பகவத் கீதை: எது ஆனந்தம்? – ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள்

ஆன்மிக கட்டுரைகள்
sri sri krishnapremi anna - Dhinasari Tamil

எழுத்து வடிவம் :- வேதா கோபாலன்

நம் வேதங்களும் சாஸ்திரங்களுக் பரமாத்மா என்ற ஒன்று உண்டு என்பதை நமக்கு விவரிக்கின்றன. அந்தப் பரமாத்மாவை நாம் இந்த வேத சா;ஸ்திரங்கள்  மூலம்தான் அறிந்துகொள்ளவும் அடையவும் முடியும். புஷ்பங்களோ பழங்களோ இருந்தால் அவற்றைக்கண்ணால் பார்த்துத் தெரிந்துகொள்கிறோம்.

தெரியாததைச் சொல்வதற்குத்தான் சாஸ்திரங்களும் வேதங்களும் அவசியமே தவிர தெரிந்ததைச் சொல்வதற்காக அல்ல. அதிலும் தெரியாத விஷயமானாலும் பிரயோஜனமற்ற விஷ்யங்களைச்சொல்வதில் அர்த்தமில்லை. அதைத் தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறோம்! தெரிந்த விஷயமாக இருக்கட்டும் .. தெரியாத விஷயமாக இருக்கட்டும். நிச்சயம் பிரயோஜனம் இருக்கவேண்டும். எதுவானாலும் லட்சியம் பிரயோஜனம்.

பிறந்த குழந்தைகூட குவாங் குவாங் என்று கத்துகிறது. எத்தனையோ ஜென்மாக்கள் எடுத்துவிட்டது. இன்னும் எத்தனையோ ஜென்மாக்கள் எடுக்கப்போகிறது. குழந்தை பிறந்தவுடனேயே எங்கே எங்கே என்றுதான் கத்துகிறது. எந்தப்பலனை அடைந்தால் குழந்தை குவாங் குவாங் என்று கத்தவேண்டிய அவசியம் இல்லையோ அந்தப்பலனை அடையும் வரை குழந்தை கத்திக்கொண்டுதான் இருக்கும். எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பிறந்து பிறந்து குவாங் குவாங் என்று அது கத்தும். “அது எங்கே அது எங்கே” என்று கேட்பதாக அந்தக் கத்தல் அமைந்துள்ளது.

அவன் சாகிறவரையில் கத்தலோடேயேதான் இருக்கப்போகிறான். எந்தக்குழப்பம் அவன் மனசில் இருக்கிறதோ அதோடேயேதான் அடுத்தபிறவிக்கும் போகிறான். இவன் அடுத்த பிறாவியில் திருப்தியாப்பிறந்து ஒரு வேளை கத்தாமல் இருந்தால் பார்ப்பவர்களுக்குக் கலவரம் வந்துவிடும். கவலை வரும். அதன்மீது தண்ணீரைத் தெளித்தாவது கத்த விடுவார்கள். குவா.. என்றால் எங்கே எங்கே என்று அர்த்தம். எது எங்கே என்று கேட்கிறது என்றால்.. பிர்யோஜனம்.. பலன் .. எங்கே என்று கேட்கிறது! இந்தக்கத்தல் எல்லாருக்கும் இருக்கிறது. முதலில் ஒரு லட்சியத்துக்காகக கத்தியவன் கடைசியில் இன்னொரு லட்சியத்துக்காக குவாங் குவாங் என்று கத்துகிறான்.

     அப்படியானால் என்றைக்கு இவனுடைய கத்தல் நிற்கும்? எந்த ஒரு பிரயோஜனத்தை அடைந்துவிட்டால் அதைவிட மேலான இன்னொரு பிரயோஜனம் இல்லை என்ற நிலையை எட்டுகிறானோ அன்றைக்குத்தான் குவாங் குவாங் என்று கத்துவதை நிறுத்துவான். அது எப்போது நிகழும்? யாராலும் சொல்ல முடியாது.. கல்பகோடி ஆண்டுகள் ஆனாலும் ஆகலாம்.. கோடிக்கணக்கான வருஷங்கள் ஆனாலும் ஆகலாம். வாசனைகள் தொடரும் வரை இந்தக் கத்தலும் இந்தத் தேடலும் இருக்கும்.

     சரி! இந்தப்பிரயோஜனத்தைப்பற்றி இப்போது கொஞ்சம் பார்ப்போம். யாருமே துக்கம் தனக்குப்பிரயோஜனமாக வர வேண்டும் என்று நினைக்கவே மாட்டார்கள். சுகத்தைத்தான் உத்தேசிப்பார்கள். எனக்கு துக்கத்தைத்தா என்று யாரும் வேண்ட மாட்டார்கள். “அடேடே.. எனக்கு துக்கம் வேணுமே.. துக்கப்பட்டு ரொம்ப நாளாகிவிட்டதே..துக்கம் வந்தா தேவலையே.. துக்கம் வராதா… எனக்குக்கொஞ்சம் துக்கத்தைத் தாயேன்” என்று எவரும் வேண்டுவதில்லை. தேவை என்னும் சப்தமே சுகத்தை உத்தேசித்துத்தான் வரும். எல்லோருக்குமே சுகம் வேண்டும் என்ற எண்ணமே இருக்கிறது.

     “சுஹாய கர்மானி கரோதி லோகஹ”

ஒருவன் லௌகீகமான கர்மாக்களைச் செய்யட்டும்… சாஸ்த்ரீயமான கர்மாக்களைச் செய்யட்டும்… எந்தக் கர்மாக்களைச் செய்தாலும் “நன் சுகமாய் இருக்க வேணும்.. சுகத்தை அடைய வேணும்..  என்றைக்கும் எனக்கு சுகம் வேணும்” என்பதை மட்டுமே உத்தேசித்துச் செய்கிறான்.

     ஒரு குழந்தை படிக்கிதோ… உத்யோகம் பார்ப்பதோ, சம்பாதிப்பதோ.. கல்யாணம் பண்ணிக்கொள்வதோ.. குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதோ, ஏதோ ஒரு பிரயோஜனத்தை உத்தேசித்துத்தான் இருக்கும். எந்த இடத்திற்குப்போனாலும், ஒரு இடத்திலிருந்து வந்தாலும் எதுவுமே ஒரு பிரயோஜத்தை மனசில் கருதித்தான் இருக்கும். அந்தப்பிரயோஜனம் சுகத்தை ஒட்டித்தான் இருக்குமே தவிர துக்கத்தை உத்தேசித்து இருக்காது. ஆக எதுவுமே சுகத்துக்காகத்தான்.. சுகத்தை உத்தேசித்துத்தான் செய்கிறோம். சுகம்தான் பிரயோஜனம். சுகத்தில்தாம் லட்சியம் இருக்கிறது என்பது நிச்சயமாய்த் தெரியும்.

சரி. அந்த சுகம் கிடைத்துவிட்டது. சும்மா இருப்போமோ! பிறகு அதைவிடப் பெரிய சுகம் ஒன்றை மனம் நாடும். ஆக இந்த சுகம் என்றும் .. அந்த சுகம் என்றும்.. இதைவிட சுகம் என்றும் அதைவிட சுகம் என்றும் சுகங்களில் உள்ல வித்தியாசத்துக்காகவே, சுகத்துக்காகவே முயற்சிக்கிறான். அதை ஒட்டிய கர்மங்களையும் செய்கிறான்.

இவ்வாறு சுகத்திலேயே நாட்டம் போவதற்குக் காரணம் என்ன? ஆழ்ந்து யோசித்துப்பார்த்தால்.. இவனே சுகத்தில்லிருந்துதான வந்திருக்கிறான்! அதனால்தான் அங்கெ போக வேண்டும் என்று பார்க்கிறான். எங்கிருந்து வந்தோமோ அங்கே போக வேண்டுமென் நினைப்பதுதான் மனித இயல்பு. வந்திருப்பவன் அங்கிருந்து வந்ததால்தான் அங்கேயே போய்விட்டால் தேவலை என்று தோன்றியது. சுகமே உத்தேசம். ஆனால் அப்படிப் போக முடிகிறதா என்றால் அதுதான் முடியவிலை. தயங்கி நிற்கிறான். ஏன்? சந்தேகம். சம்சயம். என்ன சந்தேகம்? எது சுகம் என்று இன்னமும் அவனுக்கு நிர்ணயம் ஆகவில்லை!

ஏதோ சுகம் என்று ஒன்று இருக்கிறது என்று தெரிகிறது.. அங்கே போக வேண்டும் என்று தோன்றுகிறது.. ஆனால் அங்கே போக முடியவில்லை. அந்த சுகம் என்னவென்று நிச்சயித்துத் தேர்ந்தெடுக்க முடியவில்லை. தெரியவில்லை.

ஏன் தெரியவில்லை? இதுதான் சுகம் என்று வழிவகுத்துக் காட்டுவார் இல்லை.

ஆனந்தோ ப்ரஹ்மே திவ்ய ஜானாத்|
ஆனந்தாத் தேவ கல்விமானி பூதானி நிஜாயந்தே||
ஆனந்தே நஜாதானி நிஜீவந்தி |
ஆனந்தம் ப்ரயம் ஜவிஸம் விசந்தீதி|| – என்று ஆரம்பிக்கிறது உபநிஷத்.

பிரம்மஸ்வரூபத்தை இந்த உலகம் ஆரம்பித்ததிலிருந்து, பிரம்ம சரீரத்தைச்சொல்லி அந்த ஆனந்தஸ்வரூபத்தை ஜகத்ஜன்மாதி காரகமாக சொல்லிகிறது உபனிஷதம்.

எதிலிருந்து இந்த உலகம் உண்டாகிறதோ… எதில் இந்த உலகம் இருக்கிறதோ.. எதில் இந்த உலகம் அடங்குகிறதோ அதுதான் பிரம்மம். அது எதுவென்று கேட்டால்.. ஆனந்தத்திலேயிருந்து இந்த உலகம் உண்டாயிற்று.. ஆனந்தத்திலேதான் இந்த உலகம் நிற்கிறது.. ஆனந்தத்திலேதான் இந்த  உலகம் அடங்குகிறது என்கிறது உபநிஷதம். அதாவது உலகம் ஆனந்த மயமாகிறது.. அதுதான் பிரம்மம் என்பதைத் தெரிந்துகொள். இந்த பிரம்மத்தைத்தான் ஆனந்த ஸ்வரூபம் என்று சொல்கிறார்கள். இதைத்தான் பாஷ்யக்காரர்கள் நிர்ணயம் பண்ணியிருக்கிறார்கள்.

பிரம்மம் ஆனந்தஸ்வரூபமானது என்றால் ஆனந்தம்தான் பிரம்மம் என்றால்.. அந்த ஆனந்தம் அநுகூலமானதுதானே?

அனுபவிப்பவன் என்பவன் வேறு. அனுபவம் என்பது வேறு. சுகம் என்பது வேறு சுகப்படுபவன் என்பது வேறு. சுகத்துக்கான சாதனம் வேறு. இரண்டுக்கும் பேதம் இருக்கும்போது அதையே பிரம்மம் என்று எப்படிச் சொல்ல முடியும் என்ற கேள்வி எழும்.

பரிச்சயமான சுகத்தைக்காட்டி ஆனந்தத்துக்குப் போகிறோமே தவிர, சுகமே ஆனந்தம் என்று சொல்ல வரவைல்லை. சுகம் வேறு ஆனந்தம் வேறு. சுகம் என்பது இந்திரியங்களால் அனுபவிக்கப்படுவது. ஆனந்தம் என்பது ஸ்வரூப லட்சணம். இந்திரியங்களுக்கு போக்யமாக உள்ளவை சுகம் எனப்படும்.

சுகம் என்பதற்கு எதிரிடை துக்கம். எல்லாத்துக்குமே எதிரி உண்டு. லாபம் என்று சொன்னால் நஷ்டம் என்ற ஒன்று உண்டு. மானம் என்று சொன்னால் அவமானம் என்ற ஒன்று உண்டு. ஆரோகயம் என்றால் ரோகம்.. ஜீவனம் என்றால் மரணம் … இப்படி எல்லாவற்றிற்கும் எதிர்ச்சொல் உண்டே!

லாபம் வந்தால் பின்னோடு நஷ்டம் வரும். ஆரோக்யம் வந்தால் பிறகு ரோகம் வரும். ஜீவனம் வந்தால் மரணம் வரும். எல்லாமே தொடர்வது. முற்றுப்புள்ளி இல்லை.

சுகமாக ஆரம்பிக்கும் எல்லாமே துக்கத்தில்தான் முடியும்! ஆனால் ஆனந்தம் என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல் இல்லை!! முற்றுப்புள்ளி அங்கே வந்துவிடுகிறது. அதையே தேடுவோம்!!

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply