் அன்று அதிகம் தண்ணீர் திறந்து விட்டதால் ஏதோ குழாய் வழியாக கிணற்றுக்கு பாய்ச்சி இருப்பார்கள் என்றார். ஆனால் வருஷங் களாக உள்ள ஒரு நம்பிக்கையை இழக்க நான் மட்டுமல்ல பலபேர் இதற்கு தயாரில்லை.

சின்ன ஊர். சாப்பாடு வசதிகள் அந்த ஒருநாள் கூட்டத்துக்காக ஏற்பாடு செய்ய முடியாது. ஆனால் அந்த ஊர்க்காரர்கள் செய்தார்கள். ஊருக்குள் வரும்போது பருப்பு, தயிர், அரிசி, மிளகாய், எண்ணெய் , நெய் என்று சாமான்கள் நிறைய வாங்கி கொண்டுவந்து கொடுத்தோம். எங்களுக்கு மட்டும் அல்ல, இன்னும் வருவோர்களுக்கும் அந்த க்ரஹஸ்தர்கள் நல்ல சூடான உணவு அளித்தார்கள். இது தான் நமது பாரம் பரியம். ஹோட்டல் இல்லாத அந்த மாதிரி கிராமத்தில் இப்படி கைங்கரியம் வருஷா வருஷம் நிறைய வீடுகளில் செய்கி றார்கள். இந்த ஒருநாள் அதிசயம் காண வருகிறார்களே, அதன் பின்னணியை சொல்கிறேன்.

லிங்கராயர் என்கிற மைசூர் சமஸ்தான பிராமண வித்வானுக்கு ஸ்ரீதர வெங்கடேசன் ஒரே பிள்ளை. சிவ பக்தன்.நன்றாக வேத சாஸ்திரம் .கற்று தேர்ந்தான் . அப்பா காலமான பிறகு பிள்ளைக்கு அதே சமஸ்தானம உத்யோகம் தந்தபோது ஸ்ரீதரன் வேண்டாமென்று உதறிவிட்டான். மனம் உஞ்சவிருத்தியில் சிவனை ஆராதனை செய்வதில், நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபட்டது. மனைவி அம்மா ஆகியோருடன் க்ஷேத்ராடனம் சென்றார்.

திருச்சியில் நாயகர் வம்சம் ஆண்ட காலம். சைவ வைஷ்ணவ பேதம் அதிகம் இருந்த நேரம். அங்கே ஒரு ஊரில் இவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு பிராமணனின் பிள்ளை திடீரென்று நோய்வாய்ப்பட்டு நினைவற்று மிக மோசமான நிலையில் இருந்தான். விஷயமறிந்த ஸ்ரீதர வெங்கடேசன் அந்த வீட்டுக்கு சென்று சிவனை வேண்டி தியானித்து ஜபம் செய்த மந்த்ர . தீர்த்தத்தை ஒரு உத்ரணி கொடுத்ததும் அந்த பையன் எழுந்து பழையபடி நடமாடினான். இந்த சேதி எங்கும் பரவியது. இனி ஸ்ரீதர வெங்கடேசனை நாமும் உலகமறிந்த பெயரான திருவிசநல்லூர் ஐயாவாள் என்போம்.

அந்த ஊர் அரசன் முதல் ஜனங்கள் வரை ஐயாவாள் அங்கேயே இருக்கவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஆனால் அவர் தஞ்சை ஜில்லாவுக்கு நடந்து சென்று விட்டார். அப்போது தஞ்ஜாவூர் ராஜா ஷாஹாஜி என்ற மராட்டிய மன்னர். ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாளைப் பற்றி கேள்விப்பட்டு அழைத்து கௌரவித்தார். அங்கிருந்து ஐயாவாள் சொந்த ஊரான திருவிசநல்லூருக்கு வந்துவிட்டார். நிறைய ஸ்லோகங்கள், வியாக்கி யானங்கள் எழுதினார் .பதமணி மஞ்சரி, பகவன் நாம பூஷணம், தயா சதகம், ஸ்துதி பத்ததி, சிவபக்தி கல்பலதா. சிவ பக்த லக்ஷணம், அச்சுதாஷ் டகம், முதலிய நூல்கள் இயற்றினார்.

நாம சங்கீர்த்தன ஜாம்பவான் பகவன் நாம போதேந்திர ஸ்வாமிகள் ஐயாவாளின் சமகாலத்தவர். பல க்ஷேத்ரங்கள் சென்று பகவன் நாம சங்கீர்த்தனம் செய்த போதேந்திர ஸ்வாமிகள் திருவிடை மருதூர் வந்தபோது திருவிசநல்லூர் வந்தவர் ஐயவாளுடன் சம்பாஷித்து மகிழ்ந்தார்.

திருவிசநல்லூருக்கும் திருவிடைமருதுருக்குமிடையியே காவிரி ஆறு. ஒவ்வொரு நாளும் ஐயாவாள் ஆற்றைக்கடந்து அக்கரையில் மகாலிங்கத்தை தரிசிக்காமால் போஜனம் செய்வது கிடையாது.

ஒரு நாள் மகாலிங்க தரிசனம் செய்யமுடியாதபடி காவேரியில் பெரு வெள்ளம். கோபுரதரிசனம் மட்டும் செய்ய முடிந்ததால் ”ஆர்த்தி ஹர ஸ்தோத்ரம் ” பாடினார். அன்று அவருக்கு மகாலிங்க தரிசனம் இல்லாததால் போஜனம் கிடையாதே . அதிசயமாக அங்கே திடீரென்று ஒரு சிவ பக்தர், ,அதுவும் திருவிடை மருதூர் மகாலிங்க ஆலய சிவாச்சாரியார் அங்கே வந்தார். ஐயாவாளை தெரிந்தவர்.

”இந்தாருங்கள் மகாலிங்க சுவாமி விபூதி ” என்று இடுப்பிலிருந்து ஒரு காகித பொட்டலம் கொடுத்தார்.அந்த அர்ச்சகர். வீட்டுக்குப் போகும் வழியில் தான் ஐயாவாளுக்கு திடீரென்று ஞானோதயம். ஆற்றில் தான் வெள்ளம் கரைபுரண்டு படகுகள் கூட இல்லையே. எப்படி அந்த சிவாச்சாரியார் ஆலயத்திலிருந்து ஆற்றைக் கடந்து இக்கரைக்கு வந்திருக்க முடியும்.? உடலிலோ விபூதியிலோ கொஞ்சமும் ஈரமே இல்லையே.

மறுநாள் வழக்கம்போல் வெள்ளம் வடிந்தபின் ஆற்றைக் கடந்து மகாலிங்க தரிசனம் செய்தபோது அதே சிவாச்சார்யரை அங்கே பார்த்தார். மனதில் இருந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள ஐயாவாள் அவரிடம் ”சிவாச்சாரியாரே, நேற்று நீங்கள் எப்படி ஆற்றைக் கடந்து வந்து எனக்கு விபூதி பிரசாதம் தந்தீர்கள்?.

” நானா, நேற்று வந்தேனா? நேற்று எங்குமே நான் போகவில்லையே. வீட்டிலேயே அல்லவோ இருந்தேன். ஆற்றை எப்படி கடக்க முடியும். நிச்சயம் நான் நேற்று கோவிலுக்கு போகவில்லை. உங்களையும் பார்க்கவில் லையே ” என்கிறார் சிவாச்சாரியார்.

”ஆஹா அந்த சிவாச்சாரியார் உருவில் வந்தது மஹாலிங்கமே” என ஐயாவாளுக்கு புரிந்தது. மனம் நெகிழ்ந்தது. ஆண்டவன் கருணை நெஞ்சை உலுக்கியது. நன்றிப் பெருக்கோடு அவர் ஐயாவாள் அப்போது ஸ்ரிஷ்டித்தது தான் ”தயாஷ்டகம்

” எனக்கு ரெண்டு வரம் தா. மகாதேவா ஒன்று உன்னை இடைவிடாமல் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அடுத்தது சிவா, உன் நாமம் என்நாவில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கவேண்டும்”

ஐயாவாளுக்கு ரொம்ப இரக்கமான, கருணை உள்ளம். தாராள மனசு. ஒருநாள் காவேரியில் ஸ்நானம் செய்து விட்டு ஸ்லோகம் சொல்லிக் கொண்டே வீட்டுக்கு நடந்து வந்தார். அன்று அவர் தகப்பனாருக்கு ஸ்ராத்தம். பிராமணர்கள், சாஸ்திரிகள் வரும் நேரம். ஸ்ரார்த்தம் எப்போதும் உச்சி காலத்துக்கு மேல் தான் என்பதால் அவர் மனைவி ஒவ்வொன்றாக எல்லா பக்ஷணங்கள், சமையல் அயிட்டங்கள் எல்லாம் விறகு அடுப்பில் செய்து வைத்து விட்டாள். ச்ராத்தம் செய்துவைக்கும் பிராமண வைதீகர்கள் காவிரியில் ஸ்நானம் செய்து விட்டும் வரும் நேரம்.

அந்த நேரம் பார்த்து அவர் வீட்டு வாசலில் ஒரு பரம ஏழை . தாழ்ந்த குலத்தவன் பசி மயக்கத்தில் விழுந்து கிடந்தான். அவர் மனதில் பெருகிய கருணை, இரக்கம், உடனே உள்ளே சென்று ஸ்ராத்தத்துக்கு மடியாக தயார் பண்ணிய உணவை எடுத்து வந்து அவனிடம் கொடுத்து ”முதலில் நீ சாப்பிடு ” என்று தந்தார். அவர் தான் எல்லோரிலும் மஹா தேவனைப் பார்ப்பவர் ஆயிற்றே.

அவர் மனைவி மீண்டும் ஸ்நானம் செய்துவிட்டு மறுபடி புதிதாக ஸ்ரார்த்த சமையல் சமைக்க ஆரம்பித் தாள். மடி சமையல் தான் பங்கப் பட்டுவிட்டதே. அதை கொண்டு போய் கொட்டினாள் . சற்று நேரத்திற் கெல்லாம் காவேரி ஸ்நானம் பண்ணிவிட்டு பிராமணர்கள் ஸ்ராத்த விதிப்படி ஹோமம் செய்ய வந்துவிட்டார்கள். தங்களுக்கு தயாரிக்க பட்ட உணவை ஒரு தாழ்ந்த குலத்தவன் ஏற்கனவே உண்டு விட்டான் என்று அறிந்ததும். மிக்க கோபம் கொண்டார்கள். உலகமே முழுகிப் போய் விட்டதாக கூச்சல் போட்டு ஊரைக் கூட்டி விட்டார்கள். அந்த காலத்தில் இந்த மாதிரி ஜாதி பேதங்கள் புழக்கத்தில இருந்ததால் ஸ்ரார்த்த அன்னத்தை மற்றவர்கள் முதலில் சாப்பிடுவது ஒரு மன்னிக்கமுடியாத குற்றமாக கருதப்பட்டு ஸ்ராத்தம் நின்றுவிட்டது. ஊர் கட்டுப்பாட்டில் ஐயாவாள் குடும்பம் ஒதுக்கி வைக்கப்பட்டது . ஜாதி பிரஷ்டம் பண்ணவில்லை அது தான் குறை. அவர் செய்த குற்றத்துக்கு பிராயச் சித்தம் அவர் குடும்பத்தோடு கங்கையில் குளித்து விட்டு பாபத்தை போக்கிக் கொள்ள வேண்டும் என்று கட்டளை.

பிராமணர்கள் யாரும் ஸ்ராத்தம் நடத்த மறுத்ததால் அவர் சிவனை வேண்டி கண்ணீர் விட்டார். அதிசய மாக அப்போது யாரோ மூன்று அயலூர் பிராமணர்கள் ஐயாவாள் தர்மிஷ்டர், பரோபகாரி, ஒரு ஏழைக்கு பசிப்பிணியிலிருந்து உயிர்காத்தவர் என்று அறிந்து ஊர் கட்டுப்பாட்டையும் தெரிந்து கொண்டு வாசலில் காத்திருந்தார்கள். ஒருவேளை ப்ரம்மா விஷ்ணு மஹேஸ்வரர்களோ!. ஐயாவாள் பாபம் தொலைய கங்கையில் ஸ்னானம் செய்தால் தான் மீண்டும் ஊரில் உள்ளவர்கள் அவரை சேர்த்துக் கொள்வார்கள்.

தெற்கே திருவிநல்லூர் எங்கே, வடக்கே கங்கை எங்கே! கண்ணை மூடி சிவனை ஐயாவாள் பிரார்த்தித்தார். கடகட வென்று கங்காஷ்டகம் ஸ்லோகம் வந்தது. அதே வேகத்தோடு வீட்டின் புழக்கடை பின்னால் இருந்த சிறிய கிணற்றிலும் கங்கா பிரவாகம் நிரம்பி வழிந்து வீடு பூரா வந்து அலம்பிவிட்டது. விஷயமறிந்த பிராமணர்கள் அசந்து போனார்கள். எவ்வளவு பெரிய மஹான் ஐயாவாள். அவருக்கு அபவாதம் பண்ணினோம். அபசாரம் செய்தோம் என்று அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்கள். அப்பா ஸ்ரார்த்தமும் இனிது சாஸ்த்ரோக தமாக நடந்தது . அன்று தான் கார்த்திகை அமாவாசை.

இது நடந்தது பல நூறு வருஷங்களுக்கு முன். அப்புறம். மீண்டும் மேலே முதல் பாராவிலிருந்து படிக்க ஆரம்பிக்கலாம். .

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply