தைப்பூசம்: கந்தனுக்கு உகந்த சொந்தமானவராவோம்!

ஆன்மிக கட்டுரைகள்
murugan sashti pudukkottai - Dhinasari Tamil
  • கே.ஜி.ராமலிங்கம்

இன்று தைப்பூசம் முருகனுக்கு உகந்த நாள்,
அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை என்று போற்றப்பட்ட வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஜோதி யில் ஐக்கியமான நாள்.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேச வேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியா திருக்க வேண்டும் மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை மறவா திருக்க வேண்டும் மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வுனான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னை கந்தகோட்டத்துள் வளர்தலமோங்கு கந்த வேளே தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே……

எங்கேயோ, எப்போதோ படித்த வள்ளலாரின் வைரம் தோய்ந்த மறக்க முடியாத வரிகள்.

ஒரு சில கோவில்களில் தான் மூலவரும் உற்சவரும் ஒருங்கே அருள் பாலிக்கும் அற்புதமான நிகழ்வுகள் நிறைந்து காணப்படும்.

அந்த வகையில் அமைந்துள்ள திருத்தலங்களில் ஒன்றுதான் சென்னை கடற்கரை அருகே உள்ள கந்தகோட்டம் கந்தசாமி திருக்கோயில்.

வெளியே வண்டிகள், வாகனங்கள், பொருட்களை வாங்கி விற்பனை செய்து வரும் மொத்த சில்லறை வியாபாரிகள், அவர்களின் கூச்சல்கள், இறைச்சல்கள் இதன் நடுவே அமர்ந்து கொண்டு உங்களை நான் காத்தருள்புரிகிறேன் கவலை வேண்டாம் என்று அபயம் அளித்துவரும் ஆறுமுகன்.

உள்ளே சென்று மூலவர் தரிசனம் செய்த பிறகு அப்படியே தெப்பக்குளம் படிக்கட்டில் அமர்ந்து கோபுரத்தின் நிழலை நீரில் பார்த்து கொண்டு தியானித்தால் வெளியே உள்ள இறைச்சல்கள், ஒலிகள், சப்தங்கள் ஒன்றுமே காதில் விழாது. அது தான் அந்த கந்தசுவாமி தெய்வத்தின் அருள்.

கந்தகோட்டத்து முருகன் கோயிலுக்கு உற்சவ விக்ரகம் உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்து சிற்ப சாஸ்திர வல்லுனரிடம் உற்சவ முருகனாக பஞ்சலோகத்தில் விக்ரகம் ஒன்றை வார்த்து தரும்படி கோவில் நிர்வாகம் ஒப்படைக்க,அவரும் புடம்போட்டு எடுத்த பின் வார்ப்படத்தை பிரித்து பார்த்த பொழுது, விக்ரகம் மினு மினு வென ஜொலிப்புடன் இருந்த போது,
வார்ப்படத்திலிருந்த பிரித்தெடுத்த பகுதிகள் பூராவும் முட்கள்போன்றவாறு இருக்கவும், கோயில் நிர்வாகிகள் சிற்பசாஸ்திர முதன்மையாளரிடம் சிற்பம் நன்றாக வந்திருக்கிறது. ஆனால் வெளியில் முட்கள் போன்று காணப்படுகின்றவற்றை நீக்கினால் சிற்பம் இன்னும் அழகாக இருக்கும் அல்லவா என்று .

தலைமை சிற்பியும் வெளியே நீட்டிக் கொண்டு இருக்கும் பிசிறுகளை எல்லாம் சுத்தப்படுத்துகிறேன் என்று சொல்லி அதற்குண்டான உளியுடன் விக்ரகத்தை தொட்ட அந்த ஷண நேரத்தில் அவர் மின்சாரம் தாக்கியதைப் போல தூரப்போய் விழுந்தார்.

அவர் அருகில் உள்ளவர்கள் அவரை தூக்கி ஆசுவாசப்படுத்தி என்ன ஆச்சு ஐயா என்று கேட்கவே, என் தேகம்
எல்லாம் மின்சாரம் பாய்ந்தது போலிருக்கிறது, எனக்கு ஒரே பதட்டமாக இருக்கிறது என வாய் குழறி குழறிக் கூறினார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு தெளிந்து எழுந்த சிற்பி கண்களில் மிரட்சியோடு ஆலயப் பக்தர்களை நோக்கி கைகளைக் கூப்பி இந்த விக்ரகம் நீறு பூத்த அனலாக இருக்கிறது. என்னால் இதற்கு மேல் இதை ஒன்றும் செய்ய இயலாது என்று கூறிச் சென்றார்.

பிசிறுகளுடன் இருக்கும் உற்சவ விக்ரகத்தை தொடப்பயந்த கோவில் அதிகாரிகள் அந்த விக்ரகத்தை வழிபாட்டுக்கு எடுத்துக் கொள்ளாமல் ஒரு அறையில் பாதுகாப்பாக வைத்து பூட்டி விட்டனர்.

இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.
ஒருநாள் காசியில் இருந்து சாம்பையர் என்ற துறவி கந்தகோட்டத்து முருகனைத் தரிசிக்க வந்தார். மூலவரைத் தரிசித்த அவர் ஆர்வத்தோடு இந்த கோவிலில் உற்சவர் இல்லையா? என வினவவும், அங்குள்ள சிவாச்சாரியார் விக்ரகம் வார்ப்பெடுத்து உருவான விபரங்கள் அனைத்தையும் சாம்பையரிடம் கூறி ஆலய நிர்வாகிகளிடம் அழைத்துச் சென்றார்.

சாம்பையருடைய தோற்றத்தையும் கோலத்தையும் கண்ட கோவில் நிர்வாகிகள் உற்சவர் இருந்த அறையைத் திறந்து விட்டனர். அங்கு உள்ளே நுழைந்தவர் சில நிமிடத்தில் வெளியே வந்தார்.

அங்கு கூடியிருந்த அனைவரையும் பார்த்த அவர் நீங்கள் அனைவரும் பாக்கியசாலிகள் இக்கோயிலில் உள்ள மூலவருக்கு எவ்வளவு சக்தி இருக்கிறதோ அதே சக்தி இந்த உற்சவ மூர்த்தத்திலும் பொதிந்திருக்கிறது என்றும், விக்ரகம் இவ்வாறு அமைவது வெகு அபூர்வமானது. தன்னை வழிபடும் அடியார்களுக்கு மூலவரைப்போல் இந்த உற்சவரும் அளவிலா அருட்செல்வத்தை வழங்குவார், மேலும் இவரைப் பார்த்து வணக்கம் தியானம் ஆராதணை செய்யலாமே தவிர இவர் திருமேனியில் எந்த விதமான கருவிகளும் படக்கூடாது என்று கூறிய பின்னர், இந்த உற்சவரை என் ஆத்ம சக்தியால் நானே தூய்மை செய்து தருகிறேன் என்றார்.

ஒரு தனியறையில் உற்சவ விக்ரகம் வைக்கப்பட்டு திரை போட்டு மறைக்கப்பட்டது. வெளியே நாதஸ்வரம் வாசிக்க, வடிவேலனின் முன் அமர்ந்து வேத மந்திரங்களைச் சொல்லி ஆத்ம சக்தியால் உற்சவரின் திருமேனி மீது இருந்த பிசிறுகளை நீக்கி வெளியே வந்தார். முருகனின் முகத்தை மட்டும் சரி செய்ய இயலாது, எல்லோரும் இனிமேல் தாராளமாக வழிபடலாம். இப்போதும் கந்தகோட்டத்தில் இருக்கும் உற்சவரை கண்டு தரிசனம் செய்யலாம்.

வள்ளலாருக்கும் வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கும் பாம்பன் சுவாமிகளுக்கும் அருள் புரிந்த கந்தக் கோட்ட கந்தசுவாமி நமக்கும் அருள்வார்.

நம்பினார் கெடுவதில்லை….

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply