சம்ப்ரோக்ஷணத்துக்குப் பின்… திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலை ‘அம்போ’வென கைவிட்ட அறநிலையத்துறை!

ஆன்மிக கட்டுரைகள்
thiruvattaru temple - Dhinasari Tamil

எம்.எஸ்.அபிஷேக்

  • ஜெனரேட்டர் பொருத்தப்படவில்லை;
  • நாதஸ்வரம், மேளம் இல்லை.
  • ஓவியங்கள் புதுப்பிக்கப்படவில்லை.
  • பாழடைந்த கல்மண்டபம்
  • கும்பாபிஷேகத்துக்குப் பின்னர் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலை அம்போவென கைவிட்ட அறநிலையத்துறை!

திருவட்டார், மார்ச்.11: திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஏழு மாதங்களுக்கு மேலாகியும் கோவிலில் போதிய பூஜாரிகள் இல்லை, நாதஸ்வரம் மேளம் இல்லை, ஜெனரேட்டர் பொருத்தப்படவில்லை. மியூரல் ஓவியங்கள் முழுமையாகாமல் அலங்கோலமாக காட்சி தருகின்றது. கல்மண்டடம் பாழடைந்து விழும் நிலையில் உள்ளது. . இவற்றை சரி செய்ய அறநிலையத்துறை முன்வரவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறப்படும் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில் 108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றானது, நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பட்ட திருத்தலம் என்ற சிறப்பைப் பெற்றது ஆகும்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6.ந்தேதி, 418 ஆண்டுகளுக்குப் பின்னர் சீரும் சிறப்புமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த பினன்ர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சனி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.

ஆனால் கோவிலில் போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்றால் இ ல்லை என்ற பதில்தான் கிடைக்கிறது.

thiruvattaaru temple - Dhinasari Tamil

செயல்படாத ஜெனரேட்டர்

கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தபோது கோவில் பிரகாரம் மற்றும் வெளிப்புறத்தில் புதியதாக ரூ. 17 லட்சம் செலவில் விளக்குகள் பொருத்தப்பட்டது. இந்த விளக்குகள் பொருத்தப்படும் போது ஜெனரேட்டரும் அமைக்கவேண்டும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது. ஆனால் இன்று வரை ஜெனரேட்டர் நிறுவப்படவில்லை. இதனால் திடீரென மின்சாரம் தடைபடும்போது, யுபிஎஸ் மூலமாக எரியும் சில விளக்குகள் தவிர கோவில் பகுதி இருட்டாக மாறி விடுகிறது.

விசாரித்தபோது கோவிலில் வேலை பார்த்த எலக்ட்ரிக்கல் ஒப்பந்ததாரருக்கு ஏற்கனவே செய்த வேலைக்குரிய பணம் முழுமையாக வழங்கப்படவில்லை. அதனால் அவர் ஜெனரேட்டரை இயக்க கால தாமதப்படுத்துகிறார் என தெரியவந்தது. எனவே விரைவில் ஜெனரேட்டரை நிறுவ ஏற்பாடு செய்யவேண்டும்.

கோவிலில் வேலை பார்த்த நாதஸ்வரக்கலைஞர், தவில் கலைஞர் ஆகியோர் ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகிறது. அதன் பின்னர் கோவிலில் பூஜைகளும், மாலை நேர தீபாராதனைகளும் இசையின்றியே நடக்கிறது. பழம் பெருமை வாய்ந்த இந்த கோவிலில் திருவிழாக்களின் போது மட்டும் வெளியூர் கோவிலில் இருந்து தற்காலிகமாக இசைக்கலைஞர்களை அழைத்து தவில், நாதஸ்வரம் வாசிப்பார்கள்.

தற்போது கோவிலில் பூஜைகளின் போது தவில், நாதஸ்வரம் இசைக்கப்படாதது பக்தர்களை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. எனவே தவில், நாதஸ்வரக்கலைஞர்கள் நியமிக்கப்பட வேண்டும். 25க்கும்மேற்பட்ட பூஜாரிகள் வேலை பார்த்த திருவட்டார் கோவிலில் இன்று வெறும் 5 பூஜாரிகள் மட்டுமே வேலையில் உள்ளனர். இதனால் பக்தர்கள் வெகுநேரம் கோவிலில் வழிபாட்டுக்காக காத்து நிற்க வேண்டியுள்ளது. எனவே கூடுதல் பூஜாரிகள் நியமிக்க வேண்டும்.

thiruvattaaru temple2 - Dhinasari Tamil

மியூரல் ஓவியங்கள் முழுமை பெறுமா?

கோவிலின் கருவறையைச்சுற்றி மியூரல் ஓவியங்கள் சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என கூறப்பட்டது. அதன்படி கேரளாவில் இருந்து ஓவியர்கள் வரவழைக்கப்பட்டு ஓவியங்களை தீட்டினர். ஓவியங்களை தீட்டியவர்கள் அப்படியே அரைகுறையாக விட்டு விட்டு சென்றுள்ளனர்.

thiruvattaaru temple3 - Dhinasari Tamil

கிருஷ்ணன் ஓவியங்கள் மேல் பகுதியில் வரையப்பட்டுள்ளது. அதன் கீழ் பகுதியில் கால்கள் இல்லை. அதுபோல் பல்வேறுகடவுளர்களின் படங்கள் முழுமை பெறாமல் உள்ளது. மியூரல் ஓவியங்களின் சிறப்பே அந்த ஓவியங்களில் உள்ள கோடுகளின் துல்லிய பிரதிபலிப்பும், நிறங்களின் பளபளப்பும் ஆகும். ஆனால் இங்குள்ள ஓவியங்கள் மங்கலாகவே காணப்படுகிறது.

ஓவியம் முழுமை பெறாமல் இருந்தபோது அப்போது ஓவியப்பணிகளை மேற்கொண்ட மியூரல் ஓவியர் உண்ணியிடம் கேட்டபோது,அவர் கூறியதாவது,

”திருவட்டார் கோயிலில் மியூரல் ஓவியங்கள் புதியதாக வரையச்சொல்லவில்லை. புதிய ஓவியங்கள் எனில் நாங்கள் வெள்ளைச்சுவரில் மியூரல் ஓவியங்கள் வரைவோம் .அவை பளபளப்புடன் இருக்கும். ஆனால் இங்கு மியூரல் ஓவியங்களை வரைவதற்கு தொல்லியல் துறையில் இருந்து சில நிபந்தனைகள் விதித்து அதன்படி வரையச்சொன்னார்கள். முக்கியமானது, கோயிலின் பழமை பாதுகாக்கப்பட வேண்டும். எனவே இங்கு வரைந்திருக்கும் ஓவியங்களை பழைமை தன்மை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்பதே. அதன்படியே பழைய ஓவியங்கள் மீது அந்த ஓவியங்கள் பாதிக்காத வகையில் பச்சிலைச்சாறு கலந்த கலவை பயன்படுத்தி புதுப்பித்தோம். அதனால்தான் பளபளப்பு இன்றி ஓவியம் காணப்படுகிறது. ” என்றார்.

இது தொடர்பாக கும்பாபிஷேகத்தின் போது கோவிலுக்கு வந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜிடம் பேசியபோது, “கும்பாபிஷேகம் முடிந்ததும் ஓவியங்களின் முழுமையான வடிவம் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதன்படி ஓவியங்கள் முழுமையாக வரையப்படும்” என்றனர். ஆனால் இன்று வரை ஓவியங்கள் முழுமை பெறாமல் மோசமாக காட்சி தருகின்றன இந்த ஓவியங்கள் முழுமை பெறவேண்டும்.

thiruvattaaru temple4 - Dhinasari Tamil

ரோட்டில் ஆக்கிரமிப்பு

திருவட்டார் குளச்சல் ரோட்டில், தபால் நிலைய சந்திப்பில் இருந்து ஆதிகேசவப்பெருமாள் கோயிலுக்கு செல்லும் ரோடு வரையில் ரோட்டில் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் பெருமளவில் காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் பெருமளவில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி திருவட்டார் ஆதிகேசவபெருமாள் சேவா டிரஸ்ட் செயலாளர் தங்கப்பன் என்பவர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்ததோடு மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருந்தார். இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் இருந்து சம்பந்தப்பட்ட இடத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன்பாக அளவிடும் பணியை மேற்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்து.

அதன்படி கடந்த 2021.ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12.ம் தேதி அதிகாரிகள் அளவிட வருகைதந்தனர். சர்வேயேர் புது சர்வேபடி இடத்தை அளக்கவிருப்பதாக கூறவே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பழைய சர்வே எண்ணில் குறிப்பிட்ட அளவின் படியும், பழைய வரைபடத்தின்படியும் அளவீடு செய்யவேண்டும் என்றனர். இதையடுத்து ஒரு மாதத்திற்குள் பழைய சர்வே எண்ணின்படியுள்ள வரைபடம் பெற்று அளவீடு செய்யலாம் என உறுதியளித்த பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஆனால் ஒரு ஆண்டு கடந்த பின்னரும் அளவீடு பணிகள் நடக்க வில்லை. தற்போது கோவிலுக்கு வருகை தரும் பக்த்ர்கள் வாகனங்கள் குறுகிய சாலையின் காரணமாக மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் கிழக்கு நடையில் இருந்து ஆற்றுக்குச்செல்லும் பாதையில் கல்மண்டபம் உள்ளது. இந்த கல்மண்டபம் வழியாக பூஜாரிகள், பக்தர்கள் ஆற்றுக்கு இறங்கி நீராடி விட்டு கோவிலுக்கு வருவது வழக்கம். இந்த கல்மண்டபம் பராமரிப்பின்றி புதர்மண்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதை சரி செய்ய வேண்டும்.

ஆக கும்பாபிஷேகம் முடிந்ததோடு கோவில் குறித்து எந்தவித அக்கறையும் இன்றி அறநிலையத்துறை செயல்படுவதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.
பக்தர்களின் வருத்தத்தைப்போக்க அரசும், அறநிலையத்துறையும் முன்வர வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply