ஆன்மிக மலரால் நறுமணம் வீசச் செய்த சுவாமி சித்பவானந்தர்!

ஆன்மிக கட்டுரைகள்
swamy chidbhavananda - Dhinasari Tamil

தமிழகத்தில் நாத்திக நாற்றம் பரவிய நேரத்தில்..,ஆன்மீக மலரால் நறுமணம் வீச செய்த மகான் .#சுவாமிசித்பவானந்தர். கோடிக்கணக்கான பணமிருந்தும்..,பல லட்சம் மக்கள் தொடர்பிருந்தும் இந்து அமைப்புகளுக்கு உதவாத எண்ணற்ற மடங்கள் அன்றும் உண்டு இன்றும் உண்டு .

நாங்கள் தர்மம் காக்க பாடுபடும் அமைப்புகளுக்கு உதவுவோம் என அன்றும் இன்றும் தைரியமாக உதவும் மடங்களில் முக்கியமானது #சுவாமி சித்பவானந்தர் நிறுவிய இராமகிருஷ்ண தபோவனம் .

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகிலுள்ள செங்குட்டைபாளையத்தில் பெரியண்ணன்,நஞ்சம்மாள் தம்பதியர்க்கு மார்ச் 11,1898-ல் பிறந்த சுவாமியின் இயற்பெயர் சின்னு.அவரது கிராமத்தில் பள்ளியை நிறுவியவர் அவரது குடும்பத்தாரே. தொடக்கப்பள்ளி பொள்ளாச்சி கிராமப்பள்ளியில் படித்தார் அதன் பிறகு கோவை ஸ்டேன்ஸ் பள்ளியில் படித்தார் கல்லூரி படிப்பை சென்னை மாநிலக்கல்லூரியில் முடித்தார் .

மேற்ப்படிப்புக்காக இங்கிலாந்து செல்லும் நிலையில் சுவாமி விவேகானந்தரது “சென்னைச் சொற்பொழிவுகள்”என்ற நூலின் ஒரு கட்டுரையால் கவரப்பட்டு பயணத்தை நிறுத்தினார். சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்குச் சென்று ஸ்ரீமத் சுவாமி சிவானந்தர், ஸ்ரீமத் சுவாமி பிரேமானந்தர் ஆகியோரின் அறிமுகம் பெற்றார் .இளங்கலை படிப்பை முடித்ததும் அகிலானந்த சுவாமிகளுடன் புவனேஸ்வரம் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சென்று சுவாமி சிவானந்தரிடம் பிரம்மச்சரியத் தீட்சை பெற்றார்.

திரையம்பக சைதன்யர் என்ற பெயருடன் அங்கே இருந்தார். சுவாமி சிவானந்தரின் அனுமதி பெற்றுத் தென்னாட்டில் பயணம்செய்த சேரன்மகாதேவியில் தேச பக்தர் வ.வே.சு.ஐயரைச் சந்தித்தார்.1924 ஜுன் மாதம் சலவைத் தொழிலாளி ஒருவர் அளித்த நிலத்தில் சுவாமி சிவானந்தர் ஊட்டி ஆசிரமத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

திரையம்பக சைதன்யரின் குடும்பம் ஆசிரமம் அமைக்க உதவி செய்தனர்.1926 சூலை 25-இல் சுவாமி சிவானந்தர் இவருக்குச் சந்நியாச தீட்சை வழங்கி சுவாமி #சித்பவானந்தர் என்று பெயரிட்டார்.1930 முதல் 1940 வரை உதகை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்தார். அப்போது காந்தியடிகள், நாராயணகுரு ஆகியோர் அங்கே வருகை புரிந்தார்கள்.

சிவானந்தர் சமாதியடைந்த பின்னர் ராமகிருஷ்ண மடத்தில் இருந்து விலகிக் கைலாய யாத்திரை ஒன்றை மேற்கொண்டார் .தமிழகம் திரும்பிய சுவாமி #திருச்சி அருகே திருப்பராய்த்துறைக்குச் சென்ற சித்பவானந்தர் தாருகாவனேசுவரர் கோயிலில் 1940 ஆம் ஆண்டில் நடந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்றார்.திருப்பராய்த்துறையில் தங்க முடிவெடுத்தார்.

நூற்றுக்கால் மண்டபத்தில் ஆரம்பப் பள்ளி ஒன்றை ஆரம்பித்தார்.திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலில் வாரம் ஒருமுறை தாயுமானவர் பாடலுக்கு விளக்கம் அளித்தார்.1942-ல் திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தை நிறுவினார்.குருகுல முறையில் விவேகானந்த வித்யாவன நடுநிலைப் பள்ளி மற்றும் விவேகானந்த மாணவர் விடுதி ஆகியவற்றைத் தொடங்கினார்.

உள்ளூர் மாணவர்களுக்காகத் திருப்பராய்த்துறையில் நடுநிலைப் பள்ளி தொடங்கினார்.1951-ல் தர்ம சக்கரம் மாத இதழை ஆரம்பித்தார்.தொடர்ந்து பல கல்வி நிறுவனங்களை ஆரம்பித்தார்.சேலத்தில் சாரதா வித்யாலயாப் பெண்கள் பள்ளி, விவேகானந்த ஆசிரியர் கல்லூரி ஆகியவை ஆரம்பிக்கப்பட்டன.1964ல் மதுரை மாவட்டம் திருவேடகத்தில் ராமகிருஷ்ண ஆசிரமம் ஆரம்பிக்கப்பட்டது. கோவை மாவட்டம் சித்திரச் சாவடியில் இன்னொரு கிளை ஆரம்பிக்கப்பட்டது.

967 இல் தமிழகத்தில் பெண்களுக்கெனத் துறவுத் தொண்டு நிறுவனமாக சேலத்தில் சாரதா தேவி சமிதி தொடங்கப்பட்டது.1971-ல் திருவேடகத்தில் விவேகானந்த குருகுலக் கல்லூரி அமைக்கப்பட்டது.#சுவாமிசித்பவானந்தர் அவர்கள் 70 ஆயிரம் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார் .

நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தமிழ் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார் அதில் குறிப்பிடத்தக்கது பகவத்கீதை மற்றும் திருவாசகம் .#சுவாமிசித்பவானந்தர் அவர்கள் 1985-ல் இதே நாளில் ஜிவ சமாதி அடைந்தார் .சுவாமியின் வழியை பின்தொடர்வோம் ஆன்மீக நறுமணத்தை பரவ செய்வோம் .

  • கட்டுரை: எஸ்.வி .பழனிசாமி

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply